டாப் 200 வரலாற்று மனிதர்கள்
இந்த நாடு, இந்த மொழி, இந்த பிரதேசம், இந்த காலம் என்ற வரையறையை வைத்துக் கொள்ளவில்லை சரவணன். விவரமாக சொல்வதை விட, விறுவிறுப்பாக சொல்வதில் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். ஈஸ்வர சந்திர வித்யாசாகர், வங்கத்தைச் சேர்ந்தவர். வேதங்கள், சமஸ்கிருத நூல்கள் ஆகியவற்றிலிருந்து, விதவை மறுமணத்துக்கு ஆதரவான கருத்துகளைத் திரட்டி புத்தகமாக வெளியிட்டவர். அவர், இந்துக் கல்லூரியைச் சேர்ந்த, ‘கேர்’ என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கப் போனார். பூட்ஸ் அணிந்த கால்களை மேசை மீது வைத்துக் கொண்டு, கேர் இவருடன் உரையாடினார். மற்றொரு சமயம், ஈஸ்வர சந்திர வித்யாசாகரைச் சந்திக்க சமஸ்கிருதக் கல்லூரிக்கு கேர் வந்தார். அவருக்கு தக்க பதில் மரியாதை செய்யப்பட்டது.இதுபோன்ற சுவாரசியங்களின் தொகுப்பு தான் இந்த நூல். இந்த நூலில், ‘ராஜாஜி மதபீடங்களின் தலைவர்களைச் சந்தித்தது இல்லை’ என, பக்.599ல் எழுதப் பட்டிருக்கிறது. திருவானைக்காவில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கரமடத்து தலைவரை, 1926ம் ஆண்டு, மார்ச் மாதத்தில், ராஜாஜி சந்தித்தார்.சுப்பு