முகப்பு » வாழ்க்கை வரலாறு » எல்லோருக்குமான, ‘நாயகன்’

எல்லோருக்குமான, ‘நாயகன்’

விலைரூ.360

ஆசிரியர் : ப.லட்சுமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
லட்சக்கணக்கான வாசகர்களால் நேசிக்கப்படும், ‘தினமலர்’ -வாரமலர் கதாநாயகனான அந்துமணி பற்றி ப.லட்சுமி எழுதி வெளிவந்துள்ள ‘நாயகன்’ புத்தகம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகும்.
எழுத்தாளராகவும், நிர்வாகியாகவும் வெற்றிகரமாக வலம் வருபவர்களை இந்தியாவில் விரல் விட்டு எண்ணிவிடலாம்; அவர்களில் இவர் முதலாமவர்.
காதில் போட்டிருந்த தங்கக் கடுக்கன் ஒரு சுமை என்று கழற்றி, சாக்கடையில் வீசி எறிந்த இரண்டு வயதில் இருந்து, இவரது கதை தொடர்கிறது.
பெரிய குடும்பத்தில் பிறந்து, பாசக்கார பிள்ளையாக வளர்ந்தாலும், பெரியவர்களும், உரியவர்களும், உறவினர்களும், நட்புகளும், பிரமித்துப் பார்த்த தனி ராஜாங்கம் இவருடையது.
‘இதுதான் வாழ்க்கை; இவை தான் லட்சியம்’ என்பதை கல்லுாரி காலத்திலேயே தெரிந்து கொண்டவர், ‘தினமலர்’ நிர்வாகத்திற்கு வந்த பிறகு தன்னை உருக்கி, ‘தினமலர்’ இதழை எப்படியெல்லாம் செதுக்கினார் என்பதை, அணு அணுவாக விவரிக்கும் போது ஏற்படும் பிரமிப்பிற்கு அளவே இல்லை.
எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாக, ‘தினமலர்’ வர வேண்டும் என்ற இவரது இளமையும், புதுமையும் கொண்ட முயற்சி, ‘தினமலர்’ நாளிதழை விற்பனையின் உச்சத்திற்கு கொண்டு சென்ற விதத்தை, வித்தையை ஒவ்வொரு பக்கமும் சுவாரசியமாக விவரிக்கிறது.
உச்சம் தொட்டவர் கொஞ்சம் இளைப்பாறுவார் என்று பார்த்தால், ‘இல்லை இதுவரை நான் நடைப்பயிற்சி தான் எடுத்தேன்; இனிமேல் தான் ஓட்டப்பயிற்சி எடுக்கப் போகிறேன்’ என்று சொல்லி, அதன் பிறகு, வாரமலர், சிறுவர் மலர், கதைமலர், புதுமலர், தீபாவளிமலர் என்று எடுத்த ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், சக பத்திரிகையாளர்களே மூச்சு வாங்கிய நிலையில், பிற பத்திரிகைகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
நாயகனின், 403 பக்கங்களிலும் சொல்ல மறந்த ஒரு வார்த்தை ஒன்று உண்டு; அது இவர் ஒரு, ‘ட்ரெண்டு செட்டர்’ என்பதுதான்.
‘போஸ்டர்’ என்றால், மட்டைத்தாளில் தான் போடவேண்டுமா... ஏன் வண்ணத்தில், டபுள் போஸ்டர் போடக்கூடாது’ என்று முடிவு செய்து, இவர் தான் முதலில் வண்ண மயமான டபுள் போஸ்டர் போட்டார்.
பிறகு, ஊரில் உள்ள மற்ற பத்திரிகைகளும் போட்டன; போட்டுக் கொண்டு இருக்கின்றன.
தலைப்பு, படவிளக்கம், செகண்ட் ப்ரன்ட் பேஜ், டீ கடை பெஞ்ச் என்று இவர் பத்திரிகையில் செய்த புதுமைகளின் பட்டியல் ரொம்பவே நீ...ளமானது.இதை எல்லாம் விரிவாக தெரிந்து கொள்ள, அவசியம் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல ‘தினமலர்’ வாசகர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு பகுதி பிடித்துப் போயிருக்கும். அந்தப் பகுதி பிறந்த விதம், அதன் பின்னணி பற்றி இந்த புத்தகத்தில் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டு உள்ளது. இதைத் தெரிந்து கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதியை படிக்கும் போது வாசகர்கள் நிச்சயம் உற்சாகம் பெறுவர்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இது உங்கள் இடம் பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள் இவர் பொறுப்பு ஏற்கும் வரை, அந்தப் பகுதி, ஒரு புகார் பெட்டி போல, ‘எங்கள் தெருவில் விளக்கு எரியவில்லை, குப்பையை அள்ளவில்லை’ என்று, ‘சவசவ’ செய்தியாக வந்து கொண்டிருந்தது.
