/ ஆன்மிகம் / ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

₹ 400

தமிழகத்தில் தலபுராணங்கள் மிகுதியும் பாடிய பெருமைக்குரியவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். சிறந்த தமிழறிஞர் உரையாசிரியர். பாடஞ்சொல்லிக் கொடுப்பதை, வாழ்நாள் விரதமாகக் கொண்டவர். தமிழ்த்தாத்தா உ.வே.சா.,வின் ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர்.உ.வே.சா., இந்த நூலில், 1815 முதல், 1876ம் ஆண்டு வரையிலான பிள்ளையவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். அவரது கடிதங்கள், நூற்சிறப்புப் பாயிரங்கள் முதலியவற்றோடு, காலமுறை பிறழாமல் பல நிகழ்வுக் குறிப்புகளைச் சொல்லிச் செல்கிறார்.தம்முடைய ஆசிரியரிடத்து மதிப்புடைய காரணத்தால், உ.வே.சா., அவரை, மிக்க மரியாதையோடு, நூல் முழுவதும் ‘அவர்’ என்றே சுட்டுகிறார்.‘பிள்ளையவர்களை இவ்வாறு பெயர் குறித்தெழுதுவதற்கு அஞ்சுகிறேன்’ என்றே உ.வே.சா., குறித்துள்ளார். அன்றைய காலக்கட்டங்களில், பாடங்கேட்கும் நிலையை, உ.வே.சா., பின் வருமாறு குறிக்கிறார். ‘ஆசிரியர்களை பத்திரபுஷ்பங்களால் அர்ச்சித்து வந்தனம் செய்தபின், புத்தகங்களைப் பெற்றுக் கொள்வது; போகச் சொன்ன பிறகு போக வேண்டும்’ (79) என்று தெரிவிக்கும்போது, இன்றுள்ள கல்வி கற்கும் நிலையோடு எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது.பிள்ளையவர்களிடம், தமது 17வது வயதில், மாணவராக சேர்ந்ததை, நூலின் இரண்டாம் பாகத்தில், உ.வே.சா., எழுதுகிறார். பிள்ளையவர்களின் உடல்நிலை தளர்ந்து, சிவபதவி அடைந்த சம்பவத்தை படிக்கும் எவருக்கும், கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீராவது வெளிப்படாமல் இருக்காது. (இரண்டாம் பாகம் பக். 246 – 248).நூலின் இறுதிப் பகுதியில் உ.வே.சா., பிள்ளையவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களை, அவரது செய்யுள் இயற்றும் திறம், புலமையாற்றல் முதலியவற்றைப் பதிவு செய்துள்ளார். ஆசிரியர் – மாணவர் உறவு அக்காலக் கல்விச் சூழ்நிலையில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தது என்பதை இந்த நூல் ஆழமாகக் குறிப்பிட்டுள்ளது. பிறருடைய வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு மாதிரி ஆவணம். ஆங்கில இலக்கிய வரலாற்றில் ஜான்சனுக்கு எப்படி பாஸ்வெல் அமைந்தாரோ, அதேபோல் பிள்ளையவர்களுக்கு உ.வே.சா., அமைந்தார் என்பதை இந்த நூல் வழி அறிந்து கொள்ளலாம்.ராம.குருநாதன்


முக்கிய வீடியோ