/ புத்தக மதிப்புரை / தேடலின் முடிவில்...

₹ 450

பச்சைப்புடவைக்காரியான மீனாட்சியுடன் அனுதினமும் பேசி, அவளிடம் வாதம் செய்து, சண்டை போட்டு, அவளுடைய அன்பிற்கு அடிமையாகி, அவளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருப்பவர்தான் வரலொட்டி ரெங்கசாமி. அதனாலேயே அவருடைய நாவல்களில் எல்லாம் பச்சைப்புடவைக்காரி ஒரு பாத்திரமாக வந்துவிடுவாள். ஆனால் அபூர்வமாகச் சில நாவல்களில் பச்சைப்புடவைக்காரி ஒரு பாத்திரமாக வரமாட்டாள். ஒவ்வொரு பாத்திரமாகவும் அவளே பரிமளிப்பாள். இருப்பதெல்லாம் நான் மட்டும்தான், என் சாரம் அன்பு மட்டும்தான் என்று பறைசாற்றுவாள். அந்த அபூர்வ வகையைச் சேர்ந்த நாவல்தான் “தேடலின் முடிவில்..”. மனித மனங்கள் மகா சமுத்திரங்கள். அவற்றில் புதைந்திருக்கும் ரகசியங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. சமுத்திரத்தின் மேற்பரப்பில் தென்படும் அலைகளைக் காட்டிலும், ஆழத்தில் அடங்கிக் கிடக்கும் உணர்வுச் சுழல்களே அதிகம். அந்த உணர்வுச் சுழல்களுக்குள் இறங்கி, மனித இனத்தின் காயங்களையும், அந்தக் காயங்களை மறைக்க மனிதர்கள் அணியும் முகமூடிகளையும், இவை எல்லாவற்றையும் தாண்டி இன்னும் ஆழமாகப் போனால் மானுட ஆன்மாவில் மிளிரும் தூய்மையான அன்பினையும் ஆழமான அமைதியையும் நுாலாசிரியர் தன் வார்த்தை உளிகளால் செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய அழகிய சிற்பம்தான் தேடலின் முடிவில். நாம் பல புத்தகங்களைப் படிக்கிறோம். ஆனால் சில புத்தகங்கள்தான் நம்மைப் படிக்கின்றன. படித்ததை நம்மிடமே துணிச்சலாகச் சொல்கின்றன. அதுவரை நாம் பயணித்து வந்த வாழ்க்கைப் பாதையைத் தலைகீழாக மாற்றிவிடுகின்றன. அந்த வகையைச் சேர்ந்த புத்தகம்தான் தேடலின் முடிவில். இது எழுத்துக்களால் உருவான கதையல்ல. உணர்வுகளால் மட்டுமே உருவான ஒரு உன்னதமான உரைநடைக் கவிதை. இதைப் படிக்கும் ஒரு வாசகி தன்னிலை மறந்து தன் மனசாட்சியுடன் ஆத்மார்த்மாகப் உரையாட, உறவாடத் தொடங்குவாள். அந்த உரையாடலும் உறவாடலும் அவளைப் பச்சைப்புடவைக்காரியின் சந்நிதானத்திற்கு அழைத்துச் செல்லும். கதையின் நாயகனான ஷ்யாம் வளர்ந்து வரும் எழுத்தாளன். தன் சகோதரியான நரம்பியல் மருத்துவர் சாம்பவியின் உதவியாளனாகப் பணிபுரிகிறான். தன் கதை ஒன்றாவது திரைப்படமாக வேண்டும் என்று துடிக்கிறான் ஷ்யாம். அவன் ஒரு கத்துக்குட்டி இயக்குனரைச் சந்திக்கும் காட்சியோடு கதை தொடங்குகிறது. திரையுலகம் என்ற மாய விளக்கைத் தேடி வந்து மாய்ந்து போகும் இளைய தலைமுறைக்கு இந்த நுாலின் முதல் அத்தியாயத்தை மனப்பாடப் பகுதியாக வைக்க வேண்டும். பச்சைப்புடவைக்காரி நிகழ்த்தும் அன்பின் அற்புதங்களைக் காண நாம் அதிக தூரம் செல்ல வேண்டாம். ஒரு சிறிய மருத்துவமனையில்கூட அவளால் தன் வானளாவிய அன்பை அற்புதமாக வெளிப்படுத்த முடியும். ஒரு ஏழைத் தாயின் மகனை மரணத்தின் வாயிலிருந்து பைசா செலவில்லாமல் மீட்டுத் தரும் டாக்டர் சாம்பவியிடம் பச்சைப்புடவைக்காரியைத் தரிசனம் செய்கிறோம். சாம்பவியிடம் மற்றொரு உதவியாளராகப் பணிபுரியும் பேரழகியான வந்தனாவின் தன்முனைப்பற்ற காதலிலும் பச்சைப்புடவைக்காரியின் தாயன்பைத்தான் தரிசிக்கிறோம். கோடீஸ்வரியான தர்ஷணியின் கர்வத்துக்குப் பின்னால் இருக்கும் தனிமையின் வலியை அறியும்போது நமக்கும் லேசாக வலிக்கத்தான் செய்கிறது. அவளுடைய முரட்டுத்தனமான அன்பிலும் நாம் பத்ரகாளியின் திருவடிவத்தைத்தான் பார்க்கிறோம். ஒரு கதையைத் திரைக்கதையாகவே எழுதுவது நுாலாசிரியரின் சிறப்பு. சாம்பவி தன் தம்பியான ஷ்யாமின்மேல் வைத்திருக்கும் பாசம், அவன் தர்ஷணியிடம் அடி வாங்கும்போது அவள் துடிப்பது, ஷ்யாம் சேற்றில் விழுந்து தன் சகோதரியிடம் மன்னிப்பு கேட்பது, அவனை அந்தச் சேற்றோடு சேர்த்து சாம்பவி தழுவிக் கொள்வது – இந்தக் காட்சியைப் படித்துவிட்டு அழாமல் இருப்பவர்கள் கல் நெஞ்சுக்காரர்கள் என்று அச்சடித்த சான்றிதழே கொடுத்துவிடலாம். இதுவரை தன் நாவல்களுக்குள் சிறுகதைகளைத்தான் புகுத்தி வந்தார் நுாலாசிரியர். இந்த நாவலிற்குள் ஒரு முழு நீள நாவலையேபுகுத்தியிருக்கிறார். நிஜம் என்னும் கடலும் கற்பனை என்னும் வானமும் சந்திக்கும் அந்தத் தொடுவானம் எந்த ஒரு வாசகியையும் சிலிர்க்க வைக்கும். கதையின் கடைசி அத்தியாயத்தில் அநியாயத்திற்குத் திருப்பங்கள். நமக்குத் தலை சுற்றுகிறது. அந்தத் தலை சுற்றலில் அதுவரை புரியாததெல்லாம் புரிகிறது. நம் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தேடல்களிலேயே தொலைத்துவிடுகிறோம். வண்டிச் சாவியைத் தேடுகிறோம். நிம்மதியைத் தேடுகிறோம். நிரந்தரமான சந்தோஷத்தைத் தேடுகிறோம். தேடல்கள் முடியும் முன்பே நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. ஒரு வேளை நாம் வாழும்போதே நம் தேடல் முடிந்துவிட்டால்.. . . அந்தத் தேடலின் முடிவில் அப்படி என்னதான் இருக்கும்? அதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். – சுமித்ரா தேவி