முகப்பு » கட்டுரைகள் » நல்லுரைக்கோவை

நல்லுரைக்கோவை

விலைரூ.280

ஆசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்

வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நல்ல உரைநடையுடன் வெளிவந்திருக்கும் நல்லுரைக் கோவை என்னும் நூல், நான்கு தொகுதிகளும் ஒரே பதிப்பாக, 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு ஒரு விருந்து எனலாம். மொத்தம், 57 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. நூலின் கடைசி பக்கத்தில், உ.வே.சா., நூல் நிலையம் வெளியிட்டுள்ள நூல்கள் விலையுடன் அச்சிட்டிருப்பது ஓர் உபரித் தகவல்.
ஊர் ஊராகச் சென்று, இரவு, பகல் எல்லாம் ஒரே நினைவாக, சுவடிகளைத் தேடிச் சென்று, அவற்றை செப்பம் செய்து வெளியிட்டார். சொல்லரிய பல துயரங்கள் பட்டாலும், சோர்வு இல்லாமல் உழைத்து, தன்னிகரற்ற தமிழுக்குத் தன் தளராத உழைப்பால், தன்னலம் பாராது தொண்டு செய்தார் உ.வே.சா., என்றால் மிகையன்று.
இந்த நூல் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் கலைமகள், ஆனந்த விகடன், தினமணி, தாருல் இஸ்லாம், சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் வெளிவந்தனவாகும். சில கட்டுரைகள் ஆசிரியர் உ.வே.சா., ஆற்றிய சொற்பொழிவுகளாகும்.
இந்தக் கோவையில் உ.வே.சா., பத்துப்பாட்டு பதிப்பிற்காகப் பல இடங்களில் ஏடு தேடிச் சென்ற அனுபவத்தை உதிர்ந்த மலர்கள், நிலவில் மலர்ந்த முல்லை ஆகிய கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.
உ.வே.சா., நூல் நிலையத்தில்  காப்பாட்சியர் தம் பதிப்புரையில், தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்கள் ஆகியவற்றைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கு உதவி வரும், ‘தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களை நன்றி உணர்வோடு குறிப்பிட்டுள்ளார்.  
‘தினமலர்’ நாளேடு, தமிழ் மொழிக்குச் செய்து வரும் தொண்டுகளில் இதுவும் ஒன்று.
முதல் பாகம், 8  தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் தலைப்பு தருமம் தலைகாக்கும். இந்தக் கட்டுரையில் ஆங்கரை சுப்பையர் என்ற செல்வவானின் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவம் சுவையுடன் விளக்கப்பட்டுள்ளது.
பண்டைக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்னும் தலைப்பு, 1936ல் பள்ளியில் நிகழ்ந்த சொற்பொழிவின் வெளிப்பாடாகும். அன்று இருந்த குருகுலக் கல்வி முறையைப் பற்றி அறிய முடிகிறது.
ஆசிரியருக்குக் கணக்காயர் என்ற பெயர் உண்டு. திண்ணைப் பள்ளிக்கூடங்கள், மன்றங்கள், பள்ளிகள், தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், பள்ளிப் பயிற்சி வித்தியாரம்பம், மையாடல், மணலில் எழுதுதல், கையெழுத்து, எழுத்தின் வடிவம், மனனப் பயிற்சி, விடியற்காலையில் எழுதுதல் முதலிய உட்தலைப்புகள், பண்டைக் காலக் கல்வி முறையைக் கண்முன் படம் பிடித்துக் காட்டுகிறது.
இரண்டாவது பாகத்தில், என் நோக்கம் முதலாக, 14 தலைப்புகள் உள்ளன. இதில் ராஜவைத்தியம் என்ற சிறுகதை, ஆனந்த விகடனில், 1937,  ஜன., 31ல் வெளிவந்தது.  நகைச்சுவையாகவும், சமயோசிதமாகவும் ராஜவைத்தியம் நிகழ்ந்த வரலாற்றை விளக்குகிறது.
மூன்றாம் பாகத்தில், 15 கட்டுரைகள் உள்ளன. எல்லா தலைப்புகளும் தெளிந்த நடை, ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
நான்காம் பாகத்தில், ‘திருடனைப் பிடித்த வினோதம்’ என்ற தலைப்பில், 1938ம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்துள்ளது. நள்ளிரவில் வீட்டுச் சமையல்காரனைத் திருடன் என்று மடக்கிப் பிடித்து, விளக்கு வெளிச்சத்தில் பார்த்த பின் தான், சமையல்காரன் என்பதை அறிந்து அனைவரும் நகைத்து விட்டனர்.
இதில் உள்ள கட்டுரைகள் சிரிக்க, சிந்திக்க, வாழ்வைச் செம்மைப்படுத்த உதவும் என்பதில் ஐயம் இல்லை. நல்லுரைக் கோவை நூலைப் படித்து, சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த நாட்டு நடப்பை நாம் அறியலாம்.
பேரா., முனைவர் இரா.நாராயணன்

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us