பொய்யாமொழி, ராஜலட்சுமி என்னும் இருவரை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ள சமூக நாவல். தென்னாட்டின் வேளாண் குடும்பம் படும் இன்னலை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அப்பா செய்த விவசாயத்தை, வேலம்மாள் என்னும் பெண் முன்னெடுத்துச் செல்வது புதுமை நோக்கினைக் காட்டுகிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக வழக்காடி விவசாயிகளுக்கு துணைபுரியும் சங்கரன் என எல்லாப் பாத்திரங்களையும் சமுதாய ஆர்வம் கொண்டோராகப் படைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மண்டலத்தின் காவிரி பிரசினை, ஆடிப்பெருக்கு முதலானவற்றை இணைத்து, கதைப்போக்கிற்குச் சுவை கூட்டியுள்ளார்.
வாழ்வில் காணும் உண்மைகளை அப்படியே நாவலாக்கி கற்பனையைக் கலக்காமல் படைத்திருக்கிறார். பாத்திரங்களுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் ஆசிரியரின் தமிழ்ப்பற்றினைக் காட்டுகின்றன. பெயருக்கு நாம் சொந்தமில்லை; குழந்தைகளின் பெயர்களுக்கு மட்டும் அல்லாமல், படைக்கும் பாத்திரப் பெயர்களுக்கும் நாம் தான் சொந்தம் என்பதை உணர்த்தியுள்ளார். வெறும் சமூக நாவலாக இல்லாமல், சமூகச் சீர்திருத்த நாவலாக விளங்குகிறது.
– முகிலை ராசபாண்டியன்