கடற்கோள் காலம்
கடல் சார்ந்து வாழும் மக்களின் பேரிடர் பாதிப்புகள் குறித்து பேசும் நுால். மரணமும், நிச்சயமற்ற தன்மையும் நிறைந்தது கடல் மீன்பிடி வாழ்வு. பேரிடர்களின் போது நிகழும் மரணம், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தையும் சீர்குலைக்கும். பேரிடர் துயரத்தை, பெண்களின் கண் வழியே பார்க்க முயன்றுள்ளது இந்த நுால். கணவனை பறிகொடுத்த பெண், மூன்று பெருஞ்சுவரை கடக்க வேண்டும். ஒன்று, துணையை இழப்பதால் ஏற்படும் உள பாதிப்பை எதிர்கொண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது; இரண்டு, மாற்று வழியை அடையாளம் கண்டு, களமிறங்குவது; மூன்று, குழந்தைகளின் படிப்பை தொய்வின்றி தொடர எடுக்கும் சிரமம். இவற்றுக்காக, போராடியே ஆக வேண்டும். ஒரு விதவையை நம்பி, வங்கியோ, தனியாரோ கடன் கொடுப்பது இல்லை. எனவே, சொந்தக் காலில் நிற்பது மிகப்பெரும் சவால். சுனாமி துவங்கி, அடுத்தடுத்த பேரிடர்களின் போது ஏற்பட்ட அவலங்களின் தொகுப்பு நுால். கடல் சார் மக்களின் கண்ணீர் காவியம்!– எஸ்.குரு