முகப்பு » கட்டுரைகள் » பார்த்தது, கேட்டது, படித்தது பாகம் –19

பார்த்தது, கேட்டது, படித்தது பாகம் –19

விலைரூ.340

ஆசிரியர் : அந்துமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சமீபத்தில், சென்னையில் நடந்து முடிந்த பிரமாண்டமான புத்தகக் கண்காட்சியில், பார்வையாளர்களை ஈர்த்த அரங்குகள் வரிசையில், ‘தாமரை பிரதர்ஸ்’ அரங்கும் ஒன்றாகும்!

சில வருடங்களுக்கு முன், நான்கே புத்தங்களுடன் துவங்கிய, ‘தாமரை பிரதர்ஸ்’ பதிப்பகம், இன்று, ஆன்மிகம், கதை, கவிதை, கட்டுரை மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் என, 400க்கும் மேற்பட்ட தலைப்புகளுடன் அபார வளர்ச்சி கண்டுள்ளது.

தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தில் பிரதானமாக விற்பது, அப்போதும், இப்போதும், எப்போதும் அந்துமணியின் புத்தகங்களே! புத்தகக் கண்காட்சிக்கு வந்த பலரும், அந்துமணி இதுவரை எழுதிய பா.கே.ப.,வின், 18 புத்தகங்கள் மற்றும் அந்துமணியின் பதில்கள் – 8 தொகுப்பையும் மொத்தமாக வாங்கிச் சென்றதைப் பார்க்கும் போது, அந்துமணியின் எழுத்துகள் மீது வாசகர்கள் வைத்திருக்கும் மதிப்பைப் பார்த்து வியப்பு மேலிட்டது.

இப்படி அந்துமணியின் புத்தகங்களை வாங்கிச் சென்றவர்கள், அதை அலமாரிகளில் அடுக்கி வைத்து, வெறுமனே வேடிக்கை பார்க்காமல், ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு, அடுத்து, அவர் எழுதிய எந்தப் புத்தகம் வருகிறது என்று விடாமல் கேட்டதன் விளைவே, பா.கே.ப., – 19ம் பாகம்!

எப்போதும் வாசகர்களுக்கு புதிய விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதில், அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் நம் அந்துமணி; இப்புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களிலேயே, அதை நாம் காண முடிகிறது.

சாரசரி மனிதரா நீங்கள்?

உண்டதையே உண்டு, உடுத்தியதையே உடுத்தி, பேசியதையே பேசி, செய்ததையே செய்து வாழும் சராசரி மனிதரா நீங்கள்?

இல்லை மாறுபட்டு சிந்தித்து, செயல்பட துடிப்பவரா?

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை, நீங்களே எடை போட்டுக் கொள்வது எப்படி என்பதை, சில பல கேள்விகள் மூலம் விளக்கியுள்ளார். வாசகர்களுக்கு இந்தப்பகுதி மிகவும் பிடிக்கும்!

உலகம் முழுதும் ஏகப்பட்ட தீவுகள் உள்ளன; ஆனால், அத்தீவுகள் எப்படி உருவாகின்றன என்பதை எளிமையாக விளக்கியுள்ளார்.

விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் ஆர்வில், வில்பர் ஆரம்ப கால வாழ்க்கையை சொல்லியிருக்கும் விதம் வெகு சிறப்பு!

வேலை கிடைச்சாச்சு:

நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட அந்துமணி, இப்புத்தகத்தில், வாசகர்களுக்கு நிறைய நகைச்சுவைகளை வாரி வழங்கியுள்ளார்.

போலீஸ் வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தனர்; உள்ளே நுழைந்தவனிடம்,‘யார் காந்தியைக் கொன்றது?’ என்று கேட்டார் அதிகாரி. நுழைந்தவன், ‘தெரியாது’ என்றதும், தனக்கு வந்த கோபத்தை வெளிக்காட்டாமல், ‘முதல்ல அதைத் தெரிஞ்சுகிட்டு வா...’ என்று சொல்லியிருக்கிறார்.

வெளியே வந்தவனிடம் அவனது நட்புகள், ‘இன்டர்வியூ என்னாச்சு?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அவன், ‘எனக்கு வேலை கிடைச்சுடுச்சு; உடனே ஒரு கொலை கேசை விசாரிக்கச் சொல்லிட்டாங்க...’ என்றானாம்!

