இது தேர்தல் நேரம்; அரசியல்வாதிகள்எந்த அளவிற்கு வாக்குறுதியை அள்ளி வீசுவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஜன., 14, 1962ல், மதுரை தமுக்கம்மைதானத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேசிய பேச்சை, அந்துமணி இந்த நேரத்தில் நினைவு கூறுகிறார்.
‘மக்களிடம் வசூல் செய்து, அதை நெறியோடு செலவு செய்யத்தான் உங்களுக்கு அதிகாரத்தையும், வசதிகளையும் சட்டம் செய்து தந்துள்ளது. அப்படி இருக்கையில், ‘நாங்கள் அதைச் செய்தோம்; இதைச் செய்தோம் என்று ஏன் வீண் தம்பட்டம் அடிக்கிறீர்கள்? இதை எல்லாம் செய்யாமல் வேறு எதைச் செய்வதற்கு இருக்கிறீர்கள்?
‘திட்டங்கள் பெயரால் நாட்டிற்கு கடன் சுமையைத் தான் அதிகரிக்கின்றனர், ‘டெவலப்மென்ட்’ என்ற பெயரில் தங்களைத் தான், ‘டெவலப்’ செய்து கொள்கின்றனர்.
‘இவர்களை எதிர்த்துப் போரிட மக்களிடம் தெம்பு இல்லை; அந்த அளவுக்கு வாழ்க்கை பிரச்னை ஒவ்வொருவரையும் அழுத்துகிறது.
‘இதை எல்லாம் மாற்றும் வல்லமை உங்கள் ஓட்டுக்கு இருக்கிறது; ஆனால், துரதிர்ஷ்டவசமாக உங்கள் ஓட்டு விலை பேசப்படுகிறது. இது மகாபாவம். பணம் வாங்காமல், யாரையும் எதிர்பார்க்காமல் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு போடுங்கள்; ஒரு மாற்றம் வரும்...’ என்று பேசியிருக்கிறார்.
அவரது பேச்சு, காலம் கடந்தும் இன்றைய தேர்தல் களத்திற்கு ஒத்துப்போவதுதான் ஆச்சரியம்.
இதுமட்டுமல்ல; இன்னும் பல அரசியல் செய்திகளும், துணுக்குகளும் நிறைய இடம்பெற்றுள்ளன.
@subtitle@ தொண்டர்களால் உயர்ந்தவன்@@subtitle@@
ஒரு கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேச வந்த போது, மைக் உயரமாக இருந்ததால் சிரமப்பட்டார். உடனே, ஒரு தொண்டர் ஒரு மரப்பலகை கொண்டு வந்து போட்டாராம். அதைப் பார்த்துவிட்டு, நான் தொண்டர்களால் ‘உயர்ந்தவன்’ என்பர். அது, இப்போது நிரூபணமாகி விட்டது என்று சொல்லி, பேச்சை சுவாரசியமாக துவக்கினாராம்.
முக்கிய செய்தியை கேட்க, வீட்டில் இருந்த பழைய வால்வு ரேடியோவை முன்னாள் முதல்வர் காமராஜர் தேடியிருக்கிறார். கடைசியில் அது ஒரு பீரோவின் பின்னால் இருப்பதை கண்டுபிடித்து எடுக்கப் போகும் போது, அந்த ரேடியோ பெட்டியினுள் குருவி ஒன்று குஞ்சு பொரித்து வாழ்ந்து கொண்டிருந்ததாம். அதைப் பார்த்து விட்டு, ‘ஒண்ணும் செய்ய வேணாம்னேன்; அது பாட்டுக்கு அங்கேயே இருக்கும் வரை இருக்கட்டும். வீட்டிலே ஒரு டிரான்சிஸ்டர் இருந்தது. அதை தேடி எடு’ என்றாராம். இப்படியும் தலைவர்கள் நமக்கு இருந்துள்ளனர்.
பழைய ஏட்டுச் சுவடிகளை தேடிப் பிடித்து, தமிழ் இலக்கியங்களை தொகுத்து, தமிழுக்கு பெரும் தொண்டாற்றியவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஏட்டுச் சுவடிகளை பெற, அவர் பட்டபாடு யாருக்கும் தெரியாது.
‘ஆற்றில் விட்டாலும் விடுவேனே தவிர, உன்னிடம் தரமாட்டேன்’ என்று கூறி, ஆற்றில் விட்ட சுவடியை, உ.வே.சா., எப்படி மீட்டெடுத்தார் என்பதை படிக்கும் போது, அவர் இருக்கும் திசை நோக்கி கைகள் கும்பிடுகின்றன.
@subtitle@ காளியின் ஆட்டம்@@subtitle@@
சேலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் வளர்க்கும் காளி என்ற ஜல்லிக்கட்டு காளையைப் பற்றி, நேரில் போய் பார்த்து அதை ஜல்லிக்கட்டுக்கு எப்படி தயார் செய்கின்றனர் என்பதை தகுந்த படங்களுடன் விவரித்துள்ளார். படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது.
அதேபோல உங்கள் நிலத்தில் கிணறு வெட்டப் போகிறீர்களா? வெட்டுவதற்கு முன், இந்த புத்தகத்தில் அதுபற்றி அந்துமணி எழுதியுள்ளதை அவசியம் படித்து விடுங்கள். உங்களுக்கு வீண் சிரமமும், வெட்டிச்செலவும் மிச்சமாகும்.
