முகப்பு » பொது » பாஸன் நாடகங்கள்

பாஸன் நாடகங்கள்

விலைரூ.180

ஆசிரியர் : அ.ரேவதி

வெளியீடு: காவ்யா

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பழமையும், பெருமையும் மிக்க செம்மொழி சமஸ்கிருதம். ஜெர்மன் மொழியில் இதன் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கிருந்து ஆங்கிலம் மூலம் உலகெங்கும் உலா வருகிறது. தமிழிலும் சமஸ்கிருத இலக்கியங்கள் மொழிமாற்றம் பெறுகின்றன. ஆனால், தமிழை உயர்த்துவதாக கூறிக்கொண்டு, சமஸ்கிருதத்தை வளரவிடாமல், வரவிடாமல் தடுத்தோர், இன்றும் உள்ளனர்.
அதையும் மீறி சமஸ்கிருதம் – தமிழ் உறவு வளர்கிறது. இத்தகு மொழிப்பாலத்தில் மகாகவி பாஸன் நாடகங்கள் நான்கும், வெகு அழகாக தமிழில் தற்போது வெளிவந்துள்ளன.  சந்திரகுப்தர் காலமான, 1,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கவிபாஸனின், 13 நாடகங்களில்,
தூத வாக்யம், கர்ண பாரம், பிரதிமா நாடகம், ஸ்வப்ன வாசவதத்தம் என்ற நான்கையும், முனைவர் பட்ட மாணவி ரேவதி, மிகவும் அழகாக மொழிபெயர்த்துள்ளது பாராட்டத்தக்கது.
கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன்னர்தான், இந்த நாடகங்களே கண்டறியப்பட்டன என்பதும், அது நம் நாடகத் தமிழில் புதுப்புனைவு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கொடை வள்ளல் கர்ணனின் சிறப்பை, ‘கர்ண பாரம்’ சொல்கிறது. மகாபாரதத்தில், துரியோதனனிடம் கண்ணன் தூது சென்றதை, ‘தூத வாக்யம்’ நாடகமாக சொல்கிறது. வியாசரின் போக்கிலிருந்து சில மாற்றங்களும் செய்து, கண்ணன் ஆளுமையை அதிகமாக்கிக் காட்டுகிறது நாடகம்.
ராமாயணத்தில் பொன்மான் வருமுன்பே, ராமனும், ராவணனும் சந்தித்துப்பேசும் கற்பனைக்காட்சி அதிஅற்புதம். கைகேயி, ‘14 நாள் காட்டுக்குப் போ’ என்று ராமனைக் கூறுவதற்கு பதில், மனக்குழப்பத்தில், ‘14 ஆண்டுகள் போ’ என்று கூறிவிட்டதாக வரும் நாடகப்பகுதி மிக அருமை. ‘ஸ்வப்ன வாசவதத்தம்’, உதயணன் காதல் கதையாகும். காதலி மேல் கொண்ட காதலால் நாடு இழக்கிறான். தன் காதலை விட கடமையே பெரிது என நினைத்தவள், தான் தீயில் கருகியதாகக் கூறி, தலைமறைவாகி மீண்டு வந்து தன் காதலையும், நாட்டையும் மீட்கும் வாசவதத்தை நாடகம் நயமாக தரப்பட்டுள்ளது. நற்சுவை தரும் நாடக நூல்.

முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us