இன்னொரு போலீஸ் சம்பவம்...

கடமையில் கண்ணான போலீஸ் அதிகாரி, ஜீப்பில் போய்க் கொண்டு இருந்தார். புதிதாக சேர்ந்த டிரைவரிடம், தான் எவ்வளவு பெரிய சாமர்த்தியசாலி என்பதை காட்ட நினைத்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் கூட்டமாக சிலர் நின்றிருந்தனர். ஜீப்பை விட்டு இறங்கிய அந்த அதிகாரி, கம்பை சுழற்றியபடி, ‘என்ன இங்கே ஒரே கூட்டம்... கிளம்புங்க... கிளம்புங்க’என்று சொல்லி, அக்கூட்டத்தை விரட்டி கலைந்து போகச் செய்தார்.

பின், டிரைவரிடம், ‘எப்படி நான் கூட்டத்தை கலைச்சேன் பார்த்தியா...’ என்று பெருமைப்பட்டாராம்.

அதற்கு அந்த டிரைவர், ‘சார்... அது ஒரு பஸ் ஸ்டாப்; நின்னவங்க எல்லாம் பஸ் ஏற வந்தவங்க...’ என்றாராம் பணிவுடன்!

அண்ணாச்சி குறுக்கீடு:

அந்துமணி அடிக்கும் ஜோக்குகள் போதாது என்று, அவ்வப்போது அண்ணாச்சியும், ‘ஜோக்’ அடிக்கிறார். சீரியசான விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது,‘ஏலே லெஞ்சு... எனக்கு கொறிக்கிறதுக்கு கொஞ்சம், ‘பன்னி டிக்கி’ கொடுவே...’ என்கிறார்.

டென்ஷனாகிப் போகும் லென்ஸ், ‘யோவ் அது பன்னி டிக்கி இல்ல; ‘பனீர் டிக்கா!’ அதாவது, பாலாடைக்கட்டி... சும்மா வாய்க்கு வந்ததைச் சொல்லி படுத்தாதேயும்...’ எனும் போது எழுந்த சிரிப்பை, அடக்க வெகு நேரமாகிற்று. இது போல அண்ணாச்சி அவ்வப்போது குறுக்கிட்டு, புத்தக வாசிப்பை சுவராசியமாக்குகிறார்.

அயலக கவிஞர் மில்டன் எழுதிய புத்தகங்களில் இரண்டு, புகழ் பெற்றவையாகும் ஒன்று, ‘இழந்த சொர்க்கம்’ மற்றொன்று, ‘மீண்ட சொர்க்கம்!’

‘எந்த சூழ்நிலையில் இந்த இரண்டு புத்தகங்களை எழுதினீர்கள்?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘திருமணமான புதிதில் எழுதியது, ‘இழந்த சொர்க்கம்!’ அவள் தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், நான் தனிமையில் இருந்த போது எழுதியது, ‘மீண்ட சொர்க்கம்!’ என்றாராம்.

லென்ஸின் தத்துவம்:

அடிக்கடி அங்கிள் ஜானியுடன் பேசப் போய்விடும் லென்ஸ் மாமா கூட, இப்புத்தகத்தில் கொஞ்சம் பக்கங்கள் எடுத்துக் கொண்டு, ‘உங்கள் இல்லம் சொர்க்கமா, நரகமா?’ என்று கேட்டுள்ளார். கூடவே, இல்லம் சொர்க்கமாக இருக்க, அதற்கு தேவையான டிப்ஸ்களையும் கொடுத்து, தனக்குள் எப்பவும், ‘சரக்கு’ உண்டு என்பதையும் நிரூபித்துள்ளார்.

‘படித்தவனெல்லாம் அறிவில் சிறந்தவனுமல்ல; படிக்காதவனெல்லாம் முட்டாளுமல்ல’ என்று சொல்லிவிட்டு, அதற்கு ஒரு நிஜக் கதையை சொல்லியிருக்கிறார் பாருங்கள் அருமையோ அருமை!

