தமிழ்க் கோட்டம், 2, முனிரத்னம் தெரு, அமைந்தகரை, சென்னை29. (பக்கம்:104)
தமிழ் இலக்கிய உலகில் சிறந்த அறிஞர் க.ப.அறவாணன். 39 ஆண்டுகளுக்கு முன், "முரசொலி இணைப்பு வார இதழில் எழுதிய, கவிதை ஒப்பிலக்கியக் கட்டுரைகள் இந்நூலில் உலா வருகின்றன.
கவிதை உலகம், காலமும், இடமும் கடந்து நிற்பது. இங்கு உலகம் போற்றும் கவிஞர்களான பாப்லோ நெருடா, முஸ்தபா, கீட்ஸ், ஷெல்லி, பைரன் ரூபர்ட் ப்ருக், ஷசூன், வேர்ட்ஸ் வொர்த், டால்ஸ்டாய், இக்பால் ஆகியோரை ஒரு அணியில் நிறுத்தியுள்ளார். இவர்களோடு கை
குலுக்கி இணைந்து கொள்ள, பிசிராந்தையார், அருணகிரிநாதர், ஜெயங்கொண்டார், இளங்கோ, பாரதிதாசன், திருவள்ளுவர் ஆகியோரை அனுப்பியுள்ளார்.
பல மொழியில் கவிதைகள் எழுதப்பட்டாலும், கவிஞர்களின் "மனித நேயம் ஒன்றாகத் தான் இருக்கிறது என்பதை இந்நூல் ஆசிரியர் அழகுடன், ஆதாரத்துடன் காட்டியுள்ள தரம் போற்றுதற்குரியது.
"தமிழகத்தில் சங்க காலத்தில் கவிதை கனிந்த நிலையை அடைந்துவிட்டது. கபிலனும், பரணனும், பெருங்கடுங்கோவும் வாழ்ந்த அதே காலத்தில், கவிதையை எதிர்த்து குடியாட்சி நூலில் பிளேட்டோ எழுதினார். இவரது மாணாக்கர் அரிஸ்டாட்டில் கவிதையைப் போற்றுகிறார் (பக் 10) என்று, கவிதையின் வரலாற்றினை திறனாய்வு செய்துள்ளார்.
"கலை உண்மையின் தேடுதலே, பிரசாரம் விளம்பரம் ஆகியன பொய்மையின் கருவிகள். பிரசாரத்தை மையப்படுத்தும் கலை நிலை பெறுவதில்லை என்ற, இவரது கவிதையின் உள்ளடக்கக் கருத்து படிப்பவரை நிமிர வைக்கிறது.
"பெண்கள் விரும்பும் இனிப்பு, பழிக்குப் பழி வாங்குவது தான் என்ற பைரன் வரிகள், வைர கவிகள். "கவிதை முத்தம் தலைப்பில் தமிழ் ஆங்கில முத்தங்கள் சித்திரமாய் எழுதப்பட்டுள்ளன. திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயம் 1818ல் ஆங்கிலேயர் எல்லீஸ் வெளியிட்ட செய்தியுடன் நூல் முடிகிறது. உல்லாசமான உலகக்கவிதைப் பயண அனுபவம் இந்நூல்.