ஸ்ரீ ஞானானந்த விலாஸம்
சத்குரு ஞானானந்தர் பெரிய மகான். தமிழகத்தில் அவர் அருளால், ஞானவாழ்வைப் பெற்றோர் பலர்.இந்த நூலில் ஞானானந்தரின் தவ வாழ்வை வெளிப்படுத்தும், 60 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அதை ஆசிரியர் சிறப்பாக தொகுத்திருக்கிறார்.மனக் கறையை நீக்கும் மாமருந்தாக, அவர் வாழ்ந்ததை இக்கட்டுரைகள் தெளிவு படுத்துகின்றன.ஆத்ம தாகத்திற்கு அரிய விருந்து படைக்கும் கட்டுரைகளாக உள்ளன. ஆதி சங்கரரின் வழி வந்தவர் சுவாமிகள் என்பதை, ஆட்டையம்பட்டிக்கு விஜயம் செய்த போது, மாரியப்ப முதலியாரைச் சந்தித்து அங்கு ஒரு ஆஸ்ரமம் கட்ட, டிரஸ்ட் பத்திரத்தில் எழுதி, கையொப்பமிட்ட ஆவணம் சாட்சியாக இருப்பதை (பக்கம்.205) காணலாம். ஞானானந்த மடத்தில், திருவடி பூஜையும், அன்னதானமும் சிறப்பானது என்று பொன் பரமகுரு, தன் கட்டுரையில் கூறுகிறார்.கர்நாடகத்தில் பிறந்து, காஷ்மீரில் துறவறம் பூண்டு, தமிழில் அதிக பற்றுடன் தாயுமானவர், வள்ளலார், திருமூலரை, அவர்களது நுண்ணிய அனுபவங்களை விளக்கிய, சுவாமிகளின் கருத்தை விளக்கும் கட்டுரைகள் படிப்பதற்கு சுவையானவை.கடந்த, 1964ல், சங்கர ஜயந்தி அன்று ஆன்மிக உணர்வு பொங்க, ஞானானந்த சுவாமிகள், தானே வழிபட வைத்திருக்கும், சங்கரரின் பாதுகையை, அவர் தன் தலைமீது வைத்துக் கொண்டதை, சுவாமி முகுந்தானந்த சரஸ்வதி குறிப்பிட்டிருப்பது, அவர் எந்த அளவு ஞானம் கைவரப்பெற்ற மகான் என்பதை படம் பிடிக்கிறது.ஆன்மிக தேடல் கொண்ட அனைவருக்கும், விருந்து படைக்கும் நல்ல நூல்.