முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மனதில் புதைந்திருக்கும் ஆற்றலே, வெற்றிப்படியை காட்டும் என கற்றுத் தருகிறது.
முட்டைக்குள் உறங்கும் குஞ்சு, வெளியில் வரத் தேவையான வெப்பத்தை தாய்க்கோழி தருகிறது; ஆனால், ஓட்டை உடைத்து வெளியில் வர, குஞ்சுக்கு ஆர்வமும், ஆசையும் இருக்க வேண்டும். அதை, இயற்கையின் உத்வேகம் என கச்சிதமாக விளக்குகிறது. இதுதான், அன்றாட வாழ்வை மகிழ்வுடன் எதிர்கொள்ளத் துாண்டும் என்ற சிந்தனையை விதைக்கிறது.
போதும் என எண்ணியவுடன் சாப்பிடுவதை நிறுத்துவது... தாமாக பிரச்னையை அடுத்தவர் சொல்லாதவரை அதில் தலையிடாமல் இருப்பது... கடினமான சூழல்களில் வாக்குவாதம் வரும் என தெரிந்தவுடன் மவுனிப்பது... இதுபோன்ற மனக்கட்டுப்பாடுகளால், எதையும் சாதிக்கலாம் என்ற அறிவுரையை தருகிறது. இனிப்பு, தேர்வு, வரம், கதாபாத்திரம், வித்தியாசம் போன்ற தலைப்புகளில், சிந்தனையை துாண்டும் தத்துவ முத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. அவை, கவிதைபோல் மனதில் பதிந்து, வாழ்வு வளம்பெற உரம் சேர்க்கின்றன.
இறுதியாக, ‘உதவி’ என்ற தலைப்பில், ‘எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும், தீப்பெட்டியாக இருக்க வேண்டும்; தீக்குச்சியாக மாறிவிடக்கூடாது’ என்ற பொன்மொழிக்கு, எளிய விளக்கம் தரப்பட்டுள்ளது. இதுபோல், பக்கத்துக்கு ஒன்றாக நுட்பமான சிந்தனைகளை புத்தகம் முழுதும் விதைக்கிறது இந்த நுால்.
அந்துமணியின் படைப்புகளை தீவிரமாக வாசிக்கும் புத்தகத்தின் ஆசிரியர் ஆதிரை வேணுகோபால் அனுபவத்தின் துணைகொண்டு தெளிந்த மனதுடன் உருவாக்கியுள்ளார்.
இனிமை பயக்கும் கருத்துகள், பொருத்தமான படங்களுடன் தரப்பட்டுள்ளன. நொடியில் மாற்றம் ஏற்பட வைக்கும் சிந்தனைகள், வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்து நிரப்பும். நம்பிக்கை ஊட்டவல்ல சிந்தனைகளின் தொகுப்பு நுால்.
– மதி