திருமுறையும் திருநெறியும்
பன்னிரு திருமுறையில் தேவார பதிகங்களை இயற்றிய சமயக்குரவர்கள் சைவ சமய எழுச்சிக்கு ஆற்றிய தொண்டுகளை விவரிக்கும் நுால். கோவில்களில் வடமொழி செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் திகட்டாத தமிழ்ப் பண்ணிசையை ஒலிக்கச் செய்தவரான சம்பந்தரின் நற்பணிகளையும், தெய்வீகப் பண்களையும் பாடித் திருத்தலங்களில் உழவாரப்பணி செய்த நாவுக்கரசரின் இறை தொண்டும், கி.பி., 7ம் நுாற்றாண்டிலேயே கலப்பு மணம் புரிந்த சுந்தரரின் பேதமற்ற தன்மையும், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரின் சிறப்புகளும் விவரிக்கப்படுகின்றன. முருக வழிபாட்டின் தொன்மையை விளக்கி, சங்க காலத்திற்கு முன்பும் பிறகுமான வழிபாட்டு முறைகள் விளக்கப்படுகின்றன. மாந்தருள் அன்பு, அடக்கம், பொறை, அருள், ஈகை, ஒப்புரவு, முதலிய உயர் குணங்களை ஊற்றெடுக்க செய்வதே சமயம். இத்தனை சமயநெறி இருந்தும், ஆன்மநேய சிந்தனைகள் குன்றி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தளர்ந்திருப்பது சுட்டப்பட்டுள்ளது. தேவாரத் திருமுறைகளில் அறக்கோட்பாடுகளை எளிமையாய் விளக்கும் நுால்.– மெய்ஞானி பிரபாகரபாபு