பிரபல எழுத்தாளர் இந்திரா எழுதியுள்ள குற்றம் குற்றமே நாவல் ஒரு மாறுபட்ட முயற்சி. ஆன்மிகத்தில் அதிகநாட்டம் கொண்டவர் கிரைம் நாவலைப் படைத்திருப்பது புதுமை தான்.
பொதுவாக ஒரு திருட்டோ, கொலையோ, பேராசை மற்றும் சுயநலம், குரூர புத்தி இவற்றால் தான் நடக்கும். ஒரு மர்மக் கதை என்றாலே குற்றவாளி தவறு செய்வான். கதாநாயகன் அதை தடுக்கவும், அவனை மடக்கவும் போராடுவான். கதாநாயகனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.
ஆனால், இந்த கதையில் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் குற்றவாளிக்கு தரப்பட்டுள்ளது. கதையின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை அவன் கதாநாயகனுடன் பயணிக்கிறான். இன்னும் சொல்லப்போனால் அவன் தான் கதை நகரவே காரணமாக திகழ்கிறான்.
கதாநாயகனின் அறிமுகமும், அவன் பணியில் சேரும் விதமும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. கதை முழுக்க எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும், இறுதியில் ஏற்படும் திருப்பம் வாசகர்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது; அதேபோல் தான் கதையின் முடிவும். மாறுபட்ட அணுகு முறை; ஆனால், திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத கதையின் நகர்வு என்று விறுவிறுப்பாக செல்கிறது.
மர்மக் கதையாக இருந்தால் அதை வாசகர்கள் யூகிக்க இயலாதபடி கொண்டு செல்ல வேண்டும். யதார்த்தத்தையும் விட்டுவிடக்கூடாது. மற்றபடி இதுதான் கதை என்று ஒரு வரியில் சொன்னாலும் வாசிப்பவர்களுக்கு சுவாரசியம் போய் விடும்.
தினமலர் – வாரமலர் இதழில் தொடராக வந்த இந்த கதை புத்தக வடிவம் பெற்றுள்ளது. முழுமூச்சுடன் வாசித்து மகிழ ஏற்ற வகையில் உள்ள நுால்.
– இளங்கோவன்