முகப்பு » இலக்கியம் » ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும்

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும்

விலைரூ.300

ஆசிரியர் : முனைவர் பெ.ராஜேந்திரன்

வெளியீடு: காவ்யா

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைச் சிறப்பாக விவரித்து, கல்வெட்டு, செப்பேடு, மெய்கீர்த்தி மற்றும் இலக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொல்தமிழர் வாழ்வியல் அடையாளங்களை விளக்கிக் கூறும் நுால்.
அகழாய்வில் கிடைத்த பொன், இரும்புக் கருவிகள், மண்பாண்ட எச்சங்கள், வெண்கலப்பொருட்கள், வேளாண் பொருட்கள், நுண்கலைப் பொருட்கள், தாழிகள், தங்கப் பட்டைகள், மனித எலும்புகள், போர்க்கருவிகள் மற்றும் தரவுகளைத் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் அரசு ஆவணங்கள், கள ஆய்வு தரவுகள் மற்றும் சங்க இலக்கியச் சான்றுகளுடன் பொருத்திக்காட்டி வழங்கியிருப்பது சிறப்பு. 

ஆதிச்சநல்லுார் பெயர் காரணம், அதற்கான ஆதார முறை, புராண முறை,  வாய்மொழி முறை, கள ஆய்வு முறையில் எழுந்த மாறுபட்ட முடிவுகள் சுவைபட விளக்கப்பட்டுள்ளன.  
வேளாண்குடி மன்னர் மரபினரான ஆதிநித்தன் குடும்பன் பெயராலேயே ஆதிச்சநல்லுார் எனும் பெயர் வந்ததாக முன்வைத்து, அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளில் காணப்பட்ட பண்பாட்டுக் கூறுகளை விளக்கி ஆவணச் சான்றுகளோடு தகவல்களை விவரிக்கிறது நுால்.

பாண்டியரின் பெயர் காரணங்களுடன் வரலாற்றுக் குறிப்புகளைக் கூறும் கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், வேள்விக்குடி பட்டயங்கள், செப்பேடுகள், காசுகள், நினைவுச்சின்னங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் பிற நாட்டவர் குறிப்புகள் விபரமாகத் தரப்பட்டுள்ளன.    
தமிழர்களின் ஈமச்சின்னங்கள், போர்க்கருவிகள், இரும்பு ஆயுதங்கள், கோடாரிகள், வெண்கலச் சிலைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு, கொற்கையில் 3,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டதைக் காட்டும் செய்திக் குறிப்பு வியப்பைத் தருகிறது.

சங்க இலக்கியங்களைப் பற்றிய குறிப்புரைகளும், பாடல் வரிகளின் வாயிலாகக் கூறப்படும் மன்னர்களின் விபரங்கள், மரபுகள் மற்றும் இறையாண்மைத் தகவல்களோடு தொல்மக்களின் வாழ்வியல் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் விபரமாகத் தரப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களும், ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் புலப்படுத்தும் மக்கள் வாழ்வியல் கூறுகளோடு வேளாண் மற்றும் தொழில் மரபுகள் சிறப்புற விளக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.

மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us