முகப்பு » கட்டுரைகள் » நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை

விலைரூ.180

ஆசிரியர் : சிவகாமிநாதன்

வெளியீடு: கலைஞன் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அரசு துறையான ஆவினில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கே. சிவகாமிநாதன், தன் அனுபவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரியாக, அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.,க்கள் என பலரிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருந்திருக்கிறது. ஒரு தலைமுறைக்கு முன்பு நடந்த பல வரலாற்று தகவல்களையும், சுவையாகக் கூறியுள்ளார்.
விருதுநகரைச் சேர்ந்த அவர், தனது சொந்த ஊரில் இருந்து, நினைவுகளை தொடங்கியுள்ளார். சாதாரண கிராமமாக இருந்த விருதுபட்டி, பொருளாதார வளம் கொழிக்கும் மண்ணாக மாறிய தகவலை, சுவைபட கூறியுள்ளார். தனது தந்தை பற்றிய தகவலில், அந்தக் காலத்தில் வெயிலான் என்ற ரவுடி படுத்திய பாட்டையும், அவன் காலையும், கையையும் முறித்த கதை சிறப்பாக இருக்கிறது. ஏனெனில் அன்று ‘குண்டாஸ்’ போன்ற சட்டங்கள் கிடையாது.
‘வெளிநாட்டு நிபுணர்களுக்கு, வாங்கிக் கொடுத்த முந்திரி பருப்பில், ஒன்று இரண்டு சொத்தையாகி விட்டது. அவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அமைச்சரின் கேள்வி, (ப. 141) மக்கள் தொடர்பு அதிகாரி பணி எந்த அளவிற்கு கவனிக்கப்படுகிறது என்பதற்கு அத்தாட்சி.  
‘எம்.ஜி.ஆர்., இறுதிச் சடங்கிற்கு, 3 கிலோ நெய் என்று கணக்கு காட்டியிருந்தார்கள். எம்.ஜி.ஆர்., உடலை தகனம் செய்யவில்லை. அவர், உடல் புதைக்கப்பட்டது தானே. நெய் ஏன்?  எம்.ஜி.ஆர்., பேரில் நெய் பொய் கணக்கா? என்று, அலுவலக ஆடிட்டர் கிண்டலடித்ததையும் இவர் எழுதாமல் விடவில்லை.
‘மேலும், இறுதிச் சடங்கில் சாஸ்திர சம்பிரதாயம் உள்ளது. அதற்கு மூன்று கிலோ நெய் தேவைப்படுகிறது. எல்லா கடைகளும் பூட்டி கிடக்கின்றன.
ஆவினில் இருந்து பெற்று வர முடியுமா? என கேட்டனர். அதை தான் வழங்கினோம் (ப. 142’) என குறிப்பிட்டுள்ளார். எம்.பி.ஏ.,படிப்பு படிக்க, மேலதி காரிகள் நெருக்கடியைத் தாண்டி பட்டம் பெற்று, அதனால் தனது சம்பளம் உயர்ந்ததைக்கூறும் ஆசிரியர், தனது பேத்தியின் முதல் வகுப்பு
அட்மிஷனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததைத் தெரிவித்து, காலம் மாறியதை விளக்குகிறார் (பக்.112).
இதுபோல, பல பிரபலங்களுடன், தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அந்த காலத்தை நினைவுபடுத்தும் விதத்தில் உள்ளது. தனது ஆவின் பதவிக் காலத்தில், மேற்கொண்ட நிர்வாகப் பணிகளில் இவர் மேற்கொண்ட சமாளிப்புகளை, படிக்கும் விதத்தில் எழுதிஇருப்பது சிறப்பாகும்.
இது சுயசரிதையுடன், தனது நிர்வாகத்தில் சந்தித்த நல்லவைகள், சிக்கல்கள் என்று எல்லா விஷயங்களையும், ‘நச்’ என்று எழுதியிருப்பதால், அரசு அதிகாரிகள் கூட படிக்கலாம். அதனால் வார்த்தை நயம், எழுத்துப்பிழை ஆகிய சில மறைந்து விடும். அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற இவர், மூத்த குடிமக்கள் நலனுக்கான அமைப்பு ஒன்றையும் இப்போது நடத்தி வருவது, இவரது செயலாக்க துணிவுக்கு அத்தாட்சியாகும். ஊழலைப் புறந்தள்ளி, வெளிப்படையாக இருந்த அதிகாரி ஒருவரின் பயணத்தை வெளிப்படுத்தும் பதிவுகள் கொண்ட நூல்.
ஜே.பி.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us