ஆன்மிகம் என்பது இயற்கையோடு இணைந்தது என்பதை விளக்கும் அரிய நுால். இதற்காக, இயற்கையின் முக்கிய அங்கமான மரத்தை கையில் எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் தலவிருட்சங்கள் நடப்பட்டதற்கு காரணம், மருத்துவக் குணங்களைக் கொண்ட அவை, மனிதச் சமுதாயத்துக்கு தரும் நன்மைகளை திறம்பட விளக்கியுள்ளார். 36 முக்கிய கோவில்களின் வரலாறு, அங்குள்ள விருட்சங்கள், அவற்றின் இலை, பட்டை, வேர், காய், பழம் உள்ளிட்ட ஒவ்வொரு அங்கமும் எந்தெந்த நோயை குணப்படுத்தும் என தெளிவாக இந்த நுாலில் சொல்லப்பட்டுள்ளது.
தும்பி, வெட்பாலை, ஏறழிஞ்சில் போன்ற அறியாத மரங்கள் பல, நம் கோவில்களில் இன்றும் இருப்பதைக் கண்டறிந்து எழுதியுள்ளது ஆச்சரியத்தைத் தருகிறது. ஒவ்வொரு மரத்தின் தாவரவியல் பெயரும் கொடுக்கப்பட்டு உள்ளதால், உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த புத்தகத்தின் நோக்கம், நம் மரங்களைப் பாதுகாப்பது. மரங்களில் ஆணி அடிப்பது தவறு.
அவற்றுக்கும் உயிருண்டு என்பதையும் இந்நுால் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது, தும்பி, தும்பிலி, பாணிக்காய், பனிச்சக்காய் என்ற புரியாத பெயர் கொண்ட தாவரங்கள், காய்கள் பற்றியெல்லாம் இந்த நுாலில் தெரிந்து கொள்ளலாம்.
வாந்தி பேதியிலிருந்து புற்று நோய் வரைக்குமான நோய்களைக் கட்டுப்படுத்தும் இந்த தாவர வகைகளை, கோவில்களில் மட்டுமின்றி பிற இடங்களிலும் நட்டு வளர்த்து, நம் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்ற உந்து சக்தியை இந்த நுால் தரும் என்பதில் சந்தேகமில்லை.
-– தி.செல்லப்பா