@subtitle@ மனதில் உறுதி வேண்டும்@@subtitle@@
உங்களுக்கு மன உறுதி ஏற்பட பல வழிகள் சொல்லியுள்ளார். அதில் சில:
ஒரு வேலையைச் செய்யும் போது, எவ்வளவு பெரிய குறுக்கீடு வந்தாலும், அதை கண்டுகொள்ளாது, செய்யும் வேலையில் மட்டுமே கவனமாக இருக்கவும்.
உங்கள் அம்மாவிடம் சொல்ல வெட்கப்படும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்.
இப்படி எளிதில் மேற்கொள்ளக்கூடிய இருபதிற்கும் மேற்பட்ட வழிமுறைகளைச் சொல்லித் தந்துள்ளார். அனைவருக்கும் பயன்படும்; மன உறுதியும் ஏற்படும்.
நாம் கண்டுகொள்ளாமல் விடப்படும் உறுப்புகளில் காதும் ஒன்று; ஆனால், அந்தக் காது தரும் பலன்கள் எத்தனை தெரியுமா என்று கேட்டு பலன்களை அடுக்குகிறார். படித்து முடிக்கும் போது, காதை கண்போல பாதுகாப்பது உறுதி!
@subtitle@ எப்படிப்பட்ட கணவர் வேண்டும்?@@subtitle@@
இன்றைய தேதிக்கு பெண்கள் தங்களுக்கு அமைந்த கணவர்கள் அல்லது கணவராக அமையப்போகிறவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர் என்பதை, அவர்களிடமே கேட்டு ஒரு ‘லிஸ்ட்’ போட்டுள்ளார். அதில் அழகு, ஆடை, அலங்காரம் எல்லாம் இரண்டாம்பட்சம் தானாம்; பிரதானமாக எதிர்பார்ப்பதே வேறு. அது என்ன என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழகத்தில் சோழர்கள் கட்டிய கோவில்கள் மட்டும், 40,000 இருக்கிறதாம்; கோவில் கட்டுவதில் அவர்கள் ஏன் அப்படி ஓர் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை விலாவாரியாக விளக்கியிருக்கிறார். படித்தபின், எந்தக் கோவிலைப் பார்த்தாலும், கும்பிடாமல் கடந்து போகமாட்டோம்.
அதிகாரம் படைத்த அரசியல்வாதியிடம், நேர்மையான அதிகாரிகள் இருக்க முடியாது என்பர். ஆனால், அது நேர்மை தவறுவதற்கு சொல்லப்படும் பொய் காரணம். நேர்மை எப்போதுமே ஜெயிக்கும் என்பதற்கு, முதல்வர் என்.டி. ஆருக்கும் – பிரசாத் என்ற அதிகாரிக்கும் இடையே நடக்கும் விறுவிறு உரையாடலே சாட்சி.
@subtitle@ எந்த நோயும் மனிதனை கொல்வது இல்லை@@subtitle@@
எந்த நோயும் மனிதனைக் கொல்வதில்லை; அதைப் பற்றிய பயம் தான் அவனைக் கொல்கிறது. உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு, நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். உடல் எதற்காக வடிவமைக்கப்பட்டதோ, அந்த வேலையை அது சிறப்பாக செய்யும். நான் சொல்கிறபடி வாழ்ந்து பாருங்கள்; வாழ்க்கை இனிக்கும் என்று அந்துமணியின் டாக்டர் நண்பர் நிறைய விஷயங்களை அடுக்குகிறார். படிக்கும் போதே நம் உடம்புக்குள் புது உற்சாகம் பிறக்கிறது.
‘அலையில் சிக்கி மாணவர் பலி’ என்று அடிக்கடி செய்தி வரும். கரையிலே தான் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென அலை இழுத்துச் சென்றது என்பர். இதற்கெல்லாம் காரணமான, ‘ரிப் நீரோட்டம்’ பற்றி துறை நிபுணர் மூலமாக சொல்கிறார். படித்தால் நாமும் எச்சரிக்கையாக இருப்பதுடன், மற்றவர்களையும் எச்சரிப்போம்!
@subtitle@ சும்மா@@subtitle@@
சும்மா இருங்கள் – அமைதியாக
சும்மா சொல்லக்கூடாது – உண்மையில்
சும்மா தான் இருக்கிறது – உபயோகமற்று
சும்மா தான் இருக்கிறான் – சோம்பேறித்தனமாய்
சும்மா சும்மா சீண்டுகிறான் – அடிக்கடி
சும்மா சொன்னேன் – விளையாட்டுக்கு
சும்மா உளறாதே – வெட்டியாய் பேசாதே.
இப்படி, ‘சும்மா’ என்று வார்த்தைக்கு பதினைந்துக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கிறது என்ற தமிழாசிரியர் துணையோடு விவரிக்கிறார். சுவாரசியமாக இருக்கிறது.
@subtitle@ நல்ல பாடம்@@subtitle@@
வாழ்க்கையில் பள்ளி, கல்லுாரியில் எத்தனையோ பாடங்கள் படித்து இருப்போம். ஆனால், எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய புத்தகம் மூலமாக, அந்துமணி சொல்லும் வாழ்க்கை பாடங்களை, இப்புத்தகத்தின் மூலம் படித்துப் பாருங்கள்... வாழ்க்கை இனி புதிதாய் இருக்கும், சிறக்கும்!
– எல்.முருகராஜ்