முகப்பு » கட்டுரைகள் » தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

தமிழ்ச் சமூக மரபும் மாற்றமும்

விலைரூ.500

ஆசிரியர் : முனைவர் சு. சதாசிவம்

வெளியீடு: செம்மூதாய் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘தமிழ் சமூக மரபும் மாற்றமும்’ என்ற தலைப்பில் நடந்த  பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுகளின் தொகுப்பு நூலிது. 142 ஆய்வாளர்களின்  கட்டுரைகள், 12 பதிப்பாசிரியர்கள் மூலம் தொகுக்கப்பட்டு, நூலாக வெளிவந்துள்ளது. தொல்காப்பியம் தொடர்பான எட்டு கட்டுரைகளும், சங்க இலக்கியம்  சார்ந்த, 42 கட்டுரைகளும், ‘மரபும் மாற்றமும்’ என்ற தலைப்பை உள்ளடக்கிய  வகையில், 14 கட்டுரைகளும், இடைக்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்களைச் சார்ந்து 78 கட்டுரைகளும், ஆக, 142 கட்டுரைகள், இடம் பெற்றுள்ளன.
‘கணவன் நல்லவனாக இல்லாத பட்சத்தில், அவனை விட்டு விலகி, தன் மனதிற்கேற்ற வாழ்க்கை நடத்தவும் பெண் துணிந்து விட்டாள்’ (பக். 44); இன்றைய  பெண்களிடம் ஏற்பட்டுள்ள மரபு மாற்றம், ‘வினையே ஆடவர்க்கு உயிரே எனும் மரபு  இன்று மாறி, வினையே மடவார்க்கு உயிரே என மாற்றம் பெற்றுவிட்டது’ (பக்.126); ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற பண்பாட்டிலிருந்து பிறழ்ந்து,  ஆண்களும் பெண்களும் மாறி, மரபு நிலையை மாற்றி வருகின்றனர் (பக்.148).
இன்றைய தமிழர் திருமணங்களில், மந்திரம் ஓதுதல், தீவலம் வருதல், அருந்ததி பார்த்தல் போன்ற சடங்குமுறைகள், மாற்றம் பெற்று  (பக்.182), திருமண மரபும் மாறியுள்ளது.
பண்டைய இலக்கிய காலம் முதல், தேவதாசி ஒழிப்புச் சட்டம் வரை, ஆடுவதற்கென்று ஒரு தனி இனத்தவர் இருந்தனர் (பக்.242); இன்று, நாட்டிய துறையில் பல மரபுமாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. சங்ககாலத்தில் உள்ள கூத்து, தேவராட்டம் போன்ற கலைகள் இன்று இல்லை.
அனேக கலை செல்வங்களை இழந்துவிட்டோம் (பக்.262). நாட்டு மருத்துவரின்மையால், அலோபதி மருத்துவம் பார்க்க வேண்டிய  நிலை; இயற்கை மருத்துவத்தை தெய்வமாகக் கருதிய சமூகம், தன் அடையாளத்தை  இழந்து நிற்கிறது (பக்.270) என, மருத்துவ
துறையிலும், அரசன், ஆட்சி  முறைகள், போர் முறைகள், அரசியல் கோட்பாடுகள் யாவும், இன்றைய மக்களாட்சி  முறையில் மாறி உள்ளது என்பதை, அரசியல் மாற்றத்திலும், சமயங்களிடையேயான  போட்டிகள் மூலம் இன்று ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றமும், இந்நூலில் கட்டுரைகளாக வழங்கப்பட்டு உள்ளன. தமிழர் உணவில், இட்லி, தோசை மறைந்து, ‘பிட்சா, பர்கர், நான்’ என்று மாறிவிட்ட மரபு மாற்றத்தையும் (பக்.525) பதிவு செய்துள்ள  கட்டுரையாளர்கள், ஒவ்வொரு மாற்றத்தாலும் ஏற்படும் சாதக பாதகங்களைப்  பட்டியலிட்டு இருந்தால், பயனுள்ளதாக இருந்திருக்கும்.
மேலும், மரபு வழியில் இருந்து நழுவி, பண்பாடு, கலாசாரத்தைக் குலைக்கும் மாற்றங்களை, எப்படி எதிர்கொள்ள வேண்டும்; இழந்த பெருமையை எப்படி மீட்டுருவாக்கம் பெறுவது என்பதையும் ஆய்வுரையில் கூறியிருந்தால், இத்தொகுப்பு முழுமையானதாக இருக்கும். அதற்கான முயற்சிகளை பதிப்பாசிரியர்கள் மேற்கொண்டால், தமிழ்ச் சமூகத்திற்குப் பயனுள்ளதாய் அமையும்.

பின்னலூரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us