/ கதைகள் / தேடி உனைச் சரணடைந்தேன்

₹ 400

இந்தப் புத்தகத்தின் சாரத்தை ஒரே வரியில் சொல்ல கவியரசரின் வார்த்தைகளைத்தான் கடன் வாங்க வேண்டும்: மனித ஜாதியின் துன்பம் யாவுமே மனதினால் வந்த நோயடா. ஒரு நாவல் என்றால் அதில் திடுக்கிடும் சம்பவங்களும், தகாத உறவுகளும், பாலியல் வர்ணனைகளும் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத மரபாகிவிட்டது. இந்தச் சூழலில் அன்பையும் காதலையும் மட்டுமே வைத்துக்கொண்டு கதை சொல்ல ஒரு அசாதாரணமான துணிச்சல் வேண்டும். அது நூலாசிரியரிடம் இருக்கிறது. அது சரி, வெறும் துணிச்சல் மட்டும் போதுமா? அந்தத் துணிச்சல் வெற்றி பெற்றதா இல்லையா? புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் உங்கள் கண்களைத் தொட்டுப் பாருங்கள். உங்கள் விரலில் ஈரப்பசையை உணர்ந்தால் அந்தத் துணிச்சல் வெற்றி பெற்றுவிட்டது என்று அர்த்தம். மூன்று மையமான புள்ளிகளை வைத்து மனவியல் சாஸ்திர கோடுகளைப் போட்டு அந்தப் புள்ளிகளை இணைத்து உருவாக்கப்பட்ட அழியாத கோலம்தான் தேடி உனைச் சரணடைந்தேன். முதற்புள்ளி சிவா- இளமையில் ஏற்பட்ட காயத்தால் மனம் பாதிக்கப்பட்டு, மணவாழ்க்கையை இழந்து, செயலற்றுப் நிற்கும் சிவா ஒரு மன நோயாளி இல்லை, அன்பிற்காக ஏங்கும் ஒரு குழந்தை இரண்டாவது புள்ளி ஸ்ருதி - அவள் மனதில் தோன்றும் நட்பும் காதலும் ஒரு கட்டத்தில் எப்படி மீட்புச் சக்தியாகவும், மாமருந்தாகவும் மாறுகிறது என்பதுதான் கதை. மூன்றாவது புள்ளி டாக்டர் கீர்த்தி - மனநல மருத்துவத்தின் கோட்பாடுகளையும், நெறிமுறைகளையும் உறுதியாகப் பற்றியபடி சிவாவின் நோயின் ஆணிவேரைக் கண்டறிய அவள் செய்யும் முயற்சிதான் கதையின் உந்து சக்தி. தன் சகோதரி ஸ்ருதியின்மேல் வைத்திருக்கும் பாசம் கதையின் உயிர்ச் சக்தி. அன்பு, ஆன்மிகம், பச்சைப்புடவைக்காரி என்று எழுதிக்கொண்டிருந்த வரலொட்டி ரெங்கசாமி எப்படி காதலின் பக்கம் விழுந்தார்? வயதுக் கோளாறு என்று சொல்லுபடியான வயதையெல்லாம் கடந்தவராயிற்றே அவர்? இந்தக் கேள்விகளோடுதான் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குகிறோம். கதையின் போக்கில், காதலின் ஆழத்தில், காதலர்களின் வார்த்தைகளில் நமக்கு இறைதரிசனமே கிடைத்துவிடுகிறது. பக்தியின் உச்ச நிலையில் திருஞான சம்பந்தர் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடினார். தூய்மையான காதலைத் தெய்வீகக் காதல் என்கிறோம். ஆக, காதலும் ஆன்மிகமும் ஒன்றுதான் என்று உணரும்போது நாம் திகைக்கிறோம். பின்னர் சிலிர்க்கிறோம். நோய்க்கான காரணம் உடலில் இருக்கிறதா, இல்லை, மனதில் இருக்கிறதா?” – ஆயிரம் வருடங் களாக மானுட இனத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கு நூலாசிரியர் தன் பாணியில் 287 பக்கங்களில் ஒரு அழகான பதிலைச் சொல்லியிருக்கிறார். “அன்பு குறைவதுதான் நோய்க்கான மூல காரணம்.” காதல் காட்சிகளில் கொஞ்சமாவது விரசம் இருக்க வேண்டும் என்று இன்றைய ஊடகங்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றன. காதல் காட்சிகளில் காதல் மட்டுமே இருந்தால் அதுவும் அதி தீவிரமான காதலாக இருந்தால்.. . . இந்தக் கற்பனையில் விளைந்த சிவா – ஸ்ருதி காதல் காட்சிகள் நம்மைக் காதலால் கசிந்து கண்ணீர் மல்க வைக்கின்றன. அவர்கள் காதலில் நாம் இறைவனைத் தற்செயலாகக் காணும்போதுதான் காதலும் ஆன்மிகமும் ஒன்றுதான் என்ற ஆசிரியரின் நிலைப்பாடு நமக்குப் புரிகிறது. சிவாவின் மன நோய்க்குக் காரணமான அந்தச் சம்பவம் நம் நெஞ்சைப் பிளக்கிறது. அறியாப் பெண் ஒருத்திக்கு நேர்ந்த வன்கொடுமையைப் பற்றிச் சொல்லும்போது அதைக் காட்சியாகக் காட்டிக் கலங்கடிக்காமல் பூடகமாகச் சொல்லி நம்மைச் சன்னமாக அதிரச் செய்கிறார் ஆசிரியர். மனிதரில் இத்தனை நிறங்களா என்று நாம் வியந்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்த நிறங்களில் உள்ள வேறுபாட்டை விளக்கி மன நோயைக் குணப்படுத்தும் ஸ்ருதி நம் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுகிறாள். காயப்பட்ட ஒரு நெஞ்சத்தை அன்பால் மட்டுமே ஆற்றுப்படுத்த முடியும் என்ற மாபெரும் வாழ்வியல் சத்தியத்தை, வாசகனின் மனதில் ஆணியடித்தாற்போல் பதிய வைக்கும் இந்நாவல் — தமிழ் இலக்கியப் பரப்பில் என்றென்றும் அழியாத ஒரு பேரன்பின் காவியமாக உலா வரும். புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு அதைக் கீழே வைக்கும் ஒரு வாசகிக்கு ஏற்படும் சுகத்தை வெறும் மன நிறைவென்று சொல்ல முடியாது. மானுட இனத்தின் மீதான நம்பிக்கையும், காதலின் மீதான பேராச்சரியமும் நெஞ்சை நிறைத்து, கண்களைப் பொங்க வைக்கும் அந்த அனுபவம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த அனுபவத்தைப் பெற ஒரே வழி இந்தப் புத்தகத்தைப் படிப்பதுதான். – சுமித்ரா தேவி


சமீபத்திய செய்தி