ஐம்பெரும் காப்பியங்களில் திருக்குறள் கருத்துகள் விரவிக் கிடப்பதை நிரல்படுத்தும் நுால். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதை, ‘ஊழிற் பெருவலி யாவுள’ என, குறள் கூறும் கருத்துடன் ஒப்பீடு செய்துள்ளது. கோப்பெருந்தேவி, கண்ணகி நிலை, குறள் கூறும் கனவு நிலைகளோடு பொருத்தப்பட்டுள்ளன.
‘அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை’ என்ற குறளோடு, குண்டலகேசி நாயகி பத்திரையின் வாழ்வும், ‘உள்ளத்தாற் பொய்யா தொழுகின்’ என்ற குறளுடன், ‘பொய்யில் நீங்குமின் பொய்யின்மை பூண்டு’ என்ற வளையாபதி வரிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
சீவக சிந்தாமணி நிலையாமை, கொல்லாமை, வினை, மும்மணி கோட்பாடு குறள் நெறிகளோடு ஒத்துப்போவதை காட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்