வள்ளுவர் மறை வைரமுத்து உரை
உலகம் போற்றும் விழுமிய நுால் களுள் தலையாயது திருக்குறள். ‘தண்டமிழின் மேலாம் தரம்’ என்று அறிஞர்களால் போற்றிப் புகழப்படும் திருக்குறளை, பெரும்புலவோர் எனக் கருதத்தகும் ஆசிரியர்கள் பலரும் தங்கள் நுாலில் எடுத்து ஆண்டிருக்கிறார்கள். தருமர், மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர் உள்ளிட்ட பழைய உரைக்காரர்கள் பதின்மர் திருக்குறளுக்கு உரை செய்தனர். பின்னர் தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளனர். அவ்வகையில் கவிஞர் வைரமுத்து இந்நுாலில் இன்றைய சமுதாய நிலையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குறளுக்கும் கற்போர் உள்ளங்கவரும் வகையில் சிறப்பாக உரை எழுதியுள்ளார். தமிழுக்கு ஒரு புதிய புதையல் கிடைத்திருக்கிறது. வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற உரைநுால்தான் அது. ஒரு பாடலாசிரியராகப் பெரும்புகழ் பெற்றவர், உரையாசிரியராகவும் முத்திரை பதித்திருக்கிறார். ஓர் உரையாசிரியனுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று முன்னுரையில் அவரே பட்டியலிடுகிறார். காலமறிதல் – மொழியறிதல் – யாப்பறிதல் – வரலாறறிதல் – தொன்மப் பொருளறிதல் – தொனிப்பொருளறிதல் – இலக்கணத்தின் வழிநின்று இலக்கியத்தில் சிக்கல் அறுத்தல் – உரையாசிரியர்களின் உரை வேறுபாடுகளில் ஒப்புமை காணல் – உரை எழுதப்படும் காலத்தோடு பொருள் பொருத்துதல் இந்த எல்லாத் தகுதிகளோடும் இந்த உரைநுால் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னால் அது மிகைபடமொழிதல் ஆகாது. எடுத்துக்காட்டாக அறத்துப்பாலில் உள்ள ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள் - 55) எனும் குறளுக்கு, பரிமேலழகர் ‘பிற தெய்வந் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்’ என்று உரை செய்தார். இக்கருத்தை வழிமொழியும் விதமாகவே மணக்குடவர், பரிதியார், காலிங்கர் உள்ளிட்ட பலரின் உரைகளும் அமைந்தன. அது மட்டுமன்று வள்ளுவத்திற்குப் பின்னர் தோன்றிய பல்வேறு இலக்கியங்களிலும் இக்கருத்தே வலியுறுத்தப்பட்டது. “குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர் தொழுதெழுதலால்” என்று கலித்தொகையிலும், “தெய்வம் தொழாஅள் கொழுநர் தொழுதெழுவாளை” என்று சிலப்பதிகாரத்திலும், “காமனை யென்னும் சொல்லார் கணவர் கைதொழுது வாழ்வார்” என்று சீவக சிந்தாமணியிலும், “வான் தரு கற்பின் மனையுறை மகளிர் / தெய்வந் தொழாஅள் கொழுநர் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப்பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” என்று மணிமேகலையிலும், “மாதரார் கற்பின் நின்றன அறங்கள்; அன்னவர் கற்பின் நின்றன காலமாரியே” என்று கம்பராமாயணத்திலும் இதே குறள் அதே பொருளில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஆனால், இந்நுாலாசிரியர் அக்கருத்திலிருந்து மாறுபட்டு, ‘கட்டமைக்கப்பட்ட தெய்வங்களை வணங்காமல் கட்டிவந்த கணவனையே தெய்வமாய்த் தொழுது எழுகிறவள், பெய்யென்று சொன்னவுடன் பெய்யும் மழை எப்படியோ அப்படி நன்மை தருவாள்’ என்று அக்குறளுக்கு மெய்ப்பொருள் கண்டிருக்கிறார். அறத்துப்பாலில் உள்ள மற்றொரு அதிகாரமான ‘துறவு’ எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு (குறள் - 