(பக்கம்: 416) காஞ்சி முனிவராம் பரமாச்சாரியாரைத் தான் 1980ல் தரிசித்த அனுபவத்தை திரிசக்தி நிறுவனர் டாக்டர் சுந்தர்ராமன் விளக்குவது படிக்க மிகவும் சுவையாக உள்ளது. "சோ கட்டுரையும், எம்.என்.சீனிவாசன் கட்டுரையும், ரேவதி சங்கரன் கட்டுரையும் ஆன்மிக உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன.
மதுமிதா, சுபா, கி.ராஜநாராயணன் ஜோதிர்லதா கிரிஜா, இந்திரா சவுந்தர் ராஜன், படுதலம் சுகுமாரன், மேலாண்மை பொன்னுசாமி ஆகியோரின் சிறுகதைகள், மலருக்கு மேன்மை சேர்க்கின்றன.
பாரதியாரின் பரம பக்தரான திருகோல சீதாராமன், பாரதி மறைந்த பின், அவரைத் தனது குடும்பத்தில் ஒருவராகவே எண்ணி, வருடந்தோறும் தெவசம் செய்த செய்தியை, சைதை முரளியின் கட்டுரையிலிருந்து அறிந்து கொள்கிறோம்.
இந்தோனேஷியாவில் இந்து கோவில்கள் கட்டுரை பாராட்டு பெறும்.
திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கடம்பூர் போளி செய்ய விஜயா சங்கர் கட்டுரை மிகவும் உதவும்.
மலரின் பல பக்கங்களில் வெடிக்கும் சிரிப்பு வெடிகள் ரசிக்கத் தக்கவையாக உள்ளன.
முதலாண்டு மலராக மட்டும் இல்லாது நல்ல மலராகவும் திகழ்கிறது. மலரில் தினசரி காலண்டரும் இலவசமாக உண்டு.