ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் சிவராம் கரந்த், ‘கற்றுக்கொள்ள தயாராக இல்லாத வாழ்க்கை சாரமற்றது; அர்த்தமற்றது. இறுதி மூச்சு வரை, வாழ்வு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்...’ என எழுதியுள்ளதை தமாக கொண்டுள்ள இலக்கிய தொகுப்பு நுால். படைப்பு, பேட்டி, விமர்சன பார்வையுடன் கலாசார உயிர்மூச்சாக மிளிர்கிறது.
முதல் பகுதி மலையாள இலக்கியம் பற்றியது. எம்.டி.வாசுதேவ நாயர், கமலாதாஸ், தகழி, வைக்கம், சேது, சுகதகுமாரி, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பேட்டி மற்றும் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
அடுத்து கன்னட மொழியின் உயிர்மூச்சை காட்டுகிறது. டாக்டர் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி, சிவராம் கரந்த், பைரப்பா, மகாதேவா, சதுரங்க, சேஷகிரி ராவ் பேட்டி மற்றும் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாவதாக தெலுங்கு இலக்கியம் பற்றி பேசுகிறது. இதில் டாக்டர் சி.நாராயண ரெட்டி, வாஸி ரெட்டி சீதாதேவி, ஆருத்ரா, ராவூரி பரத்வாஜா, மாலதி செந்துார் பேட்டி மற்றும் படைப்புகள் இடம் ற்றுள்ளன.
அடுத்து தமிழ் இலக்கியம் உள்ளது. இந்திரா பார்த்தசாரதி, அப்துல் ரகுமான், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், சு.சமுத்திரம், பிரபஞ்சன், பொன்னீலன் படைப்பு, பேட்டிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மொழியிலும் மாநிலம் பற்றிய சுருக்கமான அறிமுகம், இலக்கியம், மொழி வரலாறு, அந்தந்த மொழியின் நவீன சிந்தனை போக்கு பற்றிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் ஆய்வுக் கட்டுரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்தால் இதயங்களை ஒருமுகப்படுத்தும் முயற்சியாக உருவாக்கப்பட்டு உள்ளது. முன்னுரையாக, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் கட்டுரை இடம் பெற்றுள்ளது. அது பரந்த பார்வையை கொண்டுள்ளது. பன்மை கலாசாரங்களுடன் வாழ்வதன் அடிநாதமாக அன்பு, சகிப்புத்தன்மை உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. அரிய உழைப்பில் மலர்ந்துள்ள இலக்கிய பெட்டகம். மூன்றாவது பதிப்பாக மலர்ந்துள்ளது.
–
மலர்