343) எனும் குறளுக்குப் பரிமேலழகர் ‘வீடெய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்; கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்’ என்பதைப் பொருளாகக் கூறுகிறார். மணக்குடவர் ‘துறப்பார்க்குப் பொறிகள் ஐந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையும் கொல்லுதல் வேண்டும்; அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒருகாலத்திலே விடுதல் வேண்டும்’ என்கிறார். பரிதியார் ‘ஐம்புலன்களையும் பொறிவழியிலே செல்லாமல் கெடுக்க வேணும்; ஐம்புலன் உ ணர்வுகளை விடவேண்டும்’ என்று கூறுகிறார். ஆனால், இந்நுாலாசிரியர் ‘துறவிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் மெய், வாய், -கண், -மூக்கு, -செவி என்ற ஐம்புலன்களின் நுகர்ச்சிகளையும் அழித்துவிட வேண்டும். ‘அது மட்டுமன்று, அப்படிப்பட்ட ஐம்புலன் நுகர்ச்சிகளுக்குத் தமக்கு அமைந்த அல்லது அமைத்துக் கொண்ட பொருள்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாய் உதறிவிட வேண்டும்’ என்று கூறித் துறவின் இலக்கணத்தைத் துல்லியமாய் உரைக்கிறார். பொருட்பாலில் உள்ள அதிகாரமான ‘கல்லாமை’யில் இடம் பெற்றுள்ள மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துஇலர் பாடு (குறள் - 409) எனும் குறளுக்குப் பரிமேலழகர், ‘இல்லாதார் உயர்ந்த சாதியில் பிறந்தாராயினும் தாழ்ந்த சாதியில் பிறந்துவைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்’ என்று உரை காண்கிறார். மணக்குடவர், ‘கல்வியில்லாதார் உயர்குலத்தில் பிறந்தாராயினும் இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர்’ என்கிறார். ஆனால், இந்நுாலாசிரியர் இக்குறளுக்கு உரையாக, ‘கல்லாத ஒருவர் மேற்குடி என்று சொல்லப்படும் குலத்தில் பிறந்திருக்கலாம். ஆனால், கீழ்க்குடி என்று சொல்லப்படும் குலத்தில் பிறந்த கற்றவர் ஒருவரோடு ஒப்பிடும்பொழுது, இவரைவிட அவர் சிறந்தவர் அல்லர். ‘உயர்வும், தாழ்வும் குலம் சார்ந்தவை அல்ல. கல்வி சார்ந்தவை’ என்று கூறிக் கல்வியின் மாண்பையும் கற்றலின் இன்றியமையாமையையும் பொட்டிலடித்தாற்போல் புரிய வைக்கிறார். பொருட்பாலில் உள்ள ‘மானம்’ எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் (குறள் - 969) எனும் குறளுக்குப் பழைய உரையாசிரியர்கள், புதிய உரையாசிரியர்கள் அனைவருமே ‘ஒரு மயிர் உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் உயிரை விட்டுவிடுமாம். அதுபோல மானத்தை இழந்தவர்கள் உயிரை விட்டுவிடுவார்கள்’ என்றே பொருள்கூறி வந்துள்ளனர். ஆனால், இந்த நுாலாசிரியர், ‘உடலின் கற்றை முடியைக் கம்பளிபோல் கவரியாகக் கொண்டு குளிர்தாங்கும் பனிநாட்டு விலங்கு, அந்தக் கற்றைமுடி உதிர்ந்துவிட்டால், குளிர்தாங்காமல் இறந்துவிடும். அதுபோல் மானம் நீங்கிவிட்டால் உயர்ந்தவர்கள் உயிர்தரிக்க மாட்டார்கள்; இறந்துவிடுவர்’ என்று புதுப்பொருள் சொல்லி வியக்க வைக்கிறார். வள்ளுவத்தின் இன்பத்துப்பாலில் உள்ள இருநுாற்றைம்பது குறளும் வள்ளுவர் எழுதிய இருநுாற்றைம்பது காதல் கவிதைகள் அல்லவா? இவ்வுரையாசிரியர் கவிஞராகவும் இருப்பதால் அவர் உரையால் அக்கவிதைகள் மேலும் துலக்கம் பெறுகின்றன. ‘காதல் சிறப்புரைத்தல்’ எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு (குறள் - 1122) எனும் குறளுக்கு ‘உடம்புக்கும் உயிர்க்கும் எப்படி நட்பு உண்டோ அத்தகைய நட்பு எனக்கும் இம்மடந்தைக்கும் உளது’ என்றே பெரும்பாலான உரையாசிரியர்கள் எழுதிவந்தனர். ஆனால், இந்நுாலாசிரியரோ, ‘உடம்புக்கும் உயிருக்குமான உறவு எத்தகையதோ அத்தகையது இந்தப் பெண்ணுக்கும் எனக்குமான நட்பு’ (எது எதனைப் பற்றியுள்ளது என்பது தெரியாது. எது எதனால் இயங்குகிறது என்பது புரியாது. ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது என்பதை உலகம் அறியாது; ஒன்று நீங்கினாலும் இன்னொன்று நிலைபெறாது) என்று ஐயந்திரிபற அறுதியிட்டுக் கூறுகிறார். இன்பத்துப்பாலில் உள்ள ‘தனிப்படர் மிகுதி’ அதிகாரத்தி ல் இடம்பெற்றுள்ள வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு (குறள் 1193) எனும் குறளுக்குப் பரிமேலழகர் ‘தாம் விழையும் கணவரால் விழையப்படும் மகளிர்க்கு ஏ ற்புடைத்து (காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைத்து கடிதின் வருவர், வந்தால் நாம் இன்புற்று) வாழ்துரமன்றிருக்கும் தருக்கு’ என்று பொருள் கூறினார். மேலும், பழைய உரையாசிரியர்கள் பலரும் ‘அமையுமே வாழுநம் என்னும் செருக்கு’ என்பதற்கு ‘உயிர் வாழ்வேமென்னும் களிப்பு அமையும்’ என்றே பொருள் கூறினர். ஆனால், கவிஞரோ ‘பிரிந்து போயினும் என் தலைவர் வந்தே தீருவார். ஏனெனில், நான் காதலிக்கிற தலைவனால் காதலிக்கப்படுகிறவள். ஆதலால் ஏறி நிற்கிறது எனக்கு – வாழ்வேன் என்னும் செருக்கு’ என்று தலைவியைக் காதல் முழக்கம் செய்ய வைத்துள்ளார். இன்பத்துப்பாலில் வள்ளுவர் கவிதை எழுதுகிறார். வைரமுத்து உரை எழுதும்போதே கவிஞர் ஆகிவிடுகிறார். காமமும் நாணும் உயிர்காவாத் துாங்கும்என் நோனா உடம்பின் அகத்து (குறள் - 1163) என்ற குறளுக்கு ‘மெல்லியது; நிறை பொறுக்காதது. இப்படியான ஒடிந்த உடம்பில் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு ஒருமுனையில் காமமும் மறுமுனையில் நாணமும் இப்படி ஊசலாடிக் கொண்டிருந்தால் எப்படி வாழுவேன் யான்?’ என்று எழுதுகிறார் உரையாசிரியர். உரைநடைக்கு மணம்பூசிவிட்டுக் கவிதை கடந்துபோகிறது. இவ்வாறு ஒவ்வொரு குறளுக்கும் வள்ளுவர் நோக்கம் சிதைவுபடாது அறிவியல் தளத்தில் நின்று உரை வரைந்துள்ளார் ஆசிரியர். வள்ளுவர் பெருமையில் இதுவரை நமக்குத் தோன்றாத பல புதிய செய்திகள் இந்த உரையில் புலனாகின்றன. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 423) எனும் வள்ளுவரின் வாய்மொழி வழிநின்று முந்தையோர் உரைகளையெல்லாம் ஆராய்ந்து இந்தப் புதிய உரையைப் படைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. ‘மனிதரும் மொழியும் உள்ளவரை’ எனும் தலைப்பிலான ஆசிரிய உரையே திருக்குறள் குறித்த ஆய்வேடாக மிளிர்கிறது. இந்த நுாலுக்குக் கிடைத்த மிகப்பெரிய சிறப்பு என்று முன்னுரையைச் சொல்லலாம். இதுவரை எழுதிய உரையாசிரியர்கள் யாரும் இவ்வளவு ஆழமான அழகான முன்னுரையை விட்டுச்செல்லவில்லை அல்லது கிடைக்கவில்லை. அந்த 13 பக்க முன்னுரை மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்கது. உரையாசிரியரின் புலமை ஆழப் பளிச்சிடுகிறது. திருவள்ளுவருடைய உள்ளத்தின் ஆழத்தையும் விரிவையும் அறிந்திட இந்நுால் ஒரு புதிய சாளரம். தமிழுக்குப் புதிய வரவான இந்நுால் பாற்கடல் அமுதிற் செய்த பணியாரம்; பைந்தமிழ் அன்னைக்குக் கவிஞர் சூட்டியுள்ள அழகிய மணியாரம். – ராஜ்கண்ணன்