அந்தப் பகுதியில் பிரசுரமாகும் கடிதத்திற்கு, 2,000 ரூபாய் வரை சன்மானம் என்று அறிவித்த பிறகு அந்தப் பகுதிக்கு மிகுந்த வரவேற்பு ஏற்பட்டது. புத்தகத்தை மூடும் போது கூட, படிக்காமல் விடப்பட்ட, இது உங்கள் இடம் பகுதி இப்போது, புத்தகத்தை வாங்கிய உடனேயே, முதலில் படிக்கும் பகுதியாகிப் போனது.
‘இதை இவன்கண்விடல்’ என்ற,  குறள் பொருளுக்கு அர்த்தமே இவர் தான். யாரிடம் எந்தப் பொறுப்பை கொடுப்பது என்பதை, இவர் போல யாரும் முடிவு செய்ய முடியாது. இந்த புத்தகத்தை எழுத, ப.லட்சுமியை தேர்வு செய்ததே அதற்கு சரியான உதாரணம்.
யார் வாசித்தாலும், இந்த புத்தகத்தை நேசிப்பர். அந்த அளவிற்கு எளிய நடை அது மட்டுமல்ல; கட்டுரைக்கு நடுவே அவர் பிரயோகிக்கும் கவித்துவமான வார்த்தைகள், ரொம்பவே வசீகரிக்கின்றன. அவர் எந்த அளவிற்கு அந்துமணியை நேசித்திருந்தால், இந்த அளவிற்கு எழுதியிருப்பார் என்பதையும் யூகிக்க முடிகிறது.
உதாரணத்திற்கு, ‘காவிரி கரையிலே’ என்ற தலைப்பு பகுதியை எடுத்துக்கொள்ளலாம்...
நள்ளிரவு, 1:00 மணி.
‘வெள்ளி ஜரிகையால் ஆன பட்டாடை அணிந்து காவிரி எனும் இளம் தாரகை, அரங்கனின் திருவடியை தழுவிய பேரானந்தத்தில், தன் கடல் காதலனை நோக்கி மென் நடைபோட்டுக் கொண்டிருந்தாள். அவள் மேனியை தொட்டு தழுவிய உற்சாகத்துடன் கிளம்பி தென்றல் கரையோரம் இருந்த அந்த கம்பீர இளைஞன் மீது மோதி நலம் விசாரித்தது.
‘இது எதையுமே கண்டுகொள்ளாத இந்த கல்லுாரி இளைஞன் கையில் அவனே வடிவமைத்த புத்தகம் இருந்தது அந்த புத்தகத்தில் உள்ள சுவாரசியங்களை, அந்த இரவிலும் நண்பர்களை கூட்டி வைத்து விவரித்துக் கொண்டிருந்தான். அவனே, நம் நாயகன் அந்துமணி’ என்று ஆரம்பிக்கிறார்.
இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அவரது வீரம், சாதுர்யம், புலமை, உழைப்பு இது எல்லாவற்றையும் தாண்டி நிற்பது, அவரது மனிதநேயம் தான். வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரியக்கூடாது என்பர். ஆனால், இவர் வலது கையால் கொடுப்பது இவரது வலது கைக்கு கூட தெரியுமா... என்பது தெரியவில்லை.
ஒருவர் இருவர் என்றால் பரவாயில்லை சொல்லி வைத்தார் போல நுாற்றுக்கும் மேற்பட்டோர் நெருக்கடி காலத்திலும் நிர்க்கதியாய் நின்ற காலத்திலும் உதவியவர் அந்துமணிதான் என்று கண்களில் நீர் வழிய சொல்கின்றனர்.
இது ஒன்று போதுமே வாழும் வாழ்க்கையை அர்த்தமாக்க, தனக்கென வாழாமல், நாலு பேருக்காவது நன்மை செய்யும் படி வாழ்ந்துட்டு போ, அது தான் வாழ்க்கை என்பர் பெரியோர்.
ஆனால், இவரோ நாலாயிரம் பேருக்கு மேல் நன்மை செய்திருக்கிறார் என்றறியும் போது, மனிதர் என்ற நிலையைத் தாண்டி புனிதர் என்றே வணங்கத் தோன்றுகிறது.
‘தினமலர்’ -வாரமலர் வாசகர்களின் கனவான, ‘குற்றால சீசன் டூரை’ இந்த நாயகன் வழிகாட்டுதலில் அவர் தலைமையில் கடந்த, 32 வருடங்களாக ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகிறேன்.
அவரிடம் அப்போது எல்லாம் நெருங்கிப்பழகி நமக்கு தான் அந்துமணியைப் பற்றி அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், புத்தகத்தை படித்த பிறகு தான் தெரிந்தது நமக்கு தெரிந்தது அவரைப் பற்றி அறிந்தது எல்லாம், 10 சதவீதம் கூட இல்லை என்று.
ஆகவே, அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வாசகர்கள் அனைவரும் நாயகனை வாங்குங்கள் வாசியுங்கள். அதன் பிறகு முன்னிலும் அதிகமாக உங்கள் பிரியமான அந்துமணியை நேசிப்பீர்கள் இது உறுதி.
– எல்.முருகராஜ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us