முகப்பு » ஆன்மிகம் » திருவருட்பா சிந்தனை

திருவருட்பா சிந்தனை

விலைரூ.165

ஆசிரியர் : க.வெள்ளைவாரணனார்

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருவருட் பிரகாச வள்ளலார் விரித்துரைத்த நெறி சுத்த சன்மார்க்க நெறியாகும். இது, சமயம் கடந்த பொது நெறியாகும். இந்நெறி சைவத் திருமுறைகளுக்கு மாறுபட்ட நெறியன்று என, இந்நூல் தெளிவு செய்கிறது. சைவ சமய ஆச்சாரியர்கள், அருளாளர்கள்  அறிவித்த பழைமையானவற்றையே வள்ளலாரும் அறிவித்தார். எவையும் வள்ளலாரால் புதியனவாகப் புனைந்து கூறப்பட்டனவல்ல; வள்ளலார் சைவ சித்தாந்தத்திற்கு எளிய முறையில் விளக்கம் அளித்தவர். எனவே, சைவத் திருமறைச் செய்திகளுக்கும், சைவ மெய்யியல் கோட்பாடுகளுக்கும் திருவருட்பா விலகியதாகக் கருதுவது சரியன்று. இம்மையக் கருத்தடிப்படையில் இந்நூல் விரித்தெழுதப்பட்டுள்ளது.
பதினாறு தலைப்புகளில், முன்னையோர் பனுவல்களையும், திருவருட்பா பாடல்களையும் ஒப்பிட்டு, ‘வள்ளலாரின் வாக்குகள் தொன் மரபினமே’ எனத் தம் நுண்மாண் நுழைபுலத்தால், நினைவில் வாழும் தமிழறிஞர் பெருந்தகை வெள்ளை வாரணனார் இந்நூலால் மெய்ப்பித்தார். இறைவர் ஒருவரே என்றது சைவத்தின் முதன்மைக் கொள்கை எனவும், சைவத்தின் அன்பு நெறிக்கோட்பாடே ஆன்மநேய ஒருமைப்பாடு எனவும், ‘ஈரமுடையார் காண்பர் இணையடி’ என, வரும் திருமந்திரத் தொடரும் இதற்கு அடையாளம்.
ஜாதி, சமய, இன வேறுபாடுகளைக் களைய வேண்டியதின்  இன்றியமையாமை பற்றி முன்னைய சைவச் சான்றோர் பலரும் வலியுறுத்தினர் எனவும், ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ பற்றிச் சங்க நூல்களிலும் சைவத்தின் தோத்திர நூல்களிலும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும்  வள்ளலார் வழி தனித்தன்மை வாய்ந்த புதுமையுடைய தெனவும் இந்நூல் தரும் ஒப்பாய்வு முடிவுகள், பல்வேறு ஐய வினாக்களுக்கு விடைகளாக உள்ளன.
‘கடவுன்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ எனத் தொல்காப்பியம் நவிலும் துறை, சமய நூல்களில், ‘நாயக நாயகி பாவம்’ எனப் பெறும். அத்துறையில்  அமைந்து சைவத்திருமுறைப் பனுவல்களையும், திருவருட்பாக்களை யும் ஒப்பிட்ட நலம்புனை கட்டுரை நயம்புகை கட்டுரையாகவும் அமைத்து இன்பம் தருகிறது.
‘சுதந்திரம் பெற வழி வகுத்த தோன்றல்’ என்னும் கட்டுரைகள், ‘கருணாஇலா ஆட்சி கடுகி ஒழிக அருள் நயந்த நன்மார்க்கம் ஆள்க!’ எனவும், ‘ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்’ எனவும் வரும் தொடர்களைச் சுட்டி, நாட்டு விடுதலையிலும் வள்ளுவரின் நாட்டம் பதிந்திருந்தமையை இந்நூல் பதிவு செய்துள்ளது.
பதிப்பகத்தார் இந்நூலின் முதற்பதிப்பு எந்த ஆண்டில் வந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்; இது முதற்பதிப்பன்று. சமயவாதிகள் அனைவரும் இந்நூலைக் கற்றறிந்தால் மட்டுமே சமயப் பொதுமையின் மாட்சிமைகள் புலப்படும்.

ம.வே.பசுபதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us