முகப்பு » வாழ்க்கை வரலாறு » இசை முரசு அல்ஹாஜ்

இசை முரசு அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனீபா

விலைரூ.350

ஆசிரியர் : செ.திவான்

வெளியீடு: சுஹைனா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மேடைக்கு முன்னால் தொண்டர்கள் நிரம்பிவிட்டார்கள் என்று தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகு மேடைக்கு வருவது, தலைவர்களின் வழக்கம். ஆனால் நான்கைந்து தலைகள் மட்டுமே தெரியும் பொதுக்கூட்ட மைதானத்துக்கு, தொண்டர்களையும் பொதுமக்களையும் அலைபோல் அழைத்துவரும் ஆற்றல் வெகுசிலருக்கு மட்டுமே உண்டு, நாகூர் ஹனீபா போல. அத்தகைய ஆளுமையின் அரசியல், ஆன்மிகம், இசை உள்ளிட்ட அனைத்து பரிமாணங்களையும் உங்கள் கண்முன் நிறுத்தும் நூல் இது.    
ஹனீபா என்றால் அவரது கம்பீரக்குரல்தான் சட்டென்று நினைவுக்கு வரும். அவர் ‘பேரறிவாளர் பெரியார்’ என்று பாடினால் அதற்காக ஒருகூட்டம் திரண்டுவரும். ‘அண்ணா அழைக்கின்றார்’ என்று பாடத் தொடங்கினால் பெருங்கூட்டம் அணிதிரளும். ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’வுக்குத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஹனீபாவின் குரலைக் கேட்டு மக்கள் மேடைக்கு முன்னால் திரளுவார்கள். அதன்பிறகு மேடையும் கூட்டமும் தலைவர்கள் வசம். கடமை முடித்து கம்பீரமாக மேடையிலோ, மேடைக்கு எதிரிலோ அமர்ந்துவிடுவார் ஹனீபா.  
ஒருமேடை, இருமேடையல்ல, பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான மேடைகளில் ஹனீபாவின் காந்தக்குரல் ஒலித்திருக்கிறது. ஆனாலும், ‘நான் கச்சேரிக்காரன் அல்ல, கட்சிக்காரன்’ என்பதில்தான் ஹனீபாவுக்குப் பெருமிதம். உண்மைதான். இசைக்கலைஞர் என்பதைத் தாண்டி கட்சியின் தொண்டனாகவே கடைசிவரை இருந்தவர் ஹனீபா. திராவிட இயக்கப் பரிணாம வரிசையான நீதிக்கட்சி, திராவிடர் கழகம், தி.மு.க., ஆகிய மூன்றிலும் ஹனீபாவின் பங்களிப்பு நெடியது. அது எந்த அளவுக்கு ஆழமானது என்பதை, வெகுநேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியரும் ஆய்வாளருமான செ.திவான்.
ஆரம்பகாலம் தொட்டே, பெரியார் கொள்கைகள் மீது ஹனீபாவுக்கு ஈர்ப்பு இருந்தது. அதுதான் அவரை திராவிட இயக்கத்துக்கு அழைத்து வந்தது. அன்று தொடங்கி இறுதிவரை திராவிட இயக்கத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்ட ஹனீபா, இயக்கத்தின் சரித்திர நிகழ்வுகள் அனைத்துக்கும் நேரடி சாட்சியமாக இருந்திருக்கிறார். அவற்றை வெறுமனே தகவலாகச் சொல்லிச் செல்லாமல், வரலாற்றுக் குறிப்புகளோடு பதிவுசெய்திருப்பது நூலாசிரியரின் ஆகப்பெரிய பலம்.
தி.க., தி.மு.க., நடத்தும் மாநாடுகளுக்கென்று பிரத்யேக அடையாளங்கள் உண்டு. அவற்றில், என்.எஸ்.கே., எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நாடகங்கள் ஒன்று. அதற்கு இணையான இன்னொரு அடையாளம், நாகூர் ஹனீபாவின் இசைக்கச்சேரி. அவர் பாடிய மேடைகளில் வெறுமனே பாராட்டு மழை மட்டும் பொழிந்திருக்கவில்லை.
எதிரிகள் வீசிய முட்டை மழையும் பொழிந்திருக்கின்றன. ஆனாலும், நிறுத்தாமல் பாடும் துணிச்சல் கொண்ட போராளியாகவே இயங்கினார் ஹனீபா.  
கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்காமலிருக்க, கலைஞர்களுக்கு விலக்கு அளித்திருந்தார் அண்ணா. ஆனால், ‘அது போராட்டம் என்றால் ஓடி ஒளியத் தயாராக இருந்தவர்களுக்கானது.  எந்தப் போராட்டத்தையும் துணிந்து சந்திக்கத் துடித்த எனக்கு அல்ல’ என்பார் ஹனீபா. ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த எதிர்வினை அது.  
சுயமரியாதையை அரசியல் கொள்கையாக மட்டுமே வரித்துக்கொண்டவர் அல்ல ஹனீபா என்பதற்கு நூலாசிரியர் திவான் தந்திருக்கும் உதாரணம் முக்கியமானது. தேர்ந்த பாடகரான ஹனீபாவுக்குத் திரைப்படங்களுக்குப் பாட விருப்பம். நண்பர்களின் உதவியோடு வாய்ப்பும் வந்திருக்கிறது, நல்ல சம்பளத்தோடு. ஆனால் ஒரேயொரு நிபந்தனை. குமார் என்ற புனைப்பெயரில் பாடவேண்டும். அரிதாக வந்த ஆகப்பெரிய வாய்ப்புதான். ஆனாலும், அலட்சியமாக நிராகரித்தார் ஹனீபா. ஒரே காரணம்தான். சுயமரியாதை.  
ஹனீபா என்ற ஆளுமையைப் பற்றிய புத்தகம் என்றாலும், அந்த ஆளுமையின் உருவாக்கத்துக்குக் காரணமான பலரைப் பற்றியும் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர். ஆம்,  ஹனீபா பாடிய பாடல்களை எழுதியவர்கள், இசையமைப்பாளர்கள், ஹனீபாவின் நண்பர்கள், நலன் விரும்பிகள் என்று புத்தகம்
நெடுக ஏராளமான மனிதர்கள் வலம் வருகிறார்கள். ஹனீபாவுக்கு அதிக பாடல்களை எழுதியவர் புலவர் ஆபிதீன் என்பது போன்ற நுணுக்கமான தகவல்களால் கோர்க்கப்பட்ட நேர்த்தியான புத்தகம்.  
கட்சிக்காக உயிரைக் கொடுத்துப் பாடிய, ரத்தவாந்தி எடுக்கும் அளவுக்குப் பாடிய, உச்சஸ்தாயியில் பாடிப்பாடியே தமது செவித்திறனை இழந்த நாகூர் ஹனீபா என்ற மெய்யான தொண்டனுடைய வாழ்வின் அதிமுக்கிய அசைவுகள் அனைத்தையும் நேர்த்தியாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில் ஒரேயொரு வாக்கியம் மட்டும் திரும்பத்திரும்ப நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்துகிறது, ‘கூட்டம் சேர்க்க அவரைப் பயன்படுத்திக் கொண்டார்கள்!’
தொடர்புக்கு: kalaimuthukumar@gmail.com

ஆர்.முத்துக்குமார்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us