முகப்பு » கேள்வி - பதில் » விகடன் மேடை

விகடன் மேடை

விலைரூ.435

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அறிவியல், அரசியல், சினிமா, எழுத்தாளர்கள் என, பல்வேறு துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களின், கேள்வி – பதில் தொகுப்பு இந்த நூல். வெற்றி பெற, அவர்கள் பட்ட அவமானங்கள், சந்தித்துக் கொண்டிருக்கும் இடர்ப்பாடுகள், சமூகத்தின் மீதான பார்வை ஆகியவற்றைப் படிக்கும்போது, வாசகர்களுக்கு உத்வேகம் ஏற்படும் என்பது திண்ணம்.
அப்துல் கலாம், சகாயம், நீதிபதி சந்துரு போன்ற சமூக ஆர்வலர்களும், மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களும், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளர்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர். மொத்தம், 40 பிரபலங்கள் பதில் அளித்துள்ளனர்.
அவர்களில் பாதிக்கு மேல், சினிமா பிரபலங்கள் இருப்பது, அதன் மோகத்தில் இருந்து, தமிழனை விடுவிக்கும் எண்ணம் இல்லையோ என, எண்ணத் தோன்றுகிறது அரசியல்வாதிகளின் பேட்டிகளை, சில மாதங்கள் கழித்து படிக்கும்போது, சிரிப்பு வருவதை தவிர்க்க முடியாது. ‘அழகிரி உங்களுக்கு போட்டித் தலைவரா?’ என்ற கேள்விக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ‘அது சிலரது கற்பனை. சிலர், அமில எண்ணத்தோடு ஊன்றும் நச்சு விதை. சகோதரர்களாகிய எங்களுக்கும், கட்சியில் உள்ள சகலருக்கும் கலைஞர் ஒருவரே தலைவர்’ என பதில் அளித்துள்ளார். அந்த பதிலை இப்போது வாசிக்கும் போது, மேலும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
‘ராமதாசுக்கும், உங்களுக்குமான நட்பு குறித்து சொல்லுங்களேன்...’ என்ற கேள்விக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘அண்ணனுக்கும், தம்பிக்குமான உறவு தொடர்கிறது. மொழிக்காக, இனத்துக்காக, சமூகநீதிக்காக, மண்ணுக்காக இணைந்த எமது கைகள் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்’ என, தெரிவித்துள்ளார்.
‘ஒருநாள் பிரதமர் வாய்ப்பு கிடைத்தால், என்ன செய்வீர்கள்?’ என்ற  கேள்விக்கு, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
‘ஒரே நாள்ல, ஒண்ணும் பண்ண  முடியாது. அதனால இந்த ஆபரை, நான் ரிஜெக்ட் பண்றேன்’ எனக் கூறியுள்ளார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை சந்தித்த ஒருவர், ‘இந்த காலத்துலயும், நேர்மையாக இருக்கிறவங்க தெய்வத்துக்கு சமமானவர்கள்’ எனக் கூறி, தன் மகனை, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்ன சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
முன்னாள் நீதிபதி சந்துரு, ‘அம்பேத்கர், ‘கல், கற்பி, கலகம் செய்’ என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார். ஆனால், அவர் பெயரில் இயங்கும் சட்டக் கல்லூரியில், மாணவர்கள் முதல் இரண்டைத் தவிர, மூன்றாவது வார்த்தையில் மட்டுமே கவனம் செலுத்துவது வருத்தத்திற்கு உரியது’ (பக்கம்–298) என்கிறார்.
சுவாரஸ்யமான, கேள்வி – பதில் புத்தகம்!
சி.சுரேஷ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us