முகப்பு » கதைகள் » ஜெயகாந்தன் கதைகள்

ஜெயகாந்தன் கதைகள்

விலைரூ.350

ஆசிரியர் : என்.ராம்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ் சிறுகதையுலகில் தனிப்பாய்ச்சலை நிகழ்த்தியவர் ஜெயகாந்தன். அவரது கதைகள் வெளியான காலத்தில், ஒருபக்கம் பலத்த சர்ச்சைகள் உருவாகின. மறுபக்கம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வியந்து பாராட்டினர். பழமைவாதத்தின் மீது விழுந்த சவுக்கடி என்றே அந்த கதைகளை கூற வேண்டும். இந்தியில், பிரேம்சந்த் சிறுகதைகள் எழுதிய போது, இதே எதிர்வினைகளைத் தான் சந்தித்தார்.
முற்போக்கு எண்ணம் கொண்ட சிறுகதைகள் விவாதிக்கப்படுவதும், கடுமையான எதிர்வினைகளை சந்திப்பதும் தொன்று தொட்டு வரும் செயலே.
ஜெயகாந்தன் தன் கதைகள் குறித்த எதிர்வினைகளை கையாண்ட விதம், அவரது படைப்பு மேதைமையின் சான்று. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில், ஜெயகாந்தன் எழுதிய படைப்புகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 17 கதைகளின் தொகுப்பை, இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர் ராம்- – -வனிதா தம்பதி தொகுத்திருக்கின்றனர். ஜெயகாந்தனின், 80-வது பிறந்த நாள்  விழாவை முன்னிட்டு, இந்த விசேஷ பதிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதன் தனிச்சிறப்பு,  இதழில் வெளியானது போல, அதே அச்சு வடிவில், அப்போது வெளியான அதே ஓவியங்களுடன், அதே வடிவமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது என்பதே. ஓவியர்கள் கோபுலு, மாயா வரைந்த பழைய ஒவியங்களை அப்படியே பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதால், அவற்றை மறுபடி வரையச் செய்து பதிப்பித்திருக்கின்றனர் என்கிறார்கள். இந்த முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது.
ஜெயகாந்தன், ஆனந்த விகடனில் எழுதிய முதல் கதை ‘ஓவர் டைம்’; அதைத் தொடர்ந்து ‘சுயரூபம், மூங்கில், நான் இருக்கிறேன், பூ உதிரும், அக்னிப் பிரவேசம், சுயதரிசனம், அந்தரங்கம் புனிதமானது’ போன்ற சிறந்த கதைகள் விகடனில் வெளிவந்தன. இந்த கதைகள் வாசகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன. ஜெயகாந்தன் சிறுகதைகளின் தனித்துவம் என்பது, வலிமையான கதாபாத்திரத்தை சிருஷ்டித்து, உணர்ச்சிபூர்வமாக, தர்க்கபூர்வமாக அவர்களின் மனவெளிப்பாட்டினை எடுத்துக்காட்டுவதாகும்.
சாமானிய மக்களுடைய வாழ்க்கையை, நுட்பமாக எழுத்தில் பதிவு செய்ததும்,  தன் எழுத்தைப் போலவே சாமானியர்களுடன் ஒட்டி வாழ்ந்து வருவதும்  ஜே.கே.,யின் சிறப்பம்சம்.
‘சிறப்பான எழுத்து என்பது, ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாய், படிப்பவனை அல்லற்படுத்தவும் செய்யும். மனசாட்சியைக் குத்திக் கிளறி சித்ரவதை செய்யும்’ என்று ஜெயகாந்தன் தன் உரையொன்றில் குறிப்பிடுகிறார். இவருடைய சிறுகதைகள் அப்படியானவையே.
நினைவில் உறைந்துபோன கடந்த  காலத்துக்குள், நம்மை  மீண்டும் அழைத்துச் செல்கிறது இத்தொகுப்பு.  இதன் வழியே ஜெயகாந்தனின் சிறுகதைகள் மட்டுமில்லை.  ஆனந்தவிகடன் அட்டை படம், ஒவியம், இதழில் வெளியான  விளம்பரங்கள்,  விகடன் இதழ் வருவதற்காக காத்திருந்த நாட்கள், அதை போட்டி போட்டு படித்த வீட்டார் என, பல்வேறு நினைவுகள் மனதில் கிளர்ந்து எழுகின்றன. அதுவே இந்த தொகுப்பின் வெற்றி.
எஸ்.ராமகிருஷ்ணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us