குடும்பத்திலும், சமூகத்திலும் உரசலைத் தவிர்த்து அமைதியாக வாழும் உத்திகளை எடுத்துக் கூறும் நுால்.
நல்ல பழக்க வழக்கங்களை, மூடநம்பிக்கை என தவிர்த்து விடுகிறோம். பாரம்பரியமாக உள்ள பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறுகிறது. தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது. உலகில் வளர்ந்த நாடுகள், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் தனித்துவத்துடன் செயல்படுவதை காட்டுகிறது.
இறை வழிபாட்டின் சிறப்பை தெளிவாக தந்துள்ளது. பூமியில் மாறாமல் உள்ள ஆண் – பெண் விகிதாச்சாரத்தை, ‘பகவத் லீலை’ என்ற இறை ஆற்றலாக வியந்து குறிப்பிடுகிறது. குழந்தை வளர்ப்பு, இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை பற்றி அருமையாக விளக்கம் தந்துள்ளது. தெய்வ பக்தி, தேச பக்தியுடன், யாரையும் துன்புறுத்தாமல் வாழ அறிவுறுத்துகிறது.
அலைபேசி போன்ற நவீன தொடர்பு கருவிகளை கவனமாக உபயோகிக்க, நல்ல நடைமுறையை பொறுப்புடன் வகுத்து தந்துள்ளது. பெண்கள் எப்படி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை பாரம்பரிய பின்னணியுடன் வலியுறுத்துகிறது. அவை சாதாரணமாக பின்பற்றக்கூடியதாக சிறப்புடன் உள்ளது.
இல்லற இன்பம், குலதெய்வ வழிபாடு, நித்யகர்மா, முன்னோர் ஆசி, தர்மம், பாவங்கள் வராமல் இருக்க, திருமணத்தின் முக்கியத்துவம், உணவும் உபவாசமும், முதியோரை அவசியம் கவனிக்கவும் போன்ற தலைப்பு களில் தெளிவாக செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
இவை தவிர, பொதுவான அறிவுரைகள் என்ற தலைப்பில், பொது இடங்களிலும், குடும்பத்திலும் அடிப்படையாக பின்பற்ற வேண்டிய நடைமுறை, செய்யக்கூடாதவை என கருத்துகள் முத்து போல் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
பொருத்தமான பகுதிகளில் பழந்தமிழ் நுால்களில் உள்ள நீதி எடுத்தாளப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்தியும் அனுபவத்தின் சாரமாக, நல்வாழ்வுக்கு உகந்ததாக உள்ளன. நல்வழியில் நலமாக வாழ்வதற்கு வழிகாட்டும் நுால்.
– ஒளி