ஒருவர், ஒரே ஒரு பாட்டில் உயர்வது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று, சினிமா பாடல் காட்சிகளை உதாரணமாகச் சொல்லி, சிலர் விமர்சிப்பது உண்டு. அது எப்படியோ தெரியாது; ஆனால், ஒரே பதிலின் மூலம், வீழ்ந்து கிடந்த வாசகி ஒருவரை, அமெரிக்காவின் தொழிலதிபராக உயர வழி வகுத்திருக்கிறார் அந்துமணி என்ற நிஜத்தை அறியும் போது, நெஞ்சம் நெகிழ்கிறது.

இதே போல, ‘என்ன வாழ்க்கை இது... மாமானார், மாமியார், கணவர், பிள்ளைகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு... அவர்களது தேவைகளை மட்டுமே கவனித்துக் கொண்டு, பிடித்த புத்தகத்தை படிக்க முடியவில்லை; தோழிகளோடு இரண்டு வார்த்தை சந்தோஷமாக பேச நேரமில்லை. என் சந்தோஷத்திற்காக என்னால் வாழவே முடியவில்லை...’ என்று வேதனையைக் கொட்டி, கடிதம் எழுதியுள்ளார் ஒரு வாசகி.

இவருக்கு அந்துமணி கூறிய பதில், இவரைப் போல குமுறலுடன், குடும்ப பாரம் சுமக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கான பதிலாகும்!

தேர்தல் வந்தாச்சு:

நாடாளுமன்ற தேர்தல் நடக்கப்போகும் காலம் இது என்பதால், தேர்தல் பற்றிய பல அதிசய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில் செவ்வாய் கிழமை மட்டுமே, ஒட்டுப்பதிவு நடைபெறும்; இப்படி ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும் தேர்தல் நேரத்து வேடிக்கைகள் பற்றி, நிறைய தகவல்களை ரசிக்கும்படியாக தந்துள்ளார்.

உங்களுக்கு முயல் –ஆமை கதை தெரிந்திருக்கும்; ஆனால், அந்துமணி சொல்லும் முயல் –ஆமை கதை தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை இது!

எப்போதுமே பழைய வரலாற்றை ஒரு பாய்ச்சலுடன் புரட்டிப் பார்ப்பது, அந்துமணிக்கு மிகவும் பிடிக்கும். இப்புத்தகத்தில் ராஜஸ்தான் மன்னராக இருந்த, ராஜா ஜெய்சிங் பற்றி எழுதியுள்ளார். படிக்கும் போது இப்படி எல்லாம் கூட மனிதர்கள் அல்ல; மன்னர்கள் வாழ்ந்துள்ளனரா என ஆச்சர்யம் மேலிடுகிறது.

குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்தும் அமைப்பு, சீட்டோ போபியா, கைதட்டுவதால் ஏற்படும் பலன்கள், ஒரு மனிதனின் வெற்றி என்பது எது என்று, ஏகப்பட்ட தகவல்களை தந்திருக்கிறார்.

இதில், மனிதனின் வெற்றி என்பது, நல்ல விஷயங்களை தள்ளிப்போடாமல் செய்து முடிப்பதும் அதில் ஒன்றாகும். அந்துமணியின் இப்புத்தகத்தை உடனே வாங்கி படிப்பது மிகவும் நன்றாகும்!

– எல்.முருகராஜ்

புல் அவுட் ஒன்று:

உண்டதையே உண்டு, உடுத்தியதையே உடுத்தி, பேசியதையே பேசி, செய்ததையே செய்து வாழும் சராசரி மனிதப் பிறவியா நீங்கள்?

புல் அவுட் இரண்டு:

அடிக்கடி அங்கிள் ஜானியுடன் பேசப் போய்விடும் லென்ஸ் மாமா கூட, இப்புத்தகத்தில் கொஞ்சம் பக்கங்கள் எடுத்துக் கொண்டு, உங்கள் இல்லம் சொர்க்கமா, நரகமா? என்று கேட்டுள்ளார். கூடவே, இல்லம் சொர்க்கமாக இருக்க, அதற்கு தேவையான டிப்ஸ்களையும் கொடுத்து, தனக்குள் எப்பவும், ‘சரக்கு’ உண்டு என்பதையும் நிரூபித்துள்ளார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us