முகப்பு » ஆன்மிகம் » கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா

விலைரூ.225

ஆசிரியர் : வேணு சீனுவாசன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்நூல் சார்ந்த மார்க்கத்தின் செய்திகளுள் சில, பலவற்றை எளிய நடையில் எடுத்துரைக்கும் நூலாகும். இறைவியின் நாம ரூப பேதங்களில் காளிகாதேவி என்பதும் ஒன்று.
இந்நூலாசிரியர் தேவிபாகவதம், புராணங்கள், தல வரலாறுகள் போன்றவற்றை திரட்டி கற்று இந்நூலை படைத்துள்ளார். மொத்தம், 47 தலைப்புகளில் வழங்கியுள்ள இவரின் அரிய முயற்சி பாராட்டுக்குரியது.
அனுக்ரகத் தாயான அவள் வடிவம் கோர வடிவம்; உபாசகர்களுக்கு வரம் கோர உரிய ஆனந்த சொரூபம். எனவே, அவளை இல்லங்களிலும் எழுந்தருள செய்து வழிபடலாம் என்பதை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்; இல்லங்களில்  காளி வழிபாடு செய்ய நியமங்கள் முக்கியமாகின்றன.
மூன்று தலைப்புகளில் தமிழிலக்கியங்களில் உள்ள செய்திகளை திரட்டியுள்ளார். பாலை நிலக் கடவுள் துர்க்கை. பரணி இலக்கியங்கள் பாலைக்கடவுளாக காளியைக் கூறும்.
அகப்பொருள் விளக்கம் இவ்வேறுபாட்டை கற்பிக்கும். இந்நூலாசிரியரும் துர்க்கையை பற்றியனவும், காளியை பற்றியனவுமாகிய செய்திகளை இணைத்தே நூலை வழி நடத்துகிறார்.  துர்க்கையை யுத்த சக்தி என்றும், காளியை உக்ரசக்தி என்றும் கூறுவர்.
பாரதம் முழுமையிலும்  பிரசித்தமான காளி கோவில்களில் சற்றொப்ப அனைத்தையும் புராண செய்திகளுடனும், வரலாற்று நிகழ்வுகளுடனும் செல்லும் வழி காட்டுதலுடனும் இந்நூல் தெரிவிக்கிறது.
மூன்று கரங்களுடன் அருள்பாலிக்கும் மாகாளிக்குடிகாளி, விநாயகருக்கும் முன்னதாக பூசிக்கப்பெறும் காட்டுமாவடிகாளி முதலிய தனிச்சிறப்புகளுடைய காளி கோவில்களை பற்றிய செய்திகள் வியப்புடன் கூடிய பக்தியை மிகுவிக்கின்றன.
காளி மந்திரங்களாக பதினெட்டு என இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளார். காளி மூல மந்திரம் என எந்த மந்திரத்தை குறிப்பிட்டுள்ளாரோ, அதே மந்திரத்தை
தட்சிணகாளி மூல மந்திரம் என பின்னரும் குறிப்பிட்டுள்ளார். அம்மந்திரத்தில், ‘தக் ஷிணே காளிகே’ என வருதலால் அது தட்சிணகாளி மந்திரமேயாகும்.
மிகப் பலரும் அறிந்த சென்னை காளிகாம்பாள் கோவில் வரலாறு இந்நூலுள் விரிவாக கூறப்பட்டுள்ளதுடன், அது முதலாக, தமிழகத்தின், 50 காளி கோவில்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. சாக்தத்தில் குரு, தேவி, மந்திரம் மூன்றும் சமம். எனவே, குரு உபதேசமே மந்திர சித்திக்கு முக்கியம் என்பதை இவ்விடங்களில் அழுத்தமாக வற்புறுத்தியிருக்க வேண்டும்.
முன்னுரையில் காளி வழிபாட்டினால் பெரும்புகழ் பெற்றோரை குறிப்பிடுவது சிறப்பானதே எனினும் காளமேகப் புலவனை, ‘மூர்க்கன்’ என்றும், காளிதாசனை, ‘மூடன்’ என்றும் நாம் குறிப்பது முற்றிலும் சரியன்று.
ம.வே.பசுபதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us