திருமகள் நிலையம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 496)
நாளும் இன்னிசையால் தமிழையும், சைவத்தையும் வளர்த்து, சிவபெருமான் மீது பதிகங்கள் பாடி மகிழ்ந்தவர்கள் திருஞான சம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர். இவர்கள் மூவரும் 276 திருத்தலங்களுக்கு சென்று இறைவன் மீது பதிகங்கள் பாடி சமயத்தை வளர்த்தனர். தொண்டை நாடு, நடு நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு, மலை நாடு, துளுவ நாடு, வடநாடு, ஈழ நாடு என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குத் தல யாத்திரையாகச் சென்று இறைவன் புகழ்பாடி திருப்பணியோடு சமுதாயப் பணியையும் செய்து வந்த பெருமக்கள் இம்மூவர்.
இவர்கள் மூவரும் தொண்டை நாட்டில் உள்ள 32 திருத்தலங்களுக்கும் சென்று மொத்தம் 682 திருப்பாடல்களை இறைவன் மீது பாடி மகிழ்ந்தனர். அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்களை தொண்டை நாட்டின் தேவாரத் திருப்பதிகங்கள் என்ற தலைப்பில் எஸ்.சபாரத்தின குருக்கள் அழகாகத் தொகுத்துள்ளார். அற்புதமான தகவல்களைச் சேகரித்து முறையாக முறைப்படுத்தித் தந்துள்ளார் ஆசிரியர். தொண்டை நாட்டில் உள்ள சிவத் திருத்தலங்களில் உள்ள திருக்கோவில்களுக்கு வழிபாட்டிற்காகச் செல்கின்ற ஒவ்வொரு யாத்திரிகர்களுக்கு இது ஒரு ஞானக் களஞ்சியம், மூவர் பாடிய திருப்பாடல்கள் 682ஐயும் சீர்பிரித்து எளிமைப்படுத்தி பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் பொழிப்புரையும் உண்டு. திருக்கச்சிகெம்பம் என்ற திருத்தலத்திலே துவங்கி, இருப்பை மாகாணம் (இன்றைய பெயர் இடும்பை) என இறுதி செய்து தந்துள்ளார். தொண்டை மண்டலத்தில் உள்ள சிவத் திருத்தலங்களுக்கு வழிபாட்டிற்கு செல்ல விரும்புவோர் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம், ஆன்மிக அன்பர்களுக்கு இது ஒரு பேரின்பக் களஞ்சியம்.