சின்ன சின்ன வாக்கியங்கள் வழியாக சிறப்பான நடை அழகு உள்ள கதைகளின் தொகுப்பு நுால். மூன்று கதைகள், மண் மணக்கும் வகையில் பேசுவதால் வித்தியாசமாக இருக்கின்றன.
ஒரு சபல புத்தியுடையவர் கதையை சுவையாக நகர்த்திச் செல்கிறது, ‘பெண் புலி’ என்ற கதை. கண்ணை விற்று, சித்திரம் வாங்க, இயற்கையை காரணமாக காட்டி, பெண்ணை அணைக்க நினைத்தவன் அடங்கிப் போவதை மிக அழகாக சித்தரிக்கிறது.
சம்பாதிக்காத ஆணின் சவடால் தனத்தையும், அடங்கிப் போன பெண் எடுத்த அவதாரத்தையும், ‘அசோகவனம்’ கதை விவரிக்கிறது. சமர்த்துப் பாட்டியின் சமயோசித புத்தியை, வயசு பெண்ணை காப்பாற்ற எடுத்த வார்த்தை அலங்காரத்தை அற்புதமாகக் காட்டுகிறது. பெண்ணை பெற்ற அம்மாக்களுக்கு சமர்ப்பணமாக உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்