தேர்தலால் சூடாகிப் போன தமிழக மண்ணும், மக்களின் மனமும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது. விடுமுறையும் இருப்பதால் எங்காவது ஆனந்தத்தையும், அமைதியையும் தேடிச் செல்ல மனம் விரும்புகிறது.
அந்த மனங்களுக்கு வழிகாட்டும் வகையில, இப்போது வந்துள்ள பா.கே.ப., பாகம் – 22ல் ஆரம்ப பக்கங்களிலேயே வழிகாட்டுகிறார், அந்துமணி.
நெல்லையப்பர் கோவிலில் கல்துாணை தட்டினால், ‘ச, ரி, க, ம, ப, த, நி’ என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும்.
தாயின் கர்ப்பப் பையில் குழந்தை எப்படி ஒவ்வொரு மாதமும் வளர்கிறது என்பதை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நம் முன்னோர் சிற்பமாக வடித்துள்ளதை பார்க்க வேண்டுமா... திருப்பூர் – குண்டடம் வடுகநாதர் கோவிலுக்கு செல்லுங்கள்!
ஐந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான வடசென்னை ரவீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி தினமும் மூன்று வேளை மாலை போல விழும்.
ஒசோன் படலத்தின் முக்கியத்துவத்தை ஓவியமாக, 700 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரைந்து வைத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் உள்ளே, வெயில் காலத்தில் குளுகுளு என்றும் மழைக் காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும்.
இப்படி பெருமையும், அதிசயத்தையும் தாங்கி நிற்கும் கோவில்கள் பற்றி, படத்துடன் பட்டியலை வெளியிட்டுள்ளார். படித்துவிட்டு உங்கள் பயணத்தை துவங்கலாம்!
இசை மேதையாக இருந்து போலந்து நாட்டு அதிபரான இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியையும், அவரால் உதவி பெற்று பின்னாளில் அவருக்கே உதவிய ஹெர்பெர்ட் ஹூவர் பற்றிய நீண்ட குறிப்பு, எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்வோம் என்பதை வலியுறுத்துகிறது!
நீலகிரி மலைவாழ் படுகர் இனம் பற்றி பலர் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் சொல்லாத பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் நம் அந்துமணி சொல்லியுள்ளார். இதன் மூலம் அவர்களைப் பற்றிய மதிப்பு கூடுகிறது.
உதாரணத்திற்கு ஒரு விஷயம்... படுகர்களில் விதவைகளே கிடையாது; காரணம், யாராவது கணவரை இழந்தால், உடனே அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்து விடுவர். பொருத்தமுள்ளவர்கள் தாமே முன்வந்து மறுமணமும் செய்து கொள்வர், இதை அவர்கள் தர்மமான செயலாகவே கருதுகின்றனர்.
தேச விடுதலைக்காக போராடியவர்களைப் பற்றி சொல்வது என்றால், அந்துமணிக்கு லட்டு சாப்பிடுவது போல! இந்தப் புத்தகத்திலும் மதுரை சொர்ணத்தம்மாள், ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பற்றி மெய்சிலிர்க்க எழுதியுள்ளார்.
வாழ்க்கை என்பது பந்தயமல்ல; ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல. நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம்; நமது மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு என்பது போன்ற சிந்தனைகளுடன், ஐம்பதைக் கடந்தவர்கள் வாழத் துவங்கினால், வாழ்க்கை என்பது ஆனந்தமே என்று சொல்லி, பல அருமையான டிப்ஸ்களை தந்துள்ளார்.
நடிகவேள் எம். ஆர்.ராதா பற்றி பல அபூர்வ தகவல்கள் உள்ளன. அவரது நாடகத்தை தடை செய்யவேண்டும் என்ற போது, நாடகத்தை பார்த்த நீதிபதி, ‘விதவைகள் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட இந்நாடகம், எல்லா ஊர்களிலும் நடக்கட்டும்; எம்.ஆர். ராதா நீடு வாழட்டும்’ என்று கூறினாராம்.
