முகப்பு » கதைகள் » இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை

விலைரூ.1300

ஆசிரியர் : வெ.இறையன்பு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இந்நூலை, மூன்று பெருந்தொகுதிகளாக, 105 உட் தலைப்புகளில், நூற்றுக்கும் அதிகமான வரலாற்று மற்றும் உண்மை வாழ்க்கைச் சம்பவங்களோடு, முந்நூறுக்கும் அதிகமான கதைகளுடன் விரிவாக எழுதிஉள்ளார் ஆசிரியர் வெ.இறையன்பு. அறிவுசார் தனி மனிதப் பண்புகளை வளர்க்கும் கருத்துக்களை தொடர்ந்து எழுதியும், பேசியும் வரும், வெ.இறையன்புவின் திறனுக்கு, இந்த புத்தகம் மேலும் ஒரு சான்று.  
200க்கும் மேற்பட்ட ஆங்கில மற்றும் தமிழ் நூல்களை படித்த திருப்தியை தருகிறது இந்நூல். வியாசர், வால்மீகி முதல் ஷேக்ஸ்பியர், கன்பூசியஸ் வரை பல அறிஞர்களின் தத்துவங்கள், இலக்கியங்கள், விஞ்ஞானம், என அனைத்தையும் மேலாண்மை என்ற செயல் திறனுக்கு எடுத்துக்காட்டாக எளிமையாக கூறியுள்ளளார்.
‘மனித இனம் தொடங்கியபோதே, மேலாண்மையும் துளிர்க்க ஆம்பித்தது. புராதன மனிதனிடம் குருத்து விட்ட தலைமை பண்பும், வழிநடத்தும் இயல்புகளுமே, அவனை இயற்கையோடு இழையவும், இடர்களை தாண்டி நீடிக்கவும் உதவியது. வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது கனவு.  இன்று கூட, அதிக நேரத்தை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படைப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்’ என்ற ஆசிரியரின் கூற்று வலிமையானது. (பக்கம்.2) ‘பழக்க வழக்கங்களின் மாறுபாடுகளால் மனிதர்களை அடையாளம் காண முடியும். மனிதர்கள் கால் மேல் கால் போட்டு அமரும் விதம் மாறுப்பட்டு இருப்பது இதற்கு உதாரணம்.  ‘இரண்டாம் உலகப்போரின் போது, வேவு பார்க்க வந்த அமெரிக்கர்கள், ஜெர்மனியிடம் மாட்டிக் கொண்டது இப்படி தான்’ என்ற தகவல் அருமை. (பக்கம் 261) ‘ஆண்கள் சட்டை அணியும்போது, வலதுகை பாகத்தைத்தான் முதலில் நுழைக்கிறார்கள்; பெண்கள் இடதுகை பாகத்தைத்தான் நுழைக்கிறார்கள்’ என்ற தகவல் நம்மை யோசிக்க வைக்கிறது. (பக்கம் 236) ‘எனிமி’ என்ற ஆங்கில சொல்லின் மூலம் லத்தின் மொழி; அதன் பொருள் நண்பன் இல்லாதவன்’ என்பதாகும் இதுபோன்ற கணக்கில் அடங்கா தகவல் களஞ்சியமாக எழுதப்பட்டு உள்ளது இந்த புத்தகம். (பக்கம். 141) ‘காட்டில் இருக்கிறபோது, யானை, புலியை பார்த்து பயப்படுகிறது. ஆனால், போருக்காக பயிற்றுவிக்கப்படும் யானை, சூழல் மாறிய காரணத்தால், அதற்குள் இருக்கும் ஆற்றலை அறிந்து கொள்கிறது. தன்னை பார்த்து அஞ்சி ஓடும் வீரர்களை பார்த்து ஊக்கம் கொள்கிறது. பயிற்சியால் துணிவுமிக்க விலங்காக மாறுகிறது. சோர்ந்து விடாமல் போர்க்களத்தில் முன்னேறி செல்கிறது. யாராலும் வெல்ல முடியாத ஆற்றல் பெற்று விடுகிறது. ஒருவனின் ஆற்றலை சுற்றுச்சூழல், ஐம்பது சதவீதம் தீர்மானிக்கிறது’ என்பது உண்மை தானே. (பக்கம் 311) துணிச்சல் மிகுந்தவர்களே நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள முடியும். அதில் ஏற்படும் இழப்பையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து போராட முடியும் என்பதை, திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார் புத்தக ஆசிரியர்.
‘நிச்சயமற்ற சூழல் ஏற்படும் போது, இழப்புக்கூட ஒருவகை அனுபவமே. அது, எதிர்காலத்தை திட்டமிடுவதற்கும், எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதற்கும், அது பாடமாக அமைகிறது’  என, விளக்குகிறார் ஆசிரியர். (பக்கம் 417) ‘சரியான தகவல் தொடர்பை, அதிகம் பேசுவது என பலர் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் குரலே ஓங்கி ஒலிக்க வேண்டும் என எண்ணுகின்றனர். நிறைய பேசுபவர்களை உலகம் நிராகரித்து விடுகிறது; குறைவாக பேசுபவர்களை உலகம் கூர்ந்து கவனிக்கிறது’ என, குறிப்பிடும் ஆசிரியர், இதற்காக விளக்கும் இலக்கிய தகவல்களும், எடுத்துக்காட்டுகளும் அற்புதம்.  (பக்கம். 454)
இலக்கிய மேலாண்மை, வேளாண்மை மேலாண்மை, வர்த்தக மேலாண்மை, நேர மேலாண்மை என அனைத்தையும் விரிவான தகவல்களுடனும், அறிஞர்களின் கூற்றுகளுடனும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
அதற்காக அவர் எடுத்தாளும், மேற்கோள்கள், இலக்கிய தகவல்கள் படிப்பவர்களை மிகவும் ஈர்க்கிறது.
பக்கத்தை திருப்ப திருப்ப, தகவல்களாக அமைந்து இருப்பதும், படிக்கும் ஒவ்வொன்றும், அறிவையும், செயலையும் துாண்டும் விதமாக எழுதியுள்ளது மிக சிறப்பு.
நூல் கட்டமைப்பு சிறப்பும், தெளிவான வண்ணப்படங்களுடன், உரிய உட்தலைப்புகளுடன் படைப்பு சிறப்பாக உள்ளது.
ஜே.பி.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us