தாயே சக்தி கதை அல்ல; ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம். இனிமேல் தாயாகவே முடியாது என்ற விரக்தியில் தற்கொலையை நாடிய பவானியின் மனதை மாற்றி, அன்பெனும் உலகத்தில் ஆர்ப்பரிக்க வைக்கும் கதை. நேர்மறை சக்திகளின் ஒட்டுமொத்த அணிவகுப்பாக அமைந்திருப்பது கதையின் தனித்தன்மை.
துன்பம் என்ற பள்ளியில் தான் அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறோம், போராட்டம் தான் வாழ்க்கை போன்ற வார்த்தைகள், சாவின் விளிம்பில் நிற்பவர்களை கூட வா வாழ்ந்து பார்க்கலாம் என்று நெஞ்சை நிமிர வைக்கும்.
கண்ணன் – அர்ஜுனன் கதை, ஐந்து அழகிகளின் உளவியல் கதை; பாவனித்வம், அமெரிக்கப் பெண்ணின் கதையென கதைக்குள் எத்தனையோ கதைகளை சொல்லி, படிப்பவர் மனதை கட்டிப்போட்டு புத்தகத்தில் வைத்த கண் எடுக்காமல் கடைசி வரை ஒரே மூச்சில் படிக்கும் ஆவலைத் துாண்டியிருக்கிறார் ஆசிரியர்.
சிவகாமி, சத்யா, இந்திரா தேவி என ஆசிரியர் படைத்த ஒவ்வொரு பாத்திரமும் அன்பைச் சொரிந்து, இந்த பூமி ஏன் இன்னும் நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது. மனதின் சாரமும், தக்காளிச் சாறும் ஒரு ஆழமான தத்துவத்தை அனாயசமாக சொல்லி, மனதை செப்பனிடுகின்றன.
இது, தன்னம்பிக்கையின் சக்தி, நேர்மறையின் சக்தி, வழிகாட்டுதலின் சக்தி, அன்பின் ஆழத்தை உணர்விக்கும் சக்தி, தாய்மையின் தாத்பரியத்தை விளக்கும் சக்தி. மொத்தத்தில் மனம் தடுமாறும் நேரமெல்லாம் நம்மைத் தாங்கிப் பிடித்து எழ வைக்கும் ஒரு மாபெரும் சக்தியாக இந்த தாயே சக்தியை படைத்திருக்கிறார். படித்தும், பாதுகாத்தும் வைக்க வேண்டிய தன்னம்பிக்கை சுரங்கம்.
– சுமித்ரா தேவி