எப்போது பார்த்தாலும் சரக்கு அடித்து விட்டு லென்ஸ் மாமா தத்துபித்து என்று உளறுவதாகக்கூறும் வாசகர்கள், இந்த புத்தகத்தில் அவரைக் கொண்டாடுவர். காரணம், ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி லோக்கல் பாைஷயில் விளக்கம் தந்திருக்கிறார் பாருங்கள்... வேற லெவல்!
தனிநபர் வருமானம், உள்நாட்டு உற்பத்தி, ஆரோக்கியம், மக்களின் ஆயுட்காலம், சுதந்திர மனப்பாங்கு, ஊழல் இல்லாமை என்பது போன்ற காரணிகளை வைத்து, உலகில் மகிழ்ச்சியான நாடு எது என்று பட்டியல் தயாரித்த போது, அதில், இந்தியாவிற்கு, 136 வது இடம் தான் கிடைத்துள்ளது. நமக்காவது, 136 வது இடம்... மகிழ்ச்சியே இல்லாத நாடு என்று ஒரு நாட்டை பட்டியலிட்டுள்ளனர். அது எந்த நாடு என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!
பெண்கள் தொழிலதிபர்களாவது மிக எளிது. கவனம் சிதறாமல், எடுத்த முடிவில் திடமனதுடன், கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்று கூறும் பெண் தொழிலதிபரான ேஹமா அண்ணாமலையின் அனுபவங்களை தொகுத்து தந்துள்ளார், படிக்கும் பெண்களுக்கு தெளிவு கிடைக்கும், வழி பிறக்கும்.
இன்றைக்கு முக்கிய பிரச்னை ‘சைபர் கிரைம்’ தான். படித்தவர்கள் பலரே அன்றாடம் எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை தினமலர் நாளிதழில் வரும் செய்திகள் வாயிலாக அறிந்து, அதிர்ச்சி ஏற்படுகிறது.
இந்த சைபர் கிரைம் பிரச்னையில் இருந்து எப்படி தப்புவது என்பதை, மிகுந்த சமூகப் பொறுப்புடன் விலாவாரியாக விளக்கி எழுதியுள்ளார். நிச்சயம் அனைவருக்கும் பயன்படும்.
மனிதனுக்கு ஆறறிவு; விலங்குக்கு ஐந்தறிவு என்பர். ஆனால், உண்மையில் ஐந்தறிவிடம் இருந்து ஆறறிவு பல விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகிறார். அவர் சொல்லும் விஷயங்களைப் படிக்கும் போது, ‘ஆமாம் சரி தானே’ என்றே தோன்றுகிறது.
பிரபலங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைப்பதால் ஏற்படும் பிரச்னைகளை, நிஜமான சம்பவங்களின் அடிப்படையில் வேடிக்கையாக சொல்லிஉள்ளார். சிரிப்புக்கு கியாரண்டி!
வறுமையோடு பிறப்பது நம் கையில் இல்லை. ஆனால், வறுமையோடு வாழ்வது நம் கையில் தான் உள்ளது என்று, வறுமையோடு பிறந்து, வளமையாக வாழ்ந்தவர்கள் பட்டியலை படத்துடன் வெளியிட்டுள்ளார்; படிக்கும் யாருக்கும் உற்சாகம் பிறக்கும்!
அந்துமணியைப் போல புத்தகத்தை தேடித்தேடி படிப்பவர் யாருமில்லை என்றே சொல்லலாம். பழைய புத்தகக் கடை ஒன்றில் தேடிப்பிடித்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கிறார்... ‘ஜீவபிரம்மையாக்கிய வேதாந்த ரகசியம்’என்ற அந்த நுாலில் சத்துள்ள உணவுகள் பற்றியும், அதன் தயாரிப்பு பற்றியும் விளக்கி எழுதப்பட்டுள்ளது.
