விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
நகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான்! சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்களின் இயல்பான நகைச்சுவை உணர்வு அவர்களை அறியாமல் வெளிப்படுகிறது. அப்படி வெளிப்பட்டால், அதுவே அந்தக் கட்டுரையாளரின் வெற்றி. இந்த வெற்றி சூத்திரம், இயல்பிலேயே கைவரப் பெற்றவர் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி.
இவருடைய கட்டுரைகளில் நகைச்சுவை இழையோடும். உண்மைச் சம்பவங்களோடு புனைந்த இந்த நகைச்சுவைக் கட்டுரைகள், படிப்பவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். நகைச்சுவையை வலுவில் திணிக்காமல், சாதாரண நிகழ்ச்சிகளையே தனது எழுத்தாற்றல் மூலம் சித்திரித்திருப்பது இந்த நூலின் தனித்தன்மை.
ஒரு கிலோ அரிசி இருபது ரூபாய். உளுத்தம் பருப்பு கால் கிலோ பத்து ரூபாய். வெந்தயம் ஐந்து ரூபாய். சட்னி சாம்பார் பத்து ரூபாய். செய்கூலி, பாத்திர வாடகை, எரிவாயு, சப்ளையர் கூலி பத்து ரூபாய்... ஆக, 55 ரூபாய். இந்த 55 ரூபாய்க்கு அறுபது இட்லி செய்ய முடியும். சேதாரம் 5 இட்லி தள்ளினாலும் 55 ரூபாய்க்கு 55 இட்லி தேறும். ஆக, ஒரு இட்லியின் அடக்க விலை, ஒரு ரூபாய். இதற்கு 50 பைசா லாபம் வைத்தால், ஒரு இட்லி அதிகபட்சம் ஒன்றரை ரூபாய்க்கு விற்கப்படலாம். சாதாரண ஓட்டல்களிலேயே இரண்டு இட்லி ஆறு ரூபாய். மூன்று ரூபாய்க்கு விற்க வேண்டிய இட்லியை 6 ரூபாய்க்கு விற்கிறார்கள்...
_ இப்படி கணக்கு போட்டு, இதை கண்டிப்பதாக ஒரு சங்கம் அமைத்து பேசப்போக, கடைசியில் இரண்டு இட்லிக்கே அறுபது ரூபாய் கொடுத்து ஏமாந்து திரும்பியதை நூலாசிரியர் விவரிப்பதே சுவாரஸ்யம்தான்!
ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக இரவெல்லாம் கண்விழித்து குறிப்பு எழுதிவைத்து, குறிப்பு பேப்பரை ஒருவர் வாங்கிவைத்துவிட்டு அது காணாமல் போக, கூட்டத்தில் பேசமுடியாமல் தடுமாறியதையும், இதேபோல் திருமண வைபவம் ஒன்றில் எவ்வளவோ பேச எண்ணி இரண்டு நாட்கள் மெனக்கிட்டு குறிப்பு எழுதிவைத்து, கடைசியில் மொய் எழுதுவதற்கு முன்னால் இரண்டே வார்த்தை பேசி வாழ்த்திவிட்டு வந்ததையும் இவர் சொல்லியிருக்கும் பாங்கு, படிப்பவரை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும்.