மடல் என்ற சொல்லுக்கு பல பொருள் கூறப்பட்டிருந்தாலும், அது பனை மடலையே குறித்து நிற்பதை சுட்டிக்காட்டும் நுால்.
விரும்பிய தலைவியை அடைய முடியாத நிலையில், மடல் ஊர்ந்தாயினும் அவளைப் பெறுவேன் என நிற்பான். இதையே மடல் ஊர்தல் அல்லது மடல் மா ஏறல் என தமிழ் இலக்கியங்கள் உரைக்கின்றன. காதல் உடையோரிடம் மட்டும் மடல் ஊர்தல் நிகழும். பொருந்தா காதலுக்கு அங்கே இடமில்லை. மடல் ஊர்ந்தும் காதலியை அடைய முடியவில்லை எனில், தற்கொலையிலேயே முடியும்.
திருமங்கை ஆழ்வார் பாடிய மடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு திருமடல்களிலும் பெண்ணாக மாறிப் பேசுகிறார். திருமாலிடம் காதல் கொண்ட திருமொழி அது. படித்து மகிழ வேண்டிய கருத்து குவியல் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்