ஸ்ரீ பரஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரரால், 1925 ல் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில், ‘அன்னரச அமிர்த சஞ்சீவி’ என்று ஓர் உணவைப் பற்றி பிரமாதமாக விவரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பலன்களை தரும் இந்த உணவின் தற்போதைய பெயர் பற்றி அறிந்தால் வியந்து போவீர்கள். எளிதில் தயாரிக்கக் கூடிய இந்த உணவு பற்றிய விபரம் புத்தகத்தில்!
மாவீரன் ராஜேந்திர சோழன் பற்றி மிக விரிவாக உணர்ச்சி பொங்க விவரித்துள்ளார். இப்படி ஒரு மன்னன் ரத்தமும், சதையுமாக இருந்து நம் நாட்டை ஆண்டிருக்கிறார் என்பதை, அவரது எழுத்து மூலம் அறியும் போது பெருமை பொங்குகிறது!
ஒரு மனிதனின் குணநல பண்புகளை உயர்த்தி, துாய்மைப்படுத்தி, சிந்திக்கச் செய்து, சிறந்த முறையில் வாழச் செய்பவை புத்தகங்கள்தான்.
புத்தகங்களை வாசித்ததன் வாயிலாக, மனக்கதவுகள் திறக்கப்பட்டு, மகான்களாக, மஹாத்மாக்களாக மாறியவர்கள் பலர்.
மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை, மஹாத்மா காந்தியாக மாற்றியது ஜான் ரஸ்கின் எழுதிய, ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற புத்தகமே!
வெங்கட்ராமனாக இருந்தவரை, மகான் ஸ்ரீ ரமண மகரிஷியாக மாற்றியது சேக்கிழார் எழுதிய, ‘பெரிய புராணமாகும்!’
உலக சமுதாயத்தை, உழைக்கும் வர்க்கத்தை துாக்கிப் பிடித்தது காரல் மாக்ஸ் எழுதிய, ‘மூலதனம்’ புத்தகமாகும்.
டால்ஸ்டாய் எழுதிய, ‘போரும் அமைதியும்’ உலக இலக்கிய வரலாற்றையே புரட்டிப் போட்டது.
காளிதாசன் காலத்திய எந்த அரண்மனையும் இப்போது இல்லை. ஆனால், அவர் எழுதிய, ‘சாகுந்தலம்’ இப்போதும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.
‘புத்தகங்கள் காலத்தின் விதைநெல்’ என்று பாரதிதாசன் கூறியது போல, ஒவ்வொரு விதைநெல்லும் பலரை உயர்த்துகிறது.
அந்துமணியின் இந்த புத்தகமும் அப்படித் தான். வாசிக்கும் உங்களை வாழ்வின் உயரத்தில் வைக்க ஆசைப்படுகிறது!
– எல்.முருகராஜ்
நீலகிரி மலைவாழ் படுகர் இனம் பற்றி, பலர் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் சொல்லாத பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் நம் அந்துமணி சொல்லியுள்ளார். இதன் வாயிலாக அவர்களைப் பற்றிய மதிப்பு கூடுகிறது. உதாரணத்திற்கு ஒரு விஷயம்... படுகர்களில் விதவைகளே கிடையாது. காரணம், யாராவது கணவரை இழந்தால், உடனே அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்து விடுவர். பொருத்தமுள்ளவர்கள் தாமே முன்வந்து மறுமணமும் செய்து கொள்வர். இதை அவர்கள் தர்மமான செயலாகவே கருதுகின்றனர்
இன்றைக்கு முக்கிய பிரச்னை சைபர் கிரைம் தான். படித்தவர்கள் கூட அன்றாடம் எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை, ‘தினமலர்’ நாளிதழில் வரும் செய்திகள் வாயிலாக அறிந்து, அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த சைபர் கிரைம் பிரச்னையில் இருந்து எப்படி தப்புவது என்பதை, மிகுந்த சமூகப் பொறுப்புடன் விலாவாரியாக விளக்கி எழுதியுள்ளார் நிச்சயம் அனைவருக்கும் பயன்படும்!,