முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீபாஷ்யம் பேருரை

ஸ்ரீபாஷ்யம் பேருரை

விலைரூ.950

ஆசிரியர் : க. ஸ்ரீதரன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அகிலத்து மாந்தர் அனைவரையும் சமமாகவே பாவித்து வாழ்ந்த, ஆன்மநேய முனிவர் ஸ்ரீராமானுஜர், 1,000 ஆண்டுகள் கடந்தும் அழியாப் புகழோடு நிலைப்பவர். பாதராயண மகரிஷி சமஸ்கிருதத்தில் இயற்றிய பிரம்ம சூத்திரத்திற்கு, ராமானுஜரால்  வழங்கப்பட்ட பேருரையே ஸ்ரீபாஷ்யம் நுால்.  
பிரம்மம் என்பதற்கு ஒப்புயர்வற்ற பொருள் அல்லது அனைத்தையும் வளர்க்கின்ற பொருள் என்று விளக்கம் தந்து, பிரம்ம சூத்திரங்கள் நுட்பமாக விளக்கப்படுகின்றன. சூத்திரங்களைப் புரிந்து கொள்ள எளிய உரைகள் தேவைப்பட்ட நிலையில், உருவாக்கப்பட்ட ஐந்து வகை உரைகளில் ஒன்று பாஷ்யம் வகை என்பதாகும்.
ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாசார்யர் போன்றோர் வடித்த உரைகள், அவரவர் பெயரை இணைத்து பாஷ்யம் என்று கூறப்பட்டாலும், ராமானுஜர் இயற்றிய உரைக்கு ஸ்ரீபாஷ்யம் என்றே பெயர். நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட பிரம்ம சூத்திரத்திலுள்ள பாதங்கள், மூலக் கருத்துகளை ஆய்ந்துரைக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பாதம், அதிகரணங்கள், சூத்திரங்கள் என்ற முறையில் பட்டியலிட்டு தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பாதமும், பல அதிகரணங்களாகப் பிரிக்கப்பட்டு, விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எளிய புரிதலுக்காக, ஒவ்வொரு அதிகரணத்தின் துவக்கத்திலும், ஆராயப்படும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத சூத்திரங்கள், பதம் பிரித்துத் தமிழில் விளக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சூத்திரத்தின் அமைப்பும், முதல் பகுதியாக பாதராயணர் அருளிய பிரம்ம சூத்திரத்தின் சமஸ்கிருத மூலம் தந்து, அதற்கான சுருக்கமான பொருள் தந்து, உபநிடதப் பகுதியுடன், அதன் மையக் கருத்தும் தரப்பட்டுள்ளது. ஆராயப்படும் உபநிடதக் கருத்துகள், சந்தேகம் என்ற பகுதியில் கூறப்படுகிறது.
பூர்வபட்சம் என்ற பகுதியில் சூத்திரங்களில் எழும் மாற்றுக் கருத்துகள் மற்றும் வாதங்கள் தரப்பட்டுள்ளன. அதிகரணத்தில் உள்ள உண்மையான, இறுதியான கருத்து தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதலாக எளிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
ராமானுஜர் வழங்கிய ஒன்பது வடமொழி கிரந்தங்களில், கடினமான கிரந்தமாக கருதப்படும் ஸ்ரீபாஷ்யம் பேருரையை விளக்கும் இந்நுாலை, ஒரு எளிய நடையிலான விரிவுரையாகக் கருதலாம். ஆன்மநேய ஆர்வலர்கள் படிக்க வேண்டிய அரிய நுால்.
மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us