திருப்பதி லட்டு – திருமலையின் சுவாரஸ்யங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பற்றி ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய நுால். இதுவரை அறியாத தகவல்களின் தொகுப்பாய் மிளிர்கிறது. திருப்பதி லட்டை சுவைத்து மகிழ்ந்திருப்போம். ஆனால், அதை தயாரிக்கும் முறை, அன்றாடம் எவ்வளவு பொருட்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன, எவ்வளவு லட்டு விற்கிறது... இன்னும் பல அரிய தகவல்கள் இந்த புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. லட்டின் இனிமை ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஏழுமலையான் செய்த அற்புதங்கள் ஏராளமாக இருக்கின்றன. திருப்பதியில் காணிக்கையாக குவியும் கோடிக்கணக்கான பணத்தை எண்ண வேண்டும், அதைக் கண்ணால் காண வேண்டும் என்று ஆசை இருந்தால் பக்தர்கள் அதில் பங்கேற்க முடியும். அதற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன அவற்றை கடைபிடிக்கும் வகையில் நடைமுறை விளக்கம் புத்தகத்தில் இருக்கிறது. சீனிவாச பெருமாள் உண்டியலில், இவ்வளவு பணம் சேரும் என்ற ரகசியத்துக்கு விடையும் இருக்கிறது. நமக்கெல்லாம் லட்டு தரும் ஏழுமலையான், தினமும் சாப்பிடுவது என்ன தெரியுமா... அதிலும் ஒரு சாதாரண பாத்திரத்தில்... திருப்பதியில் தினமும் காலையில் சுப்ரபாதம் கேட்கும். ஆனால், ஒரே ஒரு மாதம் மட்டும் கேட்காது. காரணம் என்ன... அப்படியானால், அந்த மாதத்தில் வேறு என்ன பாடி, வேங்கடவனை எழுப்புவர்... இப்படி பல பல அதிசய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அனுபவமிக்க பத்திரிகையாளர் பி.சுவாமிநாதன், இதை எளிய நடையில் எழுதியுள்ளார். ஏழுமலையானை தரிசிக்க செல்லும் முன், இந்த புத்தகத்தை படித்து சென்றால், திருப்பதியில் மேலும் அதிசயங்களை கண்டு வர முடியும். – தி.செல்லப்பா




