அம்மா 100
நலமுடன் 100 வயதில் வாழும் மூதாட்டியின் சிறப்பியல்புகளை பதிவு செய்துள்ள புத்தகம். திருச்சி, சிக்கதம்பூர்பாளையம் கிராமத்தில் 1926ல் பிறந்து, பெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூரில் வாழ்ந்து வருகிறார் மூதாட்டி சீதாலட்சுமி மாணிக்கம். இவருக்கு எட்டு பிள்ளைகள்.இதில், நான்கு மகன்களில் ஒருவரான பிரபல ‘டிவி’ நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா, தாயை போற்றும் வகையில், 100 தகவல்களுடன் இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளார். குடும்பம் குறித்த தகவல்கள் நேர்த்தியாக முதலில் தொகுத்து தரப்பட்டுள்ளது. மருத்துவர் உதவியின்றி வீட்டிலே ஏழு குழந்தைகள் பிரசவித்த தகவல் ஆர்வம் ஊட்டுகிறது. நுாறு வயதில் வாழும் மூதாட்டியின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், உணவுமுறை, பொழுதுபோக்கு விபரங்கள் படிப்பினை தருகின்றன. நலத்தில் முக்கியத்துவம், விரும்பிய வண்ணத்தில் உடை தேர்வு, கலை உள்ள பாங்கு, பூத்தொடுப்பதில் புதுமை நடைமுறை, பூச்சூடுவதில் கறார் தன்மை என சுவாரசியங்கள் நிறைந்துள்ளன.அக்கம் பக்கத்தவருடன் நட்புறவு, அறிவு சார்ந்த பரிமாற்றம், வாழ்வின் கடின காலங்களை தளர்ச்சியின்றி சமாளித்த திறன், உழைப்பு மீது கொண்டுள்ள நம்பிக்கை என, அனுபவ பாடங்கள் உள்ளன. நவீன வசதிகளை தவிர்த்து, கிராமத்தில் இயற்கையுடன் ஒன்றி எளிமையாக வாழும் சிறப்பியல்பு எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.புத்தகத்தில் 100வது தகவலாக மூதாட்டியின் தனித்துவ ஆளுமைத்திறன் விவரிக்கப்பட்டுள்ளது. முடிவு எடுப்பதில் உறுதி, நபர்களை சரியாக எடை போடுவது, கம்பீர செயல்பாடு போன்ற சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் வண்ணப்படங்களுடன் புதுமை நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. நெகிழ்ச்சி தரும் அனுபவங்கள் நிறைந்த நுால்.– அமுதன்