முகப்பு » வாழ்க்கை வரலாறு » கலையில் எரிந்த கலைஞன்- சந்திரபாபு

கலையில் எரிந்த கலைஞன்- சந்திரபாபு

விலைரூ.176

ஆசிரியர் : நாஞ்சில் இன்பா

வெளியீடு: தோழமை வெளியீடு

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திரைத்துறையில் எப்போதுமே வெற்றி மட்டுமே பேசப்படுகிறது; கொண்டாடப்படுகிறது; புகழ் வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது.
ஒரு துளி அதிர்ஷ்டத்தால் புகழின் உச்சிக்கு செல்வோர், சிறிய சறுக்கலால்  கீழே விழுந்து மொத்தமாய் ம(ற)றைந்து போகின்றனர்.
எனினும், அசாத்தியத் திறமையினாலும்,  விடாமுயற்சியாலும் முன்னுக்கு வருவோருக்கு கிடைக்கும் வெற்றி, சரித்திரத்தின் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டு வருகிறது என்பதே வரலாறு. அப்படி தமிழ் சினிமா சரித்திரத்தின் பக்கங்களில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் சந்திரபாபு. அந்த மகா கலைஞன் குறித்து பேசுகிறது இந்தப் புத்தகம்.
சந்திரபாபு தன் தனிப்பட்ட முழுத் திறமையால், அயராத உழைப்பால், வசீகரக் குரலால், நடன அசைவால், மேல்நாட்டுத் தன்மை மிளிறும் உடல் மொழியால், தனக்கென தனிபாணி அமைத்துக் கொண்ட மகா கலைஞன். அவர் குறித்த வரலாறு, 28 அத்தியாங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு என்ற நகைச்சுவை கலைஞனின் திரை வாழ்க்கையை எவ்விதமான ஒப்பனையின்றி, அலங்காரமின்றி எடுத்துக்காட்டும் அதே நேரம், ‘ஜோசப் பிச்சை பனிமயதாசன் பெர்னாண்டோ’ என்ற மீனவ சமுதாய மனிதன் பற்றி, எவ்வித பாசாங்குமின்றி, தனிமனித
துதிபாடலின்றி, சராசரி மனிதனாய் நம்முன் நிறுத்தி, அவரின் வாழ்வியல் சம்பவங்களையும் அப்படியே விவரிக்கிறது. அப்படி எவ்வித  ஒப்பனையுமின்றி இருப்பதே, தனி அழகாய் இருக்கிறது.
வாழ்வியல் சம்பவங்களுக்கு மத்தியில், சமகால அரசியலையும் மிக அழகாக பதிவு செய்திருப்பதோடு, அன்றைய காலகட்டத்தில் நிலவிய காங்கிரஸ், தி.மு.க., வினருக்கு  இடையே இருந்த அரசியல் முரண்பாடுகளையும், அக்காலத்து நடிகர்களுக்குள்  இருந்த போட்டி மனப்பான்மையையும், அரசியல் கட்சிகள் அதனை எவ்வாறு தங்களுக்கு சாதகமாக  மாற்றிக்கொண்டனர் என்ற பின்னணியையும் சுவாரசியமாக விவரித்துச் செல்கிறது. அந்த வகையில் அந்த விவரணை ஒரு சரித்திரப் பதிவாகவே இருக்கிறது.
ஒரு திரைப்படத்தின் வெற்றி தரும் சந்தோஷத்தையும், அது ஏற்படுத்தும்  மாயத்தையும், எதிர்பார்த்த திரைப்படம் தோல்வியுறும்போது உண்டாகும் ஏமாற்றத்தையும், அதனால் ஏற்படும் மனக்கசப்புகளையும், கலைஞர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தையும், நூலாசிரியர் பதிவு செய்கிறார்.
சந்திரபாபுவின் வாழ்க்கை  விவரிப்பு, ஒரு ஆவணத் தேடலின் பலனாகவே முன் வைக்கப்படுகிறது. தனிமனித வாழ்க்கையின் வலி நிறைந்த தருணங்கள் அவரைப் பற்றிய ஒரு முழுமையான பிம்பத்தை முன் வைக்கின்றன.
‘நீதிமன்றம் தந்த மணமுறிவுக்குப் பின் ஷீலா, மதுரை போய் கொல்லம் வழியாக லண்டன்  செல்லப் புறப்பட்டார். சந்திரபாபுவும் ஷீலாவுடன் கொல்லம் வரை சென்றார். ஷீலாவைக் கப்பல் ஏற்றிவிட்டு சென்னை வந்த சந்திரபாபு, ஷீலாவின் நினைவுகளை  உணர்த்திய ஒவ்வொரு இடமாக அமர்ந்து அழுது தீர்த்தார்’ (பக். 41) என்று சந்திரபாபு – ஷீலா தம்பதியின் மணவாழ்க்கை குறித்து பேசும்  பக்கங்கள் ஒவ்வொன்றும், சந்திரபாபுவின் உள்ளத்து உணர்ச்சிகளை படிப்பவர்  மனதுக்குள் அப்படியே கடத்துகின்றன.
கவலை இல்லாத மனிதனாக வலம் வந்த சந்திரபாபுவின் வாழ்க்கையில், விதியின்  விளையாட்டுகள், அதன் பிடியில் சிக்குண்டு சொந்தப் படம், இயக்கம் என அலைக்கழிந்து எப்படி கவலை கொண்ட மனிதனாக மாறினார், அவரது திரையுலக வாழ்க்கை எப்படி சூனியமாகிப் போனது ஆகியவை, அழுத்தத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன.
சற்று அசந்தாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் திரைத்துறையில், சூதுவாது உள்ளோருடனான தொடர்பை, திறமையானோர் விலக்காது போனால், என்ன கதிக்கு ஆளாவர் என்பதை, ஒரு நேரடி வர்ணனையாக எடுத்துக்காட்டுகிறது, சந்திரபாபுவின் வேதனை ததும்பும் வீழ்ச்சி வரலாறு. சந்திரபாபுவைப் பற்றி ஓரளவுக்கு மேலோட்டமாக தெரிந்தோராக இருப்பவரை, ஒரு தெளிவான நிலைக்கு அழைத்துச் செல்லவே வைக்கிறது இந்த புத்தகம்.
கலையின் மீது தீராத காதல் கொண்டவர் சந்திரபாபு. அவரைப்போல் ஒரு மகத்தான காதலனை இனி இந்த உலகம் சந்திக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஸ்ரீநிவாஸ் பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us