முகப்பு » ஆன்மிகம் » தென்குமரி கோவில்கள்

தென்குமரி கோவில்கள்

விலைரூ.195

ஆசிரியர் : அ.கா.பெருமாள்

வெளியீடு: சுதர்சன் புக்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கன்னியாகுமரி மாவட்டத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கோவில்கள் பற்றிய தகவல் களஞ்சியம் எனில் மிகையன்று. குமரிக் கோவில்கள் குறித்து வெளிவந்து நூல்களில் இந்நூல் வித்தியாசமானது. முன்னுரையில் பல புதிய தகவல்களை, சமூக, வரலாற்றுப் பின்னணியோடு தந்துள்ளார் ஆசிரியர். தென்குமரிக் கோவில்களுக்கும், நாஞ்சில் நாட்டுக் கோவில்களுக்கும் கோவில் அமைப்பு முறை, விழாக்கள், ஆகமங்கள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளை விரிவாக ஆங்காங்கே எடுத்துரைக்கின்றனர்.
தென்குமரிக் கோவில்களில் நடைபெறும் பூஜை, விழா முதலியவற்றையும், மக்களுக்கும் கோவில்களுக்கும் இடையே நிலவிய பண்பாட்டுச் செய்திகளையும் கூறியதோடு அமையாது, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காணப்படும் கோவில் பண்பாட்டிலிருந்து அவை வேறுபட்டு காணப்படுவதையும்  விளங்க எடுத்துரைக்கின்றனர்.
வரலாற்று நோக்கில் கன்னியாகுமரி பற்றிய தகவல்களைத் தொகுத்திருக்கும் ஆசிரியர், மனநோயாளிகளைக் கன்னியாகுமரி கடற்கரையில்  விட்டு விடுவது புண்ணியம் என்ற தவறான  நம்பிக்கை வட மாநிலத்தவரிடம்  இருக்கிறது என்ற கருத்தைப் பதிவு செய்துவிட்டு, ஓராண்டில், 20 மனநோயாளிகள் வரை அவ்வாறு விடப்பட்டுள்ளனர் என்ற அரசு குறிப்பை எடுத்துக்காட்டியிருப்பது கவனத்திற்குரியது (பக்., 34)
குமரிக் கோவில்களின் தலபுராணங்கள், மடங்கள், சித்தர் சமாதிகள் முதலியவற்றை  விரிவாக எடுத்துரைக்கும் இந்நூலில், மக்களின் வாழ்வியலில் கோவில்கள் பெற்றிருக்கும் இடத்தையும், அவர்களது பூஜை முறை, நேர்ச்சிக்கடன், கோவில் நிர்வாகம் பற்றிய செய்திகளையும் ஆராய்ந்துரைத்துள்ளார்.
தேவதாசிகள் குறித்த தகவல்கள் சுவையாகச் சொல்லப்பட்டுள்ளன (பக்.153 – 158) கன்னியாகுமரி மாவட்டத்தில் நம்பூதிரிகளின் செல்வாக்கு பெற்ற பின் கோவில் பூஜைகளில் சைவம், வைணவம் வேறுபாடு இல்லாமல் ஆனது (பக்.161 என்ற தகவலைத் தருகிறார். மதுரையில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு. மாலிக்கபூர் படையெடுப்பால் ஆபத்து வரலாம் என்ற எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் அம்மனை  ஆரல்வாய்மொழி காட்டில் மறைத்து வைத்த
செய்திகளை சொல்லியிருப்பதும், அந்நிகழ்ச்சியைக் கவிமணி ஒரு வெண்பாவில் பாடியிருப்பதுமான  தகவல்கள் அறியப்பட வேண்டிய செய்தி (பக்.196).
இந்நூல் குமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோவில்களைக் காணச் செல்வோருக்கு ஒரு கைச்சாத்தாக விளங்க வல்லது. சமூகத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையது கோவில் என்பதைப் பல கோணங்களில் சித்தரிப்பது பாராட்டுக்குரியது.
ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us