இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்
நர்மதா பதிப்பகம்: 10, நானா தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 616) ஒரு மொழி மிகச் சிறப்புடன் விளங்குவதற்கு அம்மொழியின் இலக்கணமே அடிப்படையாகும். இலக்கணத்தின் வாயிலாக ஒரு மொழியை ஒழுங்காக எழுத முடியும். ஒலி வடிவமே எழுத்தாகவும், எழுத்துக்களின் தொகுதியே சொல்லாகவும் ஆகின்றன.பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல் என்ற சொற்களின் நான்கு வகைகளையும், அதன் உட்பிரிவுகளாகிய திணை, பால், எண், இடம், காலம், வேற்றுமை போன்றவைகளையும் நன்கு அறிய இலக்கணப் படிப்பு வேண்டும். அவற்றை நன்கு விளக்கிக் கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். பொதுவாக, மொழிகள் காலப்போக்கில் அடிப்படை கூறுகளில் பெரும் மாற்றங்களை பெற்றுத் திகழ்வது இயல்பு. ஆனால், தமிழ் மொழியில் அடிப்படைக் கூறுகளில் மாற்றங்கள் மிக மிகக் குறைவு. தொல்காப்பியர் கூறிய இலக்கண விதிகள் இன்றும் பயன்படுகின்றன. இந்நூல் இன்றைய தமிழ் மக்களுக்கு ஏற்றார் போல் இலக்கண விதிகளை, மிகவும் இலகுவாகக் கூறி விளக்குகிறது. இந்நூலில் இலக்கண விதிகளுக்கு, தற்கால இலக்கியங்களில் உள்ள பாடல்களையும், திரைப்பட பாடல்களையும் சான்றாகக் கூறி விளக்குவதும், நூற்பாக்களை எழுதாமலேயே இயல்பாக இலக்கண மரபுகளைக் கூறுவதும் ஆசிரியரின் திறமையை காட்டுகின்றன. பள்ளி, கல்லூரி நூலகங்களில் இருக்க வேண்டிய அருமையான நூல்.