Tamil Literature and Psychiatry (ஆங்கில நூல்)
உளவியல் நோக்கில் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் வியத்தகு அறிவியல் தமிழ் நூலை, ஆங்கிலத்திலேயே எழுதியுள்ள உளவியல் மருத்துவர் டாக்டர் சோமசுந்தரம் உளமாற பாராட்டத்தக்கவர். தேமதுரத் தமிழோசை உலகம் எலாம் பரவ, இத்தகு உளவியல் அறிவியல் நோக்கு உதவும்.கலாசாரமும், உளவியலும் என்ற முதற் பகுதியில், எண் வகை மெய்ப்பாடுகள், மணிமேகலை, புறநானூறு, எண் வகை சித்திகள் பற்றி விளக்குகிறார். மன நோய்கள் போக்கும் குணசீலம், முருகன்பூண்டி, அனுமந்தபுரம், திருவிடைமருதூர், சோளிங்கர் பற்றிய உளவியல் மருத்துவ கோவில்கள் பற்றி, அற்புதமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியர், மணிமேகலைக் காப்பியம் ஒப்பிடுகிறார். தற்கொலை பற்றிய வீரக் குறிப்புகள் புறநானூற்றின் வழி விளக்கப்பட்டிருக்கிறது.உளவியல் நோக்கில் தொல்காப்பியம், திருக்குறள் மணிமேகலையை விரிவாக ஆய்வு செய்துள்ளார். காமத்துப் பாலில் உளவியலைக் கண்டறிந்து கூறியுள்ளது படிப்போரை வியப்பில் ஆழ்த்தும். உளவியல் அறிந்து பாடியவன் உயர் தமிழன் என்று நிரூபித்துள்ளார்.பட்டினத்தாரின் உடல் கூற்று வண்ணம், சித்தர் மருத்துவப் பாடல்கள், அப்பர் தேவாரம், சம்பந்தர் தேவாரம், சுந்தரர் பாடல், திருவாசகம், திருவருட்பா, பாம்பன் சுவாமிகள் திருப்பா ஆகிய தமிழ்ப் பாடல்கள் உணர்த்தும் உளவியல் செய்திகளை அறிவியல் நோக்கில் எழுதியுள்ளார்.இந்நூல் உளவியல் நோக்கில் ஆயும் தமிழ் இலக்கியத் தேன் குடம்!முனைவர் மா.கி.ரமணன்