மாறிவரும் இந்தியா மகத்தான வாய்ப்பு
எதற்கெடுத்தாலும் இறக்குமதி... கையேந்தும் நிலை... என்ற பிழைப்பு வாத நிலைமையில் இருந்து மாறி, இந்திய தேசம் உலகத்துக்கே தலைமை வகிக்கும் நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்திய தேசத்தில் வாய்ப்புகள் கதவை தட்டுகின்றன. கொரோனா காலத்தில் உலகத்திற்கே மருந்து தந்து, உலக மருந்தகம் என்ற நற்பெயரை பெற்றுள்ளது. மாறி வரும் இந்தியாவில் மகத்தான வாய்ப்புகள் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டுகின்றன. இப்போது நம்மிடம் தேவை உற்சாகம் மட்டுமே. என்ன நடந்தாலும் சரி நிர்ணயித்த இலக்கை அடைந்தே தீருவதென முடிவெடுத்து விட்டால் போதும்; நாடு உச்சத்திற்கு போய்விடும் என்கிறது இந்த புத்தகம். ஒரு தொழிலை எந்தளவுக்கு நேசிக்க வேண்டும் என்பதை, ஒரு சிறிய உணவகத்தை உதாரணமாக கொண்டு குறிப்பிட்டுள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. படித்து பார்த்தால் தான் அதன் அருமை புரியும். உடல்நிலை சரியில்லை என்றுகூட, ஒரு தொழிலை, பணியை, செயலை ஒத்தி போடக்கூடாது என்று உற்சாகமூட்டுகிறது இந்த புத்தகம். பணியாளரை நிறுவனம் எப்படி நடத்த வேண்டும் என்று தொழிலதிபர்களுக்கு பாடம் கற்று தருகிறது. பணியாளர்கள் ஏன் பணியை விட்டு வெளியேறுகின்றனர் என்பதும் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. ‘உலகமெங்கும் இந்தியா இந்தியா... என்ற குரல் ஒலிக்க வேண்டும்’ என, இந்த புத்தகம் அக்கறை காட்டுகிறது. மந்தமாய் இருப்பவர்களையும் நிமிர வைத்து, அவர்களின் கழுத்திற்கும் மாலை வழி செய்கிறது. தேசத்தை நிமித்தி பார்க்க வேண்டும் என்ற உந்துதல் சக்தியை, இந்த புத்தகம் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. – தி.செல்லப்பா




