முகப்பு » ஆன்மிகம் » செந்தமிழ் முருகன்

செந்தமிழ் முருகன்

விலைரூ.200

ஆசிரியர் : ப. முத்துக் குமாரசுவாமி

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 432)

தண்ணீரே முதற்படைப்பு. அதிலிருந்து மலையும், அதைச் சார்ந்து மண்ணும், மண்ணிலிருந்து மற்றவை எல்லாமும் விளைந்தன. எனவே, மக்கள் பிறந்த இடம் மலையகம், மலைத் தெய்வமே முதல் தெய்வம். மலைத் தெய்வம் முருகன். ஆகையால், முருகனே முழுமுதல்வன். அவனுடைய முழு

முதன்மையை நிறுவுதலே நூலின் அடிநாதமான நோக்கம். இந்தக் கருதுகோளை நிறுவுவதற்கான ஆதாரங்களை எல்லா வகையிலும் திரட்டியிருக்கிறார் ஆசிரியர்.

முருகன் யார்? அவனுக்கான பல்வேறு பெயர்கள் என்னென்ன? அந்தப் பெயர்களை அவன் பெற நேர்ந்ததன் பின்னணி என்ன? அவ்வப் பெயர்களுக்கான உருவங்கள் என்னென்ன? அந்த உருவங்கள் தாங்கியிருக்கிற அணிகள், ஆயுதங்கள் எவை? அவற்றுக்குக் குறியீட்டுப் பொருள் ஏதும் உண்டா?

முருகனை மையம் கொண்டு ஆடப்படுகிற கூத்துகள் எவை? முருகனுக்கு வழிபாட்டு முறைகள், நோன்புகள், மந்திரங்கள் எவை? பழந்தமிழ் இலக்கியங்களிலும் வேத ஆகமங்களிலும் முருகனைப் பற்றி எங்கெங்கு குறிப்புகள் வருகின்றன? அகத்தியர், அவ்வையார் முதலிய அருளாளர்கள் பார்வையில் முருகன் வெளிப்படும் விதம் எவ்வாறு? கந்த புராணம், திருமுருகாற்றுப்படை முதலிய நூல்களில் முருகன் எவ்வாறு முன்னிறுத்தப்படுகிறான்? ஆதிசங்கரரால் வகை பிரிக்கப்பட்ட ஆறு சமயங்களில், குமரனை முதற்கடவுளாக வழிபடும் சமயமான கவுமாரம் என்பதில் முருகன் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறான்? குமரன் குடி கொண்டிருக்கும் குன்றுகளும் கோயில்களும் எவை? அவற்றின் தல வரலாறுகள் என்ன? அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுச் செய்திகள் என்ன? என்பவற்றை எல்லாம் ஆசிரியர் தெளிவாகத் தொகுத்து தந்திருக்கிறார். முருகனைப் பற்றி ஆய்வு செய்திருக்கிற மேனாட்டு அறிஞரான கமில் சுவலபிலுடைய நூலில் இருந்து விரிவான மேற்கோள்கள் காட்டியிருக்கிறார்.

தமிழ்க் கடவுள் என்றும், வேதங்களுக்கு முந்தைய கடவுள் என்றும் முருகனைச் சொல்கிற ஆசிரியர், வேதங்களுக்கு முந்தைய அந்தத் தமிழ்க் கடவுள் வடமொழி மந்திரங்களால் துதிக்கப்படுகிற நிலைக்கான இடைநிகழ்வுகளைப் பேசியிருக்கலாம். இந்த முரண்பாட்டை அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

முருகனை முதற்கடவுளாக ஊன்றி நிறுத்திவிடுகிற தீர்மானத்தோடு எழுந்த முதல் நூலான திருமுருகாற்றுப்படையைக் காட்டிலும் காலத்தால் அதற்கு மிகவும் பிந்திய கந்த புராணத்தையே ஆசிரியர் முதன்மையானதாகக் கருதுவதாகத் தெரிகிறது. புராணம் என்று பெயர் பெற்று விட்ட காரணத்துக்காக அதற்கு முதலிடம் என்றால் சைவத் திருமுறைகளில் பெரிய புராணத்தைத் தான் முதல் திருமுறையாக கொள்ள வேண்டும்.

நல்ல கட்டமைப்பில் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது நூல். முருகனைப் பற்றிப் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் செய்திகளை ஓரிடத்தில் அறிய விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல நூல் தான்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us