முகப்பு » வரலாறு » ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்

விலைரூ.400

ஆசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்

வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
ஊர் தோறும் ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஒப்பு நோக்கித் தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகத்திற்கு தந்தவர், டாக்டர் உ.வே.சாமிநாதையர். தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் போற்றும் அளவிற்குச் சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலான காப்பியங்களையும் பதிப்பித்தார். அந்த டாக்டர் உ.வே.சாமிநாதையருக்கு ஆசிரியர் என்னும் சிறப்பைப் பெற்றவர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

தமது ஆசிரியரின் வரலாற்றைத் தமிழ் உலகுக்கு ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்னும் நூலாக்கி, இரண்டு பாகங்களில் வழங்கியுள்ளார் உ.வே.சாமிநாதையர்.
நல்ல மாணவருக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் உ.வே.சாமிநாதையர். ஆசிரியரின் மனமறிந்து நடந்து கொள்ளும் நல்ல மாணவனாக இருந்ததால்தான், அவரால் நல்ல பேராசிரியராக பணியாற்ற முடிந்தது. ஆம்! கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமை உ.வே.சாமிநாதையருக்கு உண்டு. அதனால் தான், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இப்போதும் டாக்டர் உ.வே.சாமிநாதையரின் சிலை நிமிர்ந்து நிற்கிறது.

இந்நூலின் முதற் பாகம் 24 அத்தியாயங்களையும், இரண்டாம் பாகம் 12 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. இரு பாகங்களுக்கும் தனித்தனியே, ஐயரவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி தம்பதியருக்கு, 1815ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மகனாகத் தோன்றினார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் தந்தையார் ஆசிரியப் பணியை ஆற்றிவந்தார். எனவே, பிள்ளையவர்கள், தமது ஐந்தாம் வயதில் தமது தந்தையாரின் பள்ளியிலேயே கல்வியைத் தொடங்கினார்.

பிள்ளையவர்களுக்கு, 15 வயதாகும்போதே அவரது தந்தையார் மறைந்தார். தமது கல்வியை, மேன்மேலும் வளர்த்துக் கொள்ள பிள்ளையவர்கள் திரிசிரபுரம் வந்தார். அங்கே வாழ்ந்த வித்வான்களோடு நெருங்கிப் பழகி, தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார் என்று தமது ஆசிரியரின் இளமைக் கால வரலாற்றைத் தெளிவாக எழுதியுள்ளார் உ.வே.சாமிநாதையர்.
மேலும் பிள்ளையவர்கள் திருவாவடுதுறைக்கு வந்தது. சிவதீட்சை பெற்றது.

சிற்றிலக்கியங்களைப் படைத்தது முதலான அனைத்துச் செய்திகளையும், ஐயரவர்கள் எளிய நடையில் படைத்துள்ளார். பிள்ளையவர்களின் தமிழ்க் கையொப்பத்தையும் அவர் எழுதியுள்ள ஏட்டுச் சுவடிகளில் ஒன்றையும் தெளிவாக வெளியிட்டுள்ளார். வரலாற்று ஆவணமாக விளங்கும் இந்த நூலின் நான்காம் பதிப்பானது, தினமலர், ஆசிரியர், நாணயவியல் ஆய்வாளர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நிதியுதவியுடன் வெளி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிள்ளையவர்களின் மாணவர்களான சவராயலு நாயகர், வேதநாயகம் பிள்ளை, தெய்வநாயகம் பிள்ளை, ஆரியங்காவற் பிள்ளை, அழகிரி ராஜூ முதலானோர் பாடம் கேட்ட தன்மையை விளக்கியுள்ளார்.
 
மேலும் பிள்ளையவர்கள் சென்று வந்த ஊர்கள், பார்த்து பேசிய அறிஞர்கள் அனைவரைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். பிள்ளையவர்களிடம் உ.வே.சாமிநாதையர் மாணவராகச் சேர்ந்தது முதல் உள்ள, ஒவ்வொரு வரலாற்றையும் தொடர் நிகழ்வுகளாகச் சிறு சிறு தலைப்பிட்டுப் படைத்துள்ளார்.

இந்த நூலைப் படிக்கும்போது, பத்தொன்பதாம் நூற்றாண்டில், தமிழகம் எவ்வாறிருந்தது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் புரிந்து கொள்ள முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான, இந்த உரை நடை நூல் எவ்வளவு எளிமையான மொழி நடையைக் கொண்டிருக்கிறது என்பதைப் படிப்போர் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். வாழ்க்கை எவ்வாறு இலக்கியங்களுக்கு முன்னோடி இலக்கியமாகத் திகழ்கிறது இந்த சரித்திரம்.

முகிலை இராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us