கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
முல்லா நஸ்ருத்தீன் ஒரு முறை இனி நான் மது அருந்துவதே இல்லை என்று சத்தியம் செய்து கொண்டார். முடிவு செய்த பிறகு ஒருநாள் மதுக்கடையின் முன் செல்ல நேரிட்டது. மனம் தள்ளாடியது. ஏதாவது ஆகட்டும் இனி நான் குடிக்கப் போவதில்லை என்று அவர் கூறிக் கொண்டே கொஞ்சம் முன்னேறிச் சென்றார். ஒரு இருபதடி சென்றிருப்பார். தம் முதுகையே தட்டி, சபாஷ் நஸ்ருத்தீன். மதுக்கடைக்கு முன் சென்றும் நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக முன்னேறி விட்டாயே, பரவாயில்லை. அந்த மகிழ்ச்சியில் நாம் போய் மது அருந்தலாம் என்று கூறி அன்று இரட்டிப்பாக மது அருந்தினார். சத்தியம் செய்யும் அனைவர் வாழ்விலும் இவ்வாறு ஏற்படுவதுண்டு. கோயிலில் சென்று பிரம்மசாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த வினாடியே கண்முன் ஒரு அழகான பெண் தோன்றுவாள். உங்கள் சத்தியங்கள் கூட சுவையைக் கூட்டுவனவாகவே அமைந்து விடுகிறது. பெண்ணை வெறுக்கிறீர்கள். பிரம்மச்சாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த வினாடியே ஓர் அற்புதமான சுவை அந்தப் பெண்ணிலே தோன்றி விடுகிறது. உணவு வகைகளில் சலிப்பு ஏற்படும்போது பட்டினி கிடக்கிறீர்கள். அந்த பட்டினியே மீண்டும் அதில் சுவையை கிளப்பி விடுகிறது. மாற்றமான எல்லா காரியங்களிலும் சுவை கூடிவிடுகிறது.