/ புத்தக மதிப்புரை / பிறந்த நாள்

₹ 500

திருப்பங்களுடன் படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். வறுமையான குடும்பப் பின்னணியில் தாத்தா பராமரிப்பில் வளர்கிறாள் மேனகா. பணம் இன்மையால் பல்வேறு அவமானங்களை சந்திக்கிறாள். கடும் முயற்சியுடன் உழைத்து முன்னேற முயற்சிக்கிறாள். கல்லுாரியில் படிக்கும் தேவன் என்பவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசி பழகுகின்றனர். இந்நிலையில், தாத்தா சேமிப்பில் சிறிது வைப்பு நிதி இருப்பதை அறிகிறாள் மேனகா. அதை மூலதனமாக்கி தொழில் செய்து சம்பாதிக்கும் லட்சியத்துடன் சென்னை நகருக்கு செல்கிறாள். அங்கு, அவளது வாழ்க்கை சுழல்வது, நாவலில் ஒரு கருத்தாக உள்ளது. மற்றொருபுறம் மிகப்பெரிய பணக்காரர் ரங்கநாயகத்தின் தத்துப்பிள்ளையாகிறான் தேவன். சென்னையில் மிகப்பெரிய மாளிகையில் தங்குகிறான். அங்கு, பணக்காரரின் இரண்டு மனைவியர் மற்றும் அவரது உறவினரான இளம்பெண்ணுடன் ஏற்படும் பிணைப்பு மற்றும் பிணக்கு களுடன் சுழல்கிறது. கதையில் நிகழ்வுகள் மிக இயல்பாக உரையாடல் வழியாக கூறப்பட்டுள்ளன. இறுதியில், மேனகா, தேவன் வாழ்வு என்னவாக மாறுகிறது என்பது விறுவிறுப்பான நடையில் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் பணக்காரர் ரங்கநாயகத்தை முதன் முதலாக தேவன் சந்திப்பது உட்பட, ஒவ்வொரு நிகழ்வும் காட்சிமயமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. காதல், குடும்ப பிணைப்பு, பொருளாதாரம் சார்ந்த போராட்டம் என உலா வருகிறது. வத்தலக்குண்டு, சென்னை நகரைச் சார்ந்து கதைக்களம் சுழல்கிறது. அன்றைய நிலையை படம் பிடிக்கிறது. காதல், குடும்ப உறவில் சிக்கல் கள் மற்றும் பணம் சார்ந்து திருப்பங்களுடன் அமைந்துள்ளது. குமுதம் நிறுவிய ஆசிரியர் எஸ்.ஏ.பி.,யின் படைப்பு, அவரது நுாற்றாண்டில் மறுபதிப்பாக மலர்ந்துள்ளது. – மதி