முகப்பு » இலக்கியம் » தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்!

தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்!

விலைரூ.400

ஆசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்

வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத்  தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு  கால (1889 முடிய) வரலாற்றை  நயம்பட ஒரு புதினம் போல சுவைபட எழுதி, ‘தன் வரலாற்று நூல்களுக்கு முன்னோடியாக முத்திரை பதித்துள்ளதோடு, தன்னுடைய ஆசிரியர் மகாவித்வான், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சரித்திரத்தையும் பதித்த பெருமகனாவார். ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்கள் சிலரின் நிதி உதவியோடு, 10ம் பதிப்பாக வெளிவந்துள்ளது.
கடந்த, 1940 முதல், 1942 முடிய ஆனந்த விகடனில் வெளியான இச்சுயசரிதம், 122 அத்தியாயங்களைக் கொண்டது. பதிப்புத் துறையில், 1874ல், நீலி இரட்டைமணிமாலை முதல், வித்துவான் தியாகராஜ செட்டியார் (1942) வரலாறு ஈறாக, 100 நூல்களைப் பதிப்பித்த, உரை எழுதிய பெருமைக்குரிய தமிழ் முன்னோடி உ.வே.சா.,
தஞ்சை சமஸ்தானத்தை ஆண்ட அரசன் ஏகாதசி விரதத்திற்குப் பங்கம் விளைவித்ததற்குப் பரிகாரமாக உருவாக்கிய தம் ஊரான, ‘உத்தமதானபுரத்தில் துவங்கி, தன் முன்னோர், குழந்தைப் பருவம், இளமைக் கல்வி, சங்கீதப் பயிற்சி, தமிழ்ப்பாடம் கற்றல் என, மணிமேகலை பதிப்பு வெளியீடு வரை நூல்  விரிந்துள்ளது.
தமிழிலும், இசையிலும் வல்ல, அரியலூர், சடகோப அய்யங்காரின்  மாணக்கரானதை ‘அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பில் புகுந்தவனானேன்’ (பக்.71)  என்றும், உபநயத்தின் போது சூட்டிய, ‘வேங்கடராமன் சர்மன்’ பெயரை பின்னாளில் ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்வான், மீனாட்சிசுந்தரம் பிள்ளையால்,  ‘சுவாமிநாதன்’ (பக்.188) என, நாமகரணம் சூட்டப்பட்டதையும் பெருமையுடன்  குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டும் என்ற அவாவில், சமஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சிலசமயங்களில் அவற்றில் வெறுப்பைக் கூட அடைந்தேன் (பக்.156) என்னும் ஆசிரியர், 1868ல், மதுராம்பாளைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வை, சுவைபட வர்ணித்துள்ளார்.
செங்கணம் விருத்தாசல ரெட்டி ரெட்டியாரிடம் யாப்பெருங்கலக்காரிகை பாடம் கேட்டதும், காலையில் கோபால கிருஷ்ணன் பாரதியாரிடம் சங்கீதமும் மாலையில் மகாவித்வான் பிள்ளையிடம்  தமிழ்ப் பாடம் பயின்றதுமான சில சுவையான பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. ‘திருவாவடுதுறை மடம் ஒரு சர்வகலாசாலை போல் விளங்கியது. வயிற்றுப் பசியும், அறிவுப்  பசியும் போக்கி, வாயுணவும், செவியுணவும் அளிக்கும் அது, கலைமகள் களிநடம்  புரியும் திருக்கோவிலாகவே விளங்கியது’ (பக். 303) என, சிறப்பித்திருப்பதும், சுப்ரமணிய தேசிகரிடமும் பயின்றார்.
பின் பெரும்புலவர் தியாகராஜ செட்டியார் பணிஇடத்தில், அவருக்குப் பின் கும்பகோணம் கல்லூரியில், 1880ல் பணியேற்றதும், ‘சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா...  மணிமேகலை, சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா...’ (பக். 532) என்று சேலம் ராமசுவாமி முதலியார் வினவியதும், ஆசிரியர் வாழ்வில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல், சீவகசிந்தாமணியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதையும், ஜைன சமயத்தவர் தொடர்பும்  வெகு விரிவாக எழுதப்பட்டுள்ளது.
நூல் முழுவதும் எடுத்தாளப்பட்டுள்ள செய்யுட்கள் உ.வே.சா., இயற்றிய செய்யுட்கள் யாவும் கவி இயற்றும் திறனையும், அவரது சங்கீத வித்வத்துவத்தையும் பறை சாற்றுகின்றன.
‘எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டுக் சிதிலமுற்றிருந்த இந்நூலுரைப் பழைய பிரதிகள் பலவற்றையும், பலகால் ஒப்பு நோக்கி இடையறாது பரிசோதனை செய்து வந்த போது கவிகளின் சுத்த வடிவத்தையும் உரையின் சுத்த வடிவத்தையும்  கண்டுபிடித்ததற்கும், உரையினுள் விசேஷ உரை இன்னது, பொழிப்புரை இன்னது என்று பிரித்தறிதற்கும், மேற்கோள்களின் முதலிறுதிகளைத் தெரிந்து கோடற்கும், பொழிப்புரையை மூலத்தோடு இயைத்துப் பார்த்ததற்கும், பிழையைப் பிழையென்று நிச்சயித்துப் பரிகரித்ததற்கும், பொருட்கோடற்கும் எடுத்துக் கொண்ட  முயற்சியும், அடைந்த வருத்தமும் பல.
அப்படி அடைந்தும் சில விடத்துமுள்ள இசைத் தமிழ் நாடகத் தமிழின் பாகுபாடுகளும் சில பாகமும் நன்றாக  விளங்கவில்லை. அதற்குக் காரணம் அவ்விசைத் தமிழ் நாடகத் தமிழ் நூல் முதலியவைகள் இக்காலத்துக் கிடையாமையே’ (பக்.611) என, அவர் பட்ட கஷ்டங்களை விவரித்திருப்பது, அவர் பதிப்பித்த ஒவ்வொரு சங்க இலக்கிய நூலுக்குப்  பொருந்துவதோடு, பிற்காலப் பதிப்புத் துறையில் ஈடுபடுவோர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.
அரியலூர் (அரி–இல்), குன்னம் (குன்றம்), பட்டீஸ்வரம்  (சத்திமுற்றம்), ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை), கதிர்வேய்மங்கலம்,  மிதிலைப்பட்டினம் இப்படி ஒவ்வொரு ஊரைக் குறிப்பிடும் போதும் அவற்றின்  வரலாற்றுச் சிறப்புகளையும் பயனடையும் வகையில் பதிவு செய்துள்ளது அருமை.
சிறு வயது முதல் தன் முன்னேற்றத்திற்குப் பலவகையிலும் ஆதரவளித்த தமிழறிஞர்கள்,  புரவலர்கள், சக மாணவர்கள், பதிப்பக்கத்தார், தமக்குப் பலவகையிலும் பாதகம் செய்தவர்கள், இப்படி எல்லா பிரிவினரையும் நினைவு கூர்ந்துள்ளார்.
சிந்தாமணி  பதிப்பித்தபோது, ‘பவ்ய ஜீவன்’ என, அழைத்த போது ஜைனனாகவோ, மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்றவற்றைப் பதிப்பித்ததற்கு  ‘பவுத்த சமயப் பிரபந்தப்  பரவர்த்தனாசாரியார்’ என்ற பட்டமளித்தபோது, பவுத்தனாகவோ மாறாமல், நிலையில்  திரியாமல், திருவாவடுதுறை சைவ மடத்தின் ஆசியோடு ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநநானூறு, பெருங்கரை என்பனவற்றில் கருத்தைச் செலுத்தினேன் என, எழுதியுள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சா.,, ‘கும்பமுனி எனத்  தோன்றும் சாமிநாதப் புலவன்’ என, பாரதியே சிறப்பித்து வாழ்த்திய பின் பிறர் வாழ்த்தத் தேவையில்லை.
பாரதியைப் போல தமிழ்த் தாத்தாவின் புகழைப்  பரப்ப இத்தகைய நூல்களை அனைத்து நூலகங்களிலும், கல்விக் கூடங்களிலும் இடம் பெறச் செய்வதோடு, பாடத் திட்டத்திலும் சேர்த்து மாணவர்கள் பயன் பெறச் செய்ய  வேண்டியதும் அவசியம்.
பின